Published:Updated:

`செக் வைத்த சந்திரபாபு நாயுடு.. காலியான ஒய்.எஸ்.ஆர் கான்செப்ட்!'- பலிக்காத ஜெகனின் `மேலவை' கணக்கு

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டமேலவையைக் கலைக்க ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

ஆந்திர அரசியல் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி தான் நினைத்தை எல்லாம் செயலாக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த அமராவதி திட்டத்துக்கு தடா, மூன்று தலைநகரங்கள் பிராஜெக்ட் எனப் பழிவாங்கும் படலத்தில் வெரைட்டி காட்டுகிறார் ஜெகன். ஜெகனின் ஆரம்பகால அதிரடிகளை எதிர்பாராத சந்திரபாபு நாயுடு என் அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆளைப் பார்த்ததில்லை என புலம்பித் தள்ளினார். இந்த நிலையில்தான், ஜெகன் தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவை, அம்மாநில சட்ட மேலவையை கலைக்கும் தீர்மானத்துக்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தீர்மானம்
தீர்மானம்

ஆந்திர சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்ட மேலவையின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அதைச் செயல்படுத்த முடியும். இந்த சட்ட மேலவை கான்செப்ட்டைக் கொண்டு வந்தது ஜெகனின் தந்தை ராஜசேகர ரெட்டி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்தபோது ராஜசேகர ரெட்டி சட்டமேலவை கான்செப்ட்டைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் சட்டமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்களுக்கு சட்டமேலவை மூலம் சிக்கலைக் கொடுக்கலாம் என்ற நோக்கத்தில்தான் கொண்டு வரப்பட்டது. இது இப்போது ஜெகனுக்கு எதிராக முடிந்துவிட்டது. அமராவதி திட்டம் ரத்து, மூன்று தலைநகரங்களை உருவாக்குதல் மசோதா ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட மேலவைக்கு அனுப்பப்பட்டது.

`எந்த மாநிலத்துக்கும் மூன்று தலைநகரங்கள் இருந்தது இல்லை!’ - ஜெகன் ஆந்திராவின் நீரோவா.. ஹீரோவா?

ஆந்திர சட்டப்பேரவையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதால் இங்கு மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால், ஆந்திர சட்டமேலவையில் ஜெகனுக்கு சிக்கல் ஏற்பட்டது. 58 உறுப்பினர்களைக்கொண்ட ஆந்திர சட்டமேலவையில் தெலுங்கு தேசம் கட்சிக்குதான் பெரும்பான்மை உள்ளது.

இதனால் இந்த மசோதா உடனடியாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது ஜெகனுக்கும் தெரியும். சட்டமேலவை நிராகரித்தால் மீண்டும் சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்து மேலவைக்கு அனுப்பலாம். இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டாலும் மசோதா நிறைவேறியதாகவே கருதப்படும் என்பது ஜெகனின் கணக்காக இருந்தது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆனால், சட்டமேலவைத் தலைவராக உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் மசோதாவை நிராகரிக்காமல் சிறப்புக் குழுவுக்கு அனுப்பினார். தெலுங்கு தேசம் கட்சி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மேலவைத் தலைவர் தனக்கு இருக்கும் விதி 154-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறப்புக் குழுவுக்கு அனுப்பினார். சிறப்புக் குழு இதுகுறித்து பரிசீலித்து திரும்ப அனுப்ப நாள்களாகும். இந்த மசோதாக்கள் மட்டுமல்லாமல் எதிர்வரும் காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்களுக்கு இந்த சட்டமேலவையால் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த ஜெகன் சட்டமேலவையை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய ஜெகன், ``அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படும் ஓர் அமைப்பு தேவைதானா என்று நாம் சிந்திக்க வேண்டும். மேல்சபையை வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமல்ல. மக்கள் நலனுக்காக நல்ல முடிவுகளை எடுக்கவும் சட்டங்களை இயற்றவும் மேல்சபை அனுமதிக்காவிட்டால், அந்த ஆட்சி மக்களுக்கானதா. மேலவைக்காக ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், மக்களின் பணத்தால் செயல்படும் மேலவை, மக்கள் நலத் திட்டங்களைத் தடுக்கிறது" எனக் கொதித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மசோதாவாகத் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மத்திய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சட்டமேலவை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின் செல்ல