Published:Updated:

ஆங்கிலத்தில் கோரிக்கை... இந்தியில் பதில்? - அலுவல் மொழிச் சட்டத்தைச் சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய உள்துறைக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு, உள்துறை அமைச்சகம் இந்தியில் பதில் கடிதம் அனுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், `மத்திய ரிசர்வ் போலீஸ் படைத் துணை மருத்துவப் பணி நியமனங்களுக்கான தேர்வு மையங்களைத் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அமைக்க வேண்டும்' என்று கோரி சமீபத்தில் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்கு எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு நித்யானந்த ராய், இந்தியில் பதில் கடிதம் எழுதியிருக்கிறார். தனக்கு இந்தி தெரியாதென்பதால், தன்னால் அந்தக் கடிதத்தைப் படிக்க முடியவில்லை என்றும், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்களுக்கு பதில் அளிக்கும்போது, குறிப்பாக இந்தி பேசாத தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கும்போது, மத்திய அரசு ஆங்கிலத்தில்தான் பதில் வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும் நடைமுறையையும் மீறியிருப்ப்பதாக சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார். மத்திய அரசின் இந்தப் போக்குக்கு தி.மு.க கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்தியில் பதில் கடிதம் எழுதிய இணை அமைச்சர் நித்யானந்த ராய்க்கு, விதிமுறைகளை மீறியிருப்பதை, விதிகளை உதாரணம் காட்டி சு.வெங்கடேசன் பதில் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

பிரதமர்கள் வாக்குறுதி:

``1963-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் மீது, இந்தி அலுவலக மொழியாகத் திணிக்கப்பட்டது என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியிருந்தார்.

மொழிப் பிரச்னையின் மீது நாடு முழுவதும் விவாதம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கருத்தொற்றுமையின் காரணமாக, நேருவின் வாக்குறுதி வந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்புலத்தில், 1965-ம் ஆண்டு பிரதமராக இருந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியாலும் அதே வாக்குறுதி மீண்டும் வழங்கப்பட்டது. பின்னர், 1967-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் இது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்துக்கு விலக்கு:

இங்கு நான் 1976-ம் ஆண்டு அலுவல் மொழி விதிகள் (இந்திய ஒன்றியத்தின் அலுவல் தேவைகளின் பயன்பாட்டுக்காக) - (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது) ஆவணத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ``இந்த விதிகள், `அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டுக்குரியவை) விதிகள் 1976’ என்று அழைக்கப்படும். இவை இந்தியா முழுமைக்கும், தமிழ்நாடு மாநிலம் தவிர, பொருந்தும். ஒன்றிய அலுவல் மொழிச் சட்டத்திலிருந்து தமிழகம் விலக்கு பெற்றிருப்பதை இந்தச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மொழிப் பிரச்னையில் தனது நிலைப்பாட்டை அழுத்தமாக நிலைநிறுத்துவதில் தனித்துவமிக்க இடம் தமிழகத்துக்கு இருக்கிறது என்பதை நீங்க ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். மேற்கூறிய விதிவிலக்கு எங்கள் மாநிலத்துக்குத் தரப்பட்டதும் அதன் வெளிப்பாடேயாகும்” என்று கூறியிருந்தார்.

நித்யானந்த ராய் கடிதம்
நித்யானந்த ராய் கடிதம்
Twitter

மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கடிதம் எழுதும்போது, அந்தக் கடிதம் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்ற சி தொகுப்பு விதிகளைக் குறித்தும் விளக்கமாகத் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார். ``முந்தைய பிரதமர்கள் வழங்கிய உயர்வான உறுதிமொழியை, இன்று ஆட்சியில் உள்ளவர்களும் மதிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆழமான உணர்வு. அரசே சட்டத்தையும் நடைமுறையையும் மீண்டும் மீண்டும் மீறுவது மனதை வருத்துவதாகும். எனவே, தமிழகத்துக்கு வழங்கப்பட்ட தனித்துவமான உறுதிமொழிகளை மதித்து, அதன் சட்டரீதியான அம்சங்களை அமலாக்குமாறு வேண்டுகிறேன்.

சு.வெங்கடேசன் பதில் கடிதம்
சு.வெங்கடேசன் பதில் கடிதம்
Twitter
சு.வெங்கடேசன் பதில் கடிதம்
சு.வெங்கடேசன் பதில் கடிதம்
Twitter

தங்களின் அமைச்சக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தலைத் தந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதங்களுக்கு, முன்பு நடைமுறையிலிருந்ததுபோல, ஆங்கிலத்தில் பதில் தருவதை உறுதி செய்யும்படி வேண்டுகிறேன்" என்று தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்தக் கடித விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் தமிழக எம்.பி-க்களுக்கு, மத்திய அரசின் பல அமைச்சகங்கள் இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது மொழியாதிக்க - மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது’’ என்று விமர்சித்திருக்கிறார்.

மேலும், ``பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் அதையும் விடாமல் பிடித்துக்கொண்டு, இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய பா.ஜ.க அரசின் மொழிவெறிப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்துக்குத் தரப்பட்டிருக்கும் தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய பா.ஜ.க அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் இந்தப் போக்குக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பிவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு