Published:Updated:

ஐ.டி துறை கையில் சிக்கிய டைரி... சிக்கலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

ஐ.டி ரெய்டு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 45 இடங்களில் வருமான வரித்துறையினர் சத்தமில்லாமல் சோதனை நடத்திய விஷயம் தெரியவந்துள்ளது.

ஐ.டி துறை கையில் சிக்கிய டைரி... சிக்கலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 45 இடங்களில் வருமான வரித்துறையினர் சத்தமில்லாமல் சோதனை நடத்திய விஷயம் தெரியவந்துள்ளது.

Published:Updated:
ஐ.டி ரெய்டு

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் உச்சத்திலுள்ள நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திவரும் ரெய்டு தாக்குதலால், மிரண்டுகிடக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். என்னதான் நடக்கிறது?

கடந்த வாரம் திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகர், ம.தி.மு.க பிரமுகர் நாகராஜ் உள்ளிட் டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்களை அள்ளிச் சென்றார்கள். அதற்கு மறுதினமே கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் ஆறு பேர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இம்முறை ஆளுங்கட்சியினர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டால் ஆடிப்போனது அ.தி.மு.க முகாம்.

இப்படியான சூழலில்தான், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 45 இடங்களில் வருமான வரித்துறையினர் சத்தமில்லாமல் சோதனை நடத்திய விஷயம் தெரியவந்துள்ளது. ‘இந்தச் சோதனையில் சிக்கிய ஒரு டைரியால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவர் உட்பட ஆளுந் தரப்பினர் சிலர் கலக்கத்தில் இருக்கிறார்கள்’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் உலவுகிறது. இது குறித்து விவரமறிந்த வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள சீனிவாசன் என்பவர் வீட்டில், மார்ச் 19-ம் தேதி சோதனை நடத்தியிருக்கிறார்கள். சீனிவாசன் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம், ‘நான் சி.பி.ஐ-க்கு நெருக்கமானவன்’ என்று சொல்லியே லாபி செய்துவந்தவர். மேலும், சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக அரசு கையகப்படுத்தும் இடங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை இடத்தின் உரிமையாளர்களுக்கு வாங்கிக்கொடுக்கும் வேலையை அதிகாரிகள் துணையுடன் செய்துவந்திருக்கிறார். இதன் மூலம் பல கோடி ரூபாய் கமிஷனாகவும் கிடைத்துள்ளது.

இதற்காகவே திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்ட உயரதிகாரிகளுடன் சீனிவாசன் நெருக்கமாகப் பழகினார். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்ட உயரதிகாரிக்கு நெருக்கமான ஜெயபால் என்பவரும் சீனிவாசனும் கூட்டணி அமைத்து, பல கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகக் குவித்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரியின் கணவரையும் வளைத்த இந்த டீம், அந்த மாவட்டத்திலும் பெரும் தொகையைச் சுருட்டியிருக்கிறது” என்றவர்கள், இவர்களின் ‘சதுரங்க வேட்டை’ வித்தையையும் விவரித்தார்கள்.

“நிலத்தைக் கையகப்படுத்தியவுடன், சீனிவாசன் தரப்பு ஐடியாவின்படி முதலில் குறைவான தொகையை இழப்பீடாக அரசுத் தரப்பில் அறிவிப்பார்கள். பிறகு சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களைத் தன்னை நோக்கி வரவழைப்பார் சீனிவாசன். ‘நான் பேசி அதிக விலை வாங்கித் தருகிறேன்’ என்று அதே இடத்துக்கான இழப்பீட்டுத் தொகையை பல மடங்கு உயர்த்தி மறு உத்தரவு பிறப்பிக்கவைக்கும் சீனிவாசன் தரப்பு. இதற்குக் கோடிகளில் கமிஷன் தொகை விளையாடியிருக்கிறது.

முதல்வர் அலுவலகத்திலுள்ள ‘கிரிவல’ அதிகாரியும் சீனிவாசனுக்கு உடந்தை. முதல்வர் அலுவலகம், மாவட்ட அதிகாரிகள் எனப் பலரின் கண் அசைவுகளோடு, கடந்த ஓராண்டில் மட்டும் இப்படி நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கமிஷனாகக் குவித்திருக்கிறது சீனிவாசன் தரப்பு. இந்தநிலையில்தான், அமைச்சர் ஒருவருக்குத் தேர்தல் செலவுக்குப் பணம் வழங்க சீனிவாசன் தயாராகியிருந்த நேரத்தில், கடலூரில் நடந்த வருமானவரி சோதனையில் கிடைத்த ஆவணங்களில் அவரது பெயரும் இடம்பெற... அதைவைத்து ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள்.

ஐ.டி துறை கையில் சிக்கிய டைரி... சிக்கலில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

சீனிவாசனின் வீட்டுக்குள் வருமான வரித்துறையினர் நுழைந்தபோது, அங்கிருந்த டைரி ஒன்றையும் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் ஜெயபால், சர்வேயர் ஒருவர், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பலருக்கும் பணம் கொடுத்த பட்டியல் இருந்துள்ளது. அதோடு, அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவரின் உறவினரும் இதில் கோடிகளில் விளையாடியிருப்பதை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட அனைவரின் தொடர்புகளையும் அறிய, சீனிவாசனை வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இவர்கள் தவிர, தெற்கு ரயில்வே யூனியன் தலைவர் கண்ணையாவின் வீடு, அவரின் மகன் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினுக்கு ஆதரவாக கண்ணையா தரப்பு களத்தில் சில வேலைகள் செய்துவந்ததாக வந்த தகவலை அடுத்து இந்த ரெய்டு நடந்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் முக்கிய நகரங்களிலுள்ள சில தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், கட்டட ஒப்பந்ததாரர்களின் வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்துவருகிறது. திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோதே, எ.வ.வேலுக்குச் சொந்தமான கல்லூரி, அலுவலகம், வீடு என ரெய்டு நடத்தி, தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தது வருமான வரித்துறை.

வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “டெல்லியிலிருந்து வந்த உத்தரவுப்படி ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு எனப் பாரபட்சம் இல்லாமல் ரெய்டு நடத்தியிருக்கிறோம். டெல்லியிலிருந்து ஒரு ஸ்பெஷல் டீமும் களத்தில் இறங்கியுள்ளது. விரைவில் ரெய்டு விவரங்கள் குறித்த முழுப் பட்டியல் வெளியாகும்’’ என்றார்கள்.

வளைத்து வளைத்து வருமான வரித்துறை நடத்தும் ஆக்‌ஷனில் அரண்டுகிடக்கிறது தமிழக அரசியல் களம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனிவாசனின் பலே டெக்னிக்!

கடந்த 2020-ம் ஆண்டு திருவள்ளூர் தாலுகா பந்தூர் கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட (வரிசை எண் 519/3B1A2) நிலத்துக்கு ஒரு சதுர அடிக்கு 6.89 ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகை, 795 ரூபாயாக உயர்த்தப்பட்டு மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதாவது, ஒரு சதுர மீட்டருக்கான இழப்பீட்டுத் தொகை 74.10 ரூபாயிலிருந்து 8,554 ரூபாயாக உயர்த்தி, ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன் நிலத்தைக் கையகப்படுத்திய நாளிலிருந்து வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1965 பிரிவு 3D-ன்படி உத்தரவிடப்படுகிறது. இப்படித் தொகையை உயர்த்துவதற்காகத்தான் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து கமிஷனாகப் பெரும் தொகையைக் கறந்துள்ளது சீனிவாசன் டீம்.