Published:Updated:

"எங்கள் பாட்டியின் உயில்போதும், நாங்கள் ஜெயிப்பதற்கு!"- ஜெ.தீபாவால் வலுக்கும் வேதா இல்ல சர்ச்சை! #VikatanExclusive

 ஜெ.தீபா
ஜெ.தீபா

``எங்கள் அத்தை ஒன்றும் அனாதையல்ல. அவரின் வாரிசுகளாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் உரிமையை நாங்கள் கேட்கிறோம். இதைத் தரமறுப்பது அநீதி...”, ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கி அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அவரின் அண்ணன் மகளான ஜெ.தீபா.

போயஸ் கார்டன் என்று சொன்னாலே, ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லமும் அதன் பிரமாண்ட கறுப்பு நிற இரும்புக் கதவுகளும்தான் பெரும்பாலானோருக்கு ஞாபகம் வரும். ஜெயலலிதா இருந்தவரையில் அதிகாரச் சின்னமாக விளங்கிய வேதா நிலையம் அவர் மறைவுக்குப் பிறகும் தனக்கான இருப்பை தமிழக அரசியலில் தக்கவைத்துள்ளது. வேதா நிலையத்தில் ஜெயலலிதாவுடன் வசித்து வந்த சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, சசிகலாவின் உறவுகள்தான் இந்த இல்லத்தைப் பராமரித்து வந்தார்கள்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் இல்லம்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், ஆகஸ்ட் 2017-ல் மீண்டும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கைகோத்தார். இதில் ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளின் வெளிப்பாடாக, ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்றப்போவதாக ஆகஸ்ட் 17-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு அப்போதைய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், வீட்டின் மதிப்பு, நினைவில்லமாக மாற்றும்போது காட்சிப்படுத்தும் இடங்கள், மக்கள் வந்து செல்லும் பாதை ஆகியவைக் குறித்து ஆய்வு செய்தனர்.

`ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் யார்?!' - சசிகலா விளக்கத்தால் கொந்தளித்த ஜெ.தீபா
எங்களுடனான உறவை முறித்துக்கொள்ள ஜெயலலிதா எப்போதுமே விரும்பியதில்லை. நமது நாட்டுச் சட்டப்படி, அவர் மறைந்த ஓரிரு மாதங்களிலேயே அவரின் சொத்துகளை உரிய வாரிசுதாரர்களான எங்களிடம் அரசு ஒப்படைத்திருக்க வேண்டும்.
ஜெ.தீபா

ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் சொத்துகளை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பராமரிக்க வேண்டும் என்று சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் என்பவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம், இச்சொத்துகளை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளான தங்களுக்கே வழங்க வேண்டுமென ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நிர்வகிக்க `புரட்சித் தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்வரும், உறுப்பினர்களாக துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகளும் இருப்பார்கள். அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளராகச் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 மாதமே உள்ள நிலையில், வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கையை அரசு வேகப்படுத்தியுள்ளது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா கடும் எதிர்ப்பு தெரித்துள்ளார். அரசின் நடவடிக்கையை நிறுத்தச் சொல்லி, ஆளுநருக்கு அ.தி.மு.க தொண்டர்கள் கடிதம் எழுத வேண்டுமென்று அவர் கோரியுள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

அவரின் இல்லத்தையோ அவரின் பொருள்களைத் தொடுவதற்கு இவர்கள் யார்? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரின் செருப்பையாவது இவர்களால் தொட்டிருக்க முடியுமா?
ஜெ.தீபா

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளார்களே?

வேதா நிலையம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்த இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நினைவில்லமாக மாற்றப்படும் என அரசு அறிவித்தபோதே நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். இவ்வழக்கில் கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளரை இரண்டு முறை சந்தித்து, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் நானும் தீபக்கும்தான் என்பதற்கான ஆதாரங்களை அளித்தேன். அதற்குப் பிறகு அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கோ, நீதிமன்றத்திற்கோ எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

ஜெ.தீபா
ஜெ.தீபா

வேதா நிலையம் தொடர்பாகத் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. இவ்வழக்கின் தீர்ப்பும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அவசர அவசரமாக வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இந்த வழக்கு விசாரணையின்போது, `ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களுக்கு ஏன் நோட்டீஸ் வழங்கவில்லை?' என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. `யாரைச் சொல்கிறீர்கள்?’ என அரசு வழக்கறிஞர் கேட்டபோது, என்னையும் தீபக்கையும் சுட்டிக் காட்டி `இவர்கள்தானே சட்டப்படி வாரிசுதாரர்கள்’ என நீதிபதிகள் கூறினர். அப்போதே, இவ்வழக்கில் எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நீதிமன்றம் உணர்ந்துவிட்டது. வழக்கில் தோல்வியடைந்து விடுவோம் என்கிற பதற்றத்தில்தான் தற்போது அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது.

அரசு நினைத்தால் எந்தச் சொத்தையும் எடுத்துக்கொள்ள முடியுமே... இது வேதா நிலையத்துக்கு மட்டும் எப்படிப் பொருந்தாது?

பொதுவாழ்வில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குடும்பம் இருக்கக் கூடாதா? அத்தை ஜெயலலிதாவோடு நாங்கள் நெருங்கிய தொடர்பில்தான் இருந்தோம். பிற்பாடு சிலர் ஏற்படுத்திய தடைகளால் நாங்கள் விலகியிருக்க வேண்டியதாகியது. அப்போதுகூட, எங்கள் வீட்டுக்கு கார், ஆள் அனுப்பி எங்களோடு ஜெயலலிதா தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார். இந்த உறவை முறித்துக்கொள்ள அவர் எப்போதுமே விரும்பியதில்லை. நமது நாட்டுச் சட்டப்படி, அவர் மறைந்த ஓரிரு மாதங்களிலேயே அவரின் சொத்துக்களை உரிய வாரிசுதாரர்களான எங்களிடம் அரசு ஒப்படைத்திருக்க வேண்டும்.

வேதா நிலையம் இல்லம்
வேதா நிலையம் இல்லம்

அடுத்தவர்கள் சொத்தையா கேட்கிறோம். எங்களுக்கு உரிமையுள்ள எங்கள் அத்தையின் சொத்தைதானே கேட்கிறோம். ஜெயலலிதாவின் அம்மாவும் எங்கள் பாட்டியுமான சந்தியாவின் சொத்து உயிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். அதில், `இந்த வேதா நிலையம் வீடு அப்படியே இருக்க வேண்டும். எனது சந்ததிகள்தான் இந்த வீட்டில் வசிக்க வேண்டும்’ எனத் தெளிவாக அவர் கூறியுள்ளார். இந்த உயில் ஒன்று போதும் நீதிமன்றத்தில் நாங்கள் ஜெயிப்பதற்கு. இதைப் புரிந்துகொண்டுதான் அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள் இல்லாமல், வேதா நிலையத்திற்குள் உள்ளே உள்ள பொருள்களை அரசால் எப்படி எடுக்க முடியும்? வாரிசுதாரர்கள் என நிரூபித்தால் எங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக சட்டத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நான் கேட்கிறேன், ரத்தமும் சதையுமாக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் எப்படி இறந்தார்? இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் பிறகு இழப்பீட்டை நான் பெற்றுக்கொள்கிறேன்.

Vikatan
சசிகலாவின் காலில் இவர்கள் வேண்டுமானால் அடிமைகளாக விழுந்திருக்கலாம். எங்களுக்கு அப்படி எந்த நிலையும் இல்லை.
ஜெ.தீபா

ஜெயலலிதாவை ஒரு அனாதையாகக் காட்ட இந்த அரசு முயல்கிறது. இதை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். அவருக்கு வாரிசுகளாக நாங்கள் இருக்கிறோம். அவரின் இல்லத்தையோ அவரின் பொருள்களையோ தொடுவதற்கு இவர்கள் யார்? ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரின் செருப்பையாவது இவர்களால் தொட்டிருக்க முடியுமா? இன்று சபதமிட்டுச் சொல்கிறேன், வேதா இல்லத்தைத் தொட்டால், எந்தக் காலத்திலும் எந்தத் தேர்தலிலும் இவர்களால் ஜெயிக்கவே முடியாது. அதற்கு நான் முழுமூச்சாகச் செயல்படுவேன் என எச்சரிக்கிறேன்.

சசிகலா
சசிகலா

போயஸ் கார்டன் இல்லத்திற்குள் சசிகலா வந்துவிடுவார் என்பதால்தான் அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறதே?

அதைப் பற்றி அரசுக்கு என்ன கவலை. எங்கள் சொத்தை எங்களிடம் தாருங்கள், சசிகலா எப்படி போயஸ் கார்டனுக்குள் வருகிறார் என நான் பார்க்கிறேன். குடிசையோ, மாளிகையோ அவரவர் வீட்டைப் பாதுகாக்க அவரவருக்குத் தெரியும். சசிகலாவின் காலில் இவர்கள் வேண்டுமானால் விழுந்திருக்கலாம். எங்களுக்கு அப்படி எந்த நிலையும் இல்லை. எங்களிடம் வேதா நிலையம் ஒப்படைக்கப்பட்டால், நிச்சயமாக அந்தத் துரோக குடும்பத்தை மீண்டும் உள்ளே அனுமதிக்க மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்.

உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

நீதிமன்றம் மூலமாக முறையான அனுமதி பெற்று வேதா நிலையத்திற்குள் வர வேண்டும் என்றிருந்தோம். இப்போது அரசு எங்களை சிக்கலான முடிவுகளை எடுக்க நிர்பந்தப்படுத்திவிட்டது. அரசின் முடிவை எதிர்த்து ஆளுநருக்கு அ.தி.மு.க தொண்டர்கள் கடிதம் எழுதக் கோரியுள்ளேன். ஆளுநரிடம் மனு அளிக்கவும் உள்ளேன். ஜெயலலிதாவின் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் துரோகிகளின் முயற்சிக்கு அ.தி.மு.க தொண்டர்கள்தான் உரிய பதிலடி தர வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு தடைகோரி இன்னும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தை நாடவுள்ளேன்.

ஜெ.தீபா
ஜெ.தீபா

இச்சூழல், உங்களை மீண்டும் அரசியல் பாதைக்குள் இழுத்து வருமா?

அதுதான் இழுத்துவிட்டார்களே! அத்தை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள்தான் என் வீடு தேடி வந்து என்னை அரசியல் பாதைக்குள் வரவழைத்தார்கள். அதேபோன்றதொரு நிலைதான் இன்றும் உள்ளது. நான் அமைதியாக இருக்கத்தான் விரும்புகிறேன். என் நியாயத்தைதான் கேட்கிறேன். போயஸ் கார்டன் இல்லத்தின் மீது அரசு கைவைத்தால், அதற்கான எதிர்வினையை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு