Published:Updated:

மயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்!

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35ஏ முதலானவற்றை நீக்கியது மத்திய அரசு. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது.

`நம் தேசம்

ஷாலிமர் தோட்டத்தின்

மலர்களாக இருக்கிறது;

தால் ஏரியில் பூக்கும்

தாமரை போல இருக்கிறது;

நம் இளைஞர்களின்

கொதிக்கும் குருதியாக இருக்கிறது'

தின நாத் கௌல் என்ற காஷ்மீரி பண்டிட் கவிஞர் 1950-களில் வாழ்ந்தவர். 'நதிம்' என்ற புனைப்பெயரில், அவர் எழுதிய இந்தக் கவிதையை, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையை அளிக்கும்போது வாசித்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப்பட்டபோது, காஷ்மீரின் தலைவராக ஷேக் அப்துல்லா தலைமையில் உருவான மக்கள் இயக்கம் குறித்து கவிதைகள் எழுதியவர் நதிம். 6 மாதங்களாக, எந்தத் தொடர்பும் இல்லாமல், காஷ்மீரை உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டித்து வைத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்
`பா.ஜ.க-வை தாக்கிப் பேசுனா, உங்களுக்கு ஏன் கோபம் வருது?!'
- அமைச்சர்களிடம் கொந்தளித்த முதல்வர்

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதியன்று மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35ஏ முதலானவற்றை நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது. காஷ்மீரின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இணையம் உட்பட தொலைத்தொடர்பு வசதிகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன.

காஷ்மீரின் தலைவர்களாக இருந்தவர்கள், 6 மாதங்கள் கடந்தும் இந்தியாவின் கைதிகளாகத் தற்போது வீட்டுச்சிறையில் இருக்கின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பங்களா ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு தலைவரான ஃபரூக் அப்துல்லாவின் வீடு சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. அவரின் மகன் உமர் அப்துல்லா, காலனிய காலத்தில் கோட்டையாகவும் சமீபத்தில் காவல்துறையின் வதை முகாமாகவும் பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த மூன்று தலைவர்களும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள்.

கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்கள்

காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக மத்திய அரசு சத்தியம் செய்தாலும், அதன் தலைவர்களின் தற்போதைய நிலையே காஷ்மீரின் நிலையை உணர்த்திவிடும். காஷ்மீரின் பாதுகாப்புக்காக இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. தற்போது தொலைத்தொடர்பு வசதிகள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன; இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், காஷ்மீரின் மூன்று முக்கியத் தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர். விடுதலை செய்யப்பட்ட தலைவர்கள் யாரும் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்தோ, இந்திய அரசியல் குறித்தோ எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லை.

கடந்த அரை நூற்றாண்டாக, காஷ்மீர் மக்கள் தனிநாடு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானோடு இணைய வேண்டும் என்றொரு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகிறது. அமைதிவழிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நிறைந்திருந்த காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியவர்கள் இந்த மூவர். இந்தியாவையும் இந்திய அரசியலமைப்பையும் ஏற்றுக்கொண்டவர்கள் இந்த மூன்று தலைவர்கள். இந்தியா விரும்பாத வழியில், காஷ்மீரிகள் செல்வதைத் தடுத்து மடைமாற்றிய இந்த மூவரும் தற்போது இருக்கும் இடம் தடுப்புச் சிறை.

காஷ்மீர்
காஷ்மீர்

மூன்று தலைவர்களையும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சந்திக்க முடியும். நாள் முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும் புத்தகங்கள் வாசித்துக் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள். அவர்களின் வீட்டிலேயே தயாரான உணவும் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

காஷ்மீரின் சுற்றுலா பாதிப்படைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு, ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை, காஷ்மீருக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சம். கடந்த 2019-ம் ஆண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெறும் 43,000 பேர் மட்டுமே காஷ்மீருக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர்.

காஷ்மீரின் நிலை குறித்து அறிவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. எனினும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், காஷ்மீருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஐந்து மாதங்கள் கழித்து, கடந்த ஜனவரியில் மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று காஷ்மீருக்குப் பயணித்தது. மத்திய அரசுக்கும் காஷ்மீரி மக்களுக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் விளைவு, காஷ்மீரின் பொருளாதார வீழ்ச்சி தெளிவாகத் தெரிகிறது.

காஷ்மீர்
காஷ்மீர்

கடந்த டிசம்பர் மாதம், காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்துப் பேசுகிறது. மொத்தமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்று பாராமல், காஷ்மீர் பகுதியில் இருந்த 10 மாவட்டங்களின் வளர்ச்சியை மட்டும் குறிக்கும் இந்த அறிக்கை, கடந்த 4 மாதங்களில் 17,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வருகையில், காஷ்மீரின் பொருளாதார இழப்பு மிகப்பெரியது. ஏறத்தாழ 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ நீக்கப்பட்டபோது, ஜம்முவில் பெரும் வரவேற்பு இருந்தது. எனினும், தற்போது மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் ஜம்மு மக்கள். கடந்த டிசம்பர் மாதம், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் 33 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சட்டப்பிரிவு 35-ஏ இல்லாததால், அந்தப் பணிகளில் ஜம்மு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட 5 நாள்களிலேயே, அந்த அறிவிப்பு பின்வாங்கப்பட்டது. ஜம்முவின் பி.ஜே.பி உட்பட அனைத்துக் கட்சிகளும் அதை எதிர்த்தன.

ஹர்ஷ் தீப் சிங்
ஹர்ஷ் தீப் சிங்
``ஹெச்.ராஜாவின் மேற்கோள் சரி; பொருள் தவறு!'' - கிருபானந்தவாரியார் பேரன் தரும் விளக்கம்

காஷ்மீரில் இருப்பது போலவே, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவிலும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்துப் போராடிய ஜம்மு தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்முவிலும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. "இணையச் சேவை கேட்கும் மக்கள், நாளை நிலமும் வேலைவாய்ப்பும் கேட்பார்கள் என்று அரசு எங்களை ஒடுக்குகிறது" என்கிறார் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஹர்ஷ் தேவ் சிங்.

இவர் 58 நாள்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரது அமைப்பு ஜம்முவில் அந்தப் பகுதி மக்களுக்கே பணிகளில் முன்னுரிமை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. 'ஒரே நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் பி.ஜே.பி, இதைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

6 மாதங்கள் கடந்துள்ளன. காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும் என்ற கேள்வி, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முன்வைக்கப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளாக, 'இயல்புநிலை' என்றால் என்னவென்றே தெரியாத காஷ்மீரிகளுக்குத் தற்போதைய சூழல் இன்னும் மோசமாகவே இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு