Published:Updated:

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

வீரமணியின் பல்வேறு சொத்துகள் முதல் மனைவியின் தந்தை பெயரிலும், இரண்டாவது மனைவியின் பெயரிலும் இருக்கின்றன.

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

வீரமணியின் பல்வேறு சொத்துகள் முதல் மனைவியின் தந்தை பெயரிலும், இரண்டாவது மனைவியின் பெயரிலும் இருக்கின்றன.

Published:Updated:
ரெய்டு
பிரீமியம் ஸ்டோரி
ரெய்டு

கரூரில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் தொடங்கிய ரெய்டு புயல், கொங்கு மண்டலத்தில் வேலுமணியை ஒரு கை பார்த்துவிட்டு, வடக்கு மண்டலத்தில் ராஜாங்கம் செய்த வீரமணியிடம் மையம்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்தப் புயல் வலுவடைந்து ஊழல் மாஜிக்களை துவம்சம் செய்யுமா அல்லது வலுவிழந்து கரையைக் கடக்குமா என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்!

‘அ.தி.மு.க ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, 01.04.2016 முதல் 31.03.2021 வரை 28.78 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்திருக்கிறார்’ என்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செப்டம்பர் 15-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

தொடர்ந்து, செப்டம்பர் 16-ம் தேதி காலை வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில், ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல குழுக்களாகப் பிரிந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர். சென்னையில் நான்கு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்தது. வேலூரில் நான்கு இடங்கள், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஓர் இடம், திருப்பத்தூர் மாவட்டத்தில் 15 இடங்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இரண்டு இடங்கள், கிருஷ்ணகிரி, பெங்களூரு என சோதனை நீண்டது. நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு நகைகள் மதிப்பிடப்பட்டன.

இதில், வீரமணியின் சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் காந்தி ரோடு மற்றும் பார்த்தசாரதி தெருவிலுள்ள அவரது இரண்டு வீடுகளுக்கும், அவருக்குச் சொந்தமான ஆர்.எஸ்.மஹால் திருமண மண்டபத்துக்குமாக இனோவா காரில் வீரமணியை அமரவைத்துக்கொண்டு இங்கும் அங்குமாக விரைந்தனர் போலீஸார். தகவலறிந்த அ.தி.மு.க-வினர் வீரமணியின் வீட்டுக்கு முன்பாகக் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்த சன் டி.வி செய்தியாளர் குமரேசனை அவர்கள் சரமாரியாகத் தாக்கினார்கள். போலீஸார் படாதபாடுபட்டு செய்தியாளரை மீட்க வேண்டியதாயிற்று.

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

சோதனை குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வீரமணியின் பல்வேறு சொத்துகள் முதல் மனைவியின் தந்தை பெயரிலும், இரண்டாவது மனைவியின் பெயரிலும் இருக்கின்றன. திருமண மண்டபம், ஹோட்டல் பிசினஸில் வீரமணிக்கு ஆர்வம் அதிகம். ஏலகிரி மலை, திருப்பத்தூர், ஓசூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் ஹைடெக்காக மூன்று ஹோட்டல்களை நடத்திவருகிறார். பேரணாம்பட்டில் வேளாண் கல்லூரி நடத்துகிறார். இந்த அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறோம். இவை தவிர உதவியாளர்கள், பினாமிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளிலும் அலசியிருக்கிறோம்.

வீரமணியின் பினாமிகளாகக் கருதப்படும் ஆந்திராவைச் சேர்ந்த இருவர் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்களைச் சோதனையிடச் சென்றபோது, ஒருவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குத் தப்பிச்சென்றுவிட்டார். அவரது வீட்டுக்கு ‘சீல்’ வைத்திருக்கிறோம். வீரமணி இரண்டாவது முறையாக அமைச்சராக இருந்த காலத்தில்தான் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அவற்றைத் தன் பெயரிலும், தன் தாயார் பெயரிலும்தான் பத்திரப்பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் வருமானத்துக்கு அதிகமாக 654 சதவிகித அளவுக்கு அவர் சொத்துகளைச் சேர்த்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் பட்சத்தில் வீரமணிக்கு சிறைத் தண்டனை நிச்சயம்’’ என்றார்.

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

அதேசமயம் வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரோ, ‘‘நாங்கள் செய்துவரும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த ரெய்டை நடத்தியிருக்கிறது தி.மு.க அரசு. சமீபத்தில் ஆம்பூர் தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதனைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். வாணியம்பாடியில் இஸ்லாமியப் பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். வேலூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் வடக்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மூடிமறைத்து, திசைதிருப்பவே வீரமணி விவகாரத்தைக் கையிலெடுத்துள்ளனர். இதனாலெல்லாம் ஊரகத் தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்க முடியாது’’ என்றனர்.

****

ஹைடெக் ஹோட்டல்கள்... வெளிநாடுகளில் சொத்துகள்... கே.சி.வீரமணியை மையம் கொண்ட ரெய்டு புயல்!

237 கேள்விகள் ரெடி!

மேற்கண்ட விவகாரத்தில் புகாரைத் தாண்டி கே.சி.வீரமணி தொடர்புடைய மொத்த ஆவணங்களையும் ஆராய்ந்ததில், வருமானத்துக்கு அதிகமாக 457 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்திருப்பது தெரிந்திருக்கிறது. அந்த சொத்துகளெல்லாம் தனது நிறுவனங்கள் மூலமாக, சம்பாதித்தது என்று கூறியிருக்கிறார் வீரமணி. ஆனால், அந்த வருமானம் வந்த வழிகளை ஆராய்ந்தால் அவையெல்லாம் போலி என்பது தெரிந்ததாம். இன்னொரு பக்கம் வீரமணி தொடர்புடைய சில விவகாரங்கள், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் வழி ஏற்படுத்தியிருக்கின்றன என்கிறார்கள். அந்த வகையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தால் வீரமணிக்குக் கூடுதல் சிக்கல் ஏற்படும். இதற்கிடையே அடுத்தடுத்த விசாரணைகளின்போது வீரமணியிடம் கேட்பதற்காக 237 கேள்விகளும் தயார் நிலையில் இருக்கின்றனவாம்.