Published:Updated:

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு: குவிக்கப்பட்ட போலீஸ், அடுத்தடுத்த சோதனை! கரூரில் பரபரப்பு

சோதனை
சோதனை ( நா.ராஜமுருகன் )

கரூரிலுள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்கள், அவரின் சகோதரர் வீடு, நிறுவனங்கள் எனச் சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகம் என 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்துவருகிறது.

சோதனை
சோதனை
நா.ராஜமுருகன்
`கோச்சுக்காதீங்க... பள்ளியில் இடமில்ல!' - மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கிக் குவித்ததாக, எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று காலை முதல் ரெய்டு நடந்துவருகிறது. கரூரிலுள்ள அவரின் வீடு, தொழில் நிறுவனங்கள், அவரின் சகோதரர் வீடு, நிறுவனங்கள் எனச் சுமார் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த திடீர் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ரெயின்போ நகர் சாயப்பட்டறையில் மட்டும் இரண்டு டி.எஸ்.பி-க்கள், இரண்டு காவல் ஆய்வாளர்கள் என 22 பேர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

க.பரமத்தி அருகேயுள்ள தென்னிலை ரெயின்போ கல்குவாரி, கரூர் ஆண்டான்கோயில் கீழ்பாகம் கிராமத்திலுள்ள ரெயின்போ சாயப்பட்டறையில் - 2 குழுக்கள், சின்ன ஆண்டான்கோயில் ரெயின்போ அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை, ரெட்டிபாளையம் ரெயின்போ தறிப்பட்டறையில் - 2 குழுக்கள், மதுரை சாலையிலுள்ள ஆட்டையம்பரப்பு பகுதியில் வசிக்கும் நில புரேக்கர் சேகர் வீடு, உப்பிடமங்கலம் பகுதியிலுள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் ரமேஷ் வீடு, கரூர் செங்குந்தபுரத்திலுள்ள விஜயபாஸ்கரின் மற்றோர் உதவியாளர் கார்த்தி வீடு, முன்னாள் அமைச்சரின் ஆதரவாளரான கோடங்கிபட்டி ஏகாம்பரம் வீடு, முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் பரமசிவம் வீடு, விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மனைவியும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவருமான சாந்தி சேகர் வீடு, கரூர் செல்வ நகரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை வீடு, சென்னையிலுள்ள வீடு உள்ளிட்ட 21 இடங்களில் தொடர் சோதனை நடந்துவருகிறது.

இந்தநிலையில், அங்கு மதியம் 12 மணியளவில் ஆண்டாங்கோயில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை வரவழைத்து சோதனையில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள், அவர்களைப் புதிய நில ஆவணங்களை எடுத்து வரச் சொன்னார்கள். அவர்களும் அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துவந்தனர். இதற்கு அங்கு கூடியிருந்த அ.தி.மு.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆவணங்களைக் காட்டிவிட்டு உள்ளே எடுத்துச் செல்லுமாறு கூச்சலிட்டனர். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அ.தி.மு.க-வினருடன் சிக்கிகொண்ட வருவாய்த்துறை அதிகாரிகளை மீட்டு உள்ளே அழைத்துச் சென்றனர்.

சோதனை
சோதனை
நா.ராஜமுருகன்

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில். இப்படி நடந்துவரும் தொடர் சோதனையால், ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் சோதனை நடைபெறும் இடங்களில் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால், சோதனை நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த சோதனையில் பெரிதாக எந்த ஆவணமும் பணமும் சிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், சென்னை தாம்பரத்திலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உதவியாளர் பாலச்சந்தர், கரூரிலுள்ள விஜயபாஸ்கரின் மைத்துனர் வேலுசாமி ஆகியோரின் வீடுகளில் புதிதாக இரண்டு குழுக்கள் சோதனையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சோதனை குறித்து நம்மிடம் பேசிய விவரறிந்த சிலர்,

``இந்த ரெய்டின் பின்னே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைங்கர்யம் இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த தேர்தலுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்மீது, ஆயிரக்கணக்கான கோடி ஊழல் புகாரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சுமத்தினார். அதோடு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர, செந்தில் பாலாஜி ஆவணங்களை எடுத்துவருவதாகத் தெரிவித்தார். அவர் சொன்னதுபோலவே செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் குவித்த சொத்துகளின் ஆவணங்கள் என்று தினம் ஒரு பத்திர ஆவணத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இப்படி, 15 ஆவணங்கள் வரை வெளியிட்டார். அப்போதே, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கிலி ஏற்பட்டது. இந்தநிலையில், தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது. செந்தில் பாலாஜியின் தலையீடு இல்லாமல் இந்த ரெய்டு நடக்க வாய்ப்பில்லை.

சோதனை
சோதனை
நா.ராஜமுருகன்

செந்தில் பாலாஜி மீது, அவர் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக சிலரை ஏமாற்றிப் பணம் வாங்கியதாக சொல்லப்பட்ட விஷயத்தைவைத்து, கடந்த ஆட்சியில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை தீவிரமாக்கியது, கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்தான் என்று செந்தில் பாலாஜி கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த வழக்கு, தற்போது தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி பதவிக்கு வேட்டுவைக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள். கடந்த 15-ம் தேதிகூட அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்குத் தீர்ப்பு பாதகமாக வந்தால், அவரது பதவிக்கு ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது. அதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பழிதீர்க்க, லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டிருக்கிறார் என்று பரலவலாகப் பேசிக்கொள்கிறார்கள்" என்றார்கள்.

இதுகுறித்து, செந்தில் பாலாஜி தரப்பில் சிலரிடம் பேசினோம்.

``அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கியதாகப் புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு செய்கிறார்கள். இதற்கும் அண்ணனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் இருக்கிறார். இந்தச் சோதனை குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்,ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து இந்த ரெய்டு தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு