Published:Updated:

ஒரத்தநாடு: அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; இன்ஸ்பெக்டர்மீது குற்றச்சாட்டு! - என்ன நடந்தது?

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

`ஊரிலேயே அரசியல்ரீதியாக இரண்டு தரப்பாகச் செயல்படுகின்றனர். இதனால் பிரச்னையைப் பெரிதாக்குவதற்காக போலீஸ் மீது புகார் கூறிவருகின்றனர்’ என்கிறார் இன்ஸ்பெக்டர்.

ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமம் ஒன்றில் போலீஸாரிடம் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. அதற்காக, லோடு ஆட்டோ டிரைவர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பணம் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்ததாக இன்ஸ்பெக்டர்மீது புகார் எழுந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

காயமடைந்த பிராபகரன்
காயமடைந்த பிராபகரன்

இது குறித்து அந்தப் பகுதியினர் சிலரிடம் பேசினோம். ``ஒரத்தநாடு அருகேயுள்ளது தளிகைவிடுதி என்ற கிராமம். இங்கு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஏராளமான பொதுமக்களும் திரண்டனர்.

வாடிவாசலிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளை ஒன்று தெருவுக்குள் ஓடியது. அப்போது வீட்டிலிருந்து வாழைக் கொல்லைக்குச் சென்ற பிரபாகரன் என்ற இளைஞரை மாடு முட்டியது. இதில் பலத்த காயமடைந்த பிராபாகரன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மலையகத் தந்தையின் பேரன்; ஜல்லிக்கட்டு ரசிகன்... யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்?

இந்தநிலையில், உரிய அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியதால் ஊர்த் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது திருவோணம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்த ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர்கள் மூன்று பேர் மற்றும் காளைகளை ஏற்றிவந்த வந்த லோடு ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேர் என மொத்தம் எட்டுப் பேரை போலீஸார் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஒரத்தநாடு மற்றும் திருவோணம் காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டரான சுப்பிரமணியன் விசாரணை செய்ததோடு, அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து டிரைவர்கள், லோடு ஆட்டோக்கள் ஆகியவற்றை விடுவித்தார். இதற்காக அவர் பணம் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இன்ஸ்பெக்டர் மீது புகார் எழுவதற்குக் காரணமான ஜல்லிக்கட்டு
இன்ஸ்பெக்டர் மீது புகார் எழுவதற்குக் காரணமான ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்யும்போதே போலீஸாருக்கு எப்படித் தெரியாமல் போனது... போட்டி தொடங்கிய பிறகு பப்ளிக் ஒருவர் போன் செய்து விஷயத்தைத் தெரிவித்த பிறகே போலீஸார் சம்பவ இடத்துக்கு வருகின்றனர். இதனால் அப்பாவி இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே இளைஞரின் அப்பா தனபால் சர்க்கரைநோய் பிரச்னையால் கால் ஒன்று அகற்றப்பட்ட நிலையில், படுத்த படுக்கையாக இருக்கிறார். பிரபாகரன்தான் விவசாயம் உள்ளிட்டவற்றை கவனித்துவந்தார். இந்தநிலையில் அவரும் மாடு முட்டியதில் பாதிக்கப்பட்டிருக்கிறார். விதிக்குப் புறம்பான செயல்களைத் தடுப்பதில் இந்தப் பகுதி போலீஸார் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். அதனாலேயே எந்த பயமும் இல்லாமல், அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

பாதிப்பு ஒரு பக்கம் இருக்க, விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் விடுவித்தாகவும், சிலர் `ஏன் விட்டீர்கள்?’ எனக் கேட்டதற்கு `ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விடச் சொன்னார். அதனால் விட்டுவிட்டேன்’ எனக் கூறியிருக்கிறார். இதை சம்பந்தப்பட்ட போலீஸ் வட்டாரத்திலேயே பேசிவருகின்றனர். தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் இதில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்” என்றனர்.

இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனிடம் பேசினோம், `எங்களிடம் அனுமதி பெறாமலேயே ஏற்பாடு செய்து போட்டியை நடத்தியிருக்கிறார்கள். ஊரைச் சேர்ந்த ஒருவர் போன் செய்த பிறகு சம்பவ இடத்துக்குச் சென்றோம். ஆனால் அதற்குள் போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஓடிவிட்டனர். ஊர்த் தலைவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்திருக்கிறோம். போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்களை மந்தைக்குச் செல்வதற்கு முன் மடக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றதுடன், எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பிவைத்தேன். டீ குடிக்கக்கூட அவர்களிடம் காசு இல்லாத நிலையில், நான் பணம் வாங்கிக்கொண்டு விடுவித்தேன் எனச் சொல்வது தவறான தகவல்.

ஜல்லிக்கட்டு போட்டி
ஜல்லிக்கட்டு போட்டி

ஊரிலேயே அரசியல்ரீதியாக இரண்டு தரப்பாகச் செயல்படுகின்றனர். இதனால் பிரச்னையைப் பெரிதாக்குவதற்காக போலீஸ் மீது புகார் கூறிவருகின்றனர். ஆனால், நாங்கள் சரியாக நடவடிக்கை எடுத்திருப்பதுடன், தலைமறைவாகியிருக்கும் ஐந்து பேரைத் தேடிகொண்டிருக்கிறோம். நிச்சயம் அவர்கள் தப்ப முடியாது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு