Published:Updated:

புதிய காஷ்மீரா... சூறையாடும் முயற்சியா? - ஜம்மு-காஷ்மீர் அப்டேட்ஸ்...

ஜம்மு-காஷ்மீர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜம்மு-காஷ்மீர்

‘மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். மக்களின் சொத்துகள், குடியுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

குளிரிலும் பனிப் பொழிவிலும் ஜம்மு-காஷ்மீர் உறைந்துகிடக்க... அந்தப் பிரதேசத்தின் அரசியல் களமோ, வெப்பத்தில் தகிக்கிறது. “மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத மத்திய பா.ஜ.க அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரம்காட்டுகிறது” என்று அந்த மாநிலத்தின் அரசியல் கட்சிகள் அனல் கக்குகின்றன. இதையடுத்து, போராட்டத்துக்குத் தயாரான முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட குப்கார் கூட்டணித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். என்ன நடக்கிறது அங்கு?

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து 5.8.2019 அன்று நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அந்த மாநிலத்தின் அரசியல் தலைவர்களை 2020, ஜூன் மாதம் பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்தார். அப்போது, “ஜம்மு-காஷ்மீருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான நம்பிக்கை வற்றிவிட்டது. இழந்த நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்” என்று பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

புதிய காஷ்மீரா... சூறையாடும் முயற்சியா? - ஜம்மு-காஷ்மீர் அப்டேட்ஸ்...

‘மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். மக்களின் சொத்துகள், குடியுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்பதே ஜம்மு-காஷ்மீர் தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதால், அங்கு சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்த பிறகே சட்டமன்றத் தேர்தலை நடத்த முடியும். அதற்காக, தற்போது தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, லடாக் தவிர்த்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 83 தொகுதிகள் இருக்கும் நிலையில், அவற்றை 90 தொகுதிகளாக அதிகரிக்க மறுவரையறை ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. அதிகரிக்கப்படும் ஏழு தொகுதிகளில், ஆறு தொகுதிகளை ஜம்முவுக்கும், ஒரேயொரு தொகுதியை காஷ்மீருக்கும் ஒதுக்க ஆணையத்தால் வழங்கப்பட்ட ஆலோசனை கடும் சர்ச்சையாகி யிருக்கிறது. இதன் மூலம் காஷ்மீர் பகுதியில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 46-லிருந்து 47-ஆகவும், ஜம்மு பகுதியில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 37-லிருந்து 43-ஆகவும் உயர்த்தப்படுகிறது.

“விகிதாசாரப்படி பார்த்தால் ஜம்முவைவிட காஷ்மீர் பகுதியில்தானே தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்? காஷ்மீரில் ஒரேயொரு தொகுதியை அதிகரித்துவிட்டு, ஜம்முவுக்கு ஆறு தொகுதிகளை வாரி வழங்கியிருப்பது என்ன நியாயம்?” என்று கொந்தளிப்பவர்கள், ‘‘பாரம்பர்யமாக, ஜம்மு-காஷ்மீரின் அதிகாரத்தளமாக விளங்குவது காஷ்மீர்தான். ஷேக் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா, முஃப்தி முகமது சயீத், குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி என முன்னாள் முதல்வர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். அதை உடைக்க வேண்டும்; இனி ஜம்முவிலிருந்துதான் முதல்வர் வர வேண்டும் என்ற நோக்கத்துடன் மறுவரையறை ஆணையத்தின் ஆலோசனைகள் இருக்கின்றன. தவிர, இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்முவில் பா.ஜ.க-வின் செல்வாக்கு அதிகம். அதனாலேயே, ஜம்முவின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், அங்கு கூடுதலாக ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன’’ என்று அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதையடுத்து, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் ஆலோசனை ஆவணத்தில் கையெழுத்திட ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட குப்கார் கூட்டணி தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

புதிய காஷ்மீரா... சூறையாடும் முயற்சியா? - ஜம்மு-காஷ்மீர் அப்டேட்ஸ்...

இந்த விவகாரத்தால் தலைவர்கள் கொதித்துப்போயிருக்கும் நிலையில், டிசம்பர் இறுதியில் அங்கு மத்திய அரசு நடத்திய ரியல் எஸ்டேட் உச்சி மாநாடு அவர்களை மேலும் சூடாக்கியுள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, வெளிமாநிலத்தவரும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்ற சூழலில், இந்த மாநாட்டில் 18,300 கோடி ரூபாய் மதிப்புள்ள 39 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதை முன்வைத்து, “ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படும்; நிறைய முதலீடுகள் வரப்போகின்றன; உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி பொருளாதார வளர்ச்சி ஏற்படும்; புதிய காஷ்மீர் பிறக்கப்போகிறது...” என்றெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், “ஜம்மு- காஷ்மீரைச் சூறையாடி, மாநிலத்தைக் கூறு போட்டு விற்க முயற்சி நடக்கிறது” என்று குப்கார் கூட்டணித் தலைவர்கள் கொந்தளித்தார்கள். அவர்கள் அடுத்த கட்டமாகப் போராட்டத்துக்கு தயாரானபோதுதான் அவர்களை வீட்டுச்சிறையில் அடைத்துள்ளது மத்திய அரசு. அவர்களின் இணையத் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகத்துக்குத் தெரியவில்லை.

துப்பாக்கிமுனையில் கட்டமைக்கப்படும் அமைதி எப்போதும் ஆபத்தானதே. மத்திய அரசு இதை உணர வேண்டும்!

*****

எஸ்.எஸ்.ஜி பாதுகாப்பு வாபஸ்!

முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புப் பாதுகாப்புப்படைப் பாதுகாப்பு தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 2000-ல் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களுக்கு எஸ்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டம், தற்போதைய ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தால் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஜம்மு காஷ்மீர் முதல்வருக்கு மட்டுமே இனி எஸ்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்படும். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்பாடுகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில், இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.