Published:Updated:

`இந்தத் தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை; சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்!’ - ஜெ. தீபா

ஜெ., அண்ணன் மகள் தீபா
ஜெ., அண்ணன் மகள் தீபா

செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, `உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்களே எதிர்ப்பார்க்கவில்லை’ என்றார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பை நிர்வகிக்க, தனி நிர்வாகியைப் போட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி, கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் வாரிசுகளாக எங்களை அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் வழங்க வேண்டும் என்றும் கூறி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 27-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ``ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் உரிமை உள்ளது. இருவருமே இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள். அவரின் சொத்துகளில் ஒரு பகுதியைக்கொண்டு அறக்கட்டளையைத் தொடங்கலாம். இவை தொடர்பாக, தமிழக அரசு எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்து அறிவித்தது.

`தீபா, தீபக் 2-ம் நிலை வாரிசுகள்; நினைவு இல்ல யோசனை!’-ஜெயலலிதா சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் விசாரணையின்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே தீபா, தீபக் ஆகியோரை 2-ம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

ஜெ. அண்ணன் மகள் தீபா
ஜெ. அண்ணன் மகள் தீபா

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ. தீபா, `உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை’ என்றார். மேலும் பேசிய அவர், `` நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை அ.தி.மு.க-வினர் ஏற்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லம் செல்ல மாட்டேன்.

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தை அரசியல் ஆக்க சிலர் முயற்சி செய்கின்றனர். என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர் கொள்ள நான் தயாராக உள்ளேன்.

ஜெயலலிதா லெஜென்ட்; படம் எடுக்கும் முன் எங்களிடம் கேட்க வேண்டாமா?'- கொதிக்கும் தீபா உறவுகள்

அ.தி.மு.க-வினருக்கு எதிராக நான் கேள்வி எழுப்புவதால் அவர்கள் என்னை குறிவைக்கிறார்கள். எங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார். மேலும், அவர் வேதா இல்லம் தொடர்பான மாநில அரசின் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்றும் தெரிவித்தார்,

அடுத்த கட்டுரைக்கு