Published:Updated:

ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்த நேரு.... அமெரிக்காவுக்கு அஞ்சாத பிரதமர்! #VikatanRewind

‘உலகின் எதிரி அமெரிக்கா’ என்று பகிரங்கமாக அறிவித்து, அந்த நாட்டின் கடும் கோபத்துக்கு ஆளாகிய ஃபிடல் காஸ்ட்ரோவை அதே அமெரிக்க மண்ணிலேயே துணிச்சலுடன் சந்தித்தார் ஜவஹர்லால் நேரு.

உலகின் பல நாடுகளை ஆட்டிப்படைக்கும் ‘வல்லமை’ பெற்ற அமெரிக்காவையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலிருந்து மீள வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், அமெரிக்க வல்லரசின் தலைவர் டொனால்டு ட்ரம்ப். சீனா தான் கொரோனாவைப் பரப்பியது என்று குற்றம்சாட்டி, கொரோனாவை ‘சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டுவந்த ட்ரம்ப், அந்த நிலைப்பாட்டிலிருந்து திடீரென பல்டியடித்து, ‘கொரோனா வைரஸ்’ எனத் திருத்திக்கொண்டார். பிறகு, வென்டிலேட்டர், முகக்கவசம் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவுமாறு சீனாவிடம் அவர் வேண்டி நின்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அந்த ட்ரம்ப் இப்போது, தன் நாட்டுக்கு வேண்டிய மருந்தை வழங்காவிட்டால் பதிலடி கொடுப்போம் என்றும், விளைவுகளை இந்தியா சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் மிரட்டுகிறார். மலேரியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்சி க்ளோரோகுயின் என்ற மருந்து, இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிக்கு அளிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சிலர் தற்போது கூறுகிறார்கள். அதனால், இந்த மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சமீபத்தில் இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், ஏற்றுமதிக்குத் தடைசெய்யப்பட்ட அந்த மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ட்ரம்ப். வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், “பிரதமர் மோடியுடன் பேசினேன். அது நல்ல உரையாடலாக இருந்தது. ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்ப மறுத்தால் ஆச்சர்யப்படுவேன். ஏனென்றால், அமெரிக்காவுடன் இந்தியா நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பல ஆண்டுகளாகவே இந்தியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மருந்து அனுப்புவதை நீங்கள் அனுமதித்தால் அதை நான் பாராட்டுவேன் என்று கூறினேன். அனுமதிக்கவில்லையென்றால் பரவாயில்லை” என்ற ட்ரம்ப், அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

“அந்த மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதிசெய்ய அனுமதிக்கவில்லையென்றால், அதற்கு பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். ஏன் கொடுக்கக்கூடாது?” என்று மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப். அதன்பிறகு, அந்த மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதென்றும், ‘மனிதநேய அடிப்படையில்’ அந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்புவதென்றும் மத்திய பா.ஜ.க அரசு முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் அந்த மருந்து உற்பத்தி செய்யப்படுவதால், நம் தேவைக்கு அதிகமாக இருக்கும் மருந்தை, பிற நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காகக் கொடுத்து உதவும் மனிதநேயச் செயல் வரவேற்கத்தக்கது. அது, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடியது. ஆனால், தனக்குத் தேவையானதைத் தருமாறு அமெரிக்க அதிபர் மிரட்டுவதும், அவரின் மிரட்டலுக்குப் பின் அதை இந்தியா கொடுக்க முன்வருவதும்தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நேரத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்பான ஒரு சம்பவம் நினைவுக்குவருகிறது.

1960-ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் எல்லோரும் நியூயார்க்கில் குழுமினர். ஆப்பிரிக்க யானை சைஸில் இருக்கும் அமெரிக்காவுக்கு அருகில் எறும்பு சைஸில் இருக்கும் கியூபா நாட்டின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவும் நியூயார்க் சென்றிருந்தார்.

நேரு
நேரு

கியூபாவில் இருந்த ஃபாடிஸ்டா தலைமையிலான மக்கள் விரோத ஆட்சி,1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா தலைமையிலான புரட்சிப் படையால் தூக்கியெறியப்பட்டு, அங்கு சோசலிஸ்ட் ஆட்சி நிறுவப்பட்டது. அதன் பிறகு, கியூபாவில் செயல்பட்டுவந்த அமெரிக்க நிறுவனங்களையெல்லாம் ஃபிடல் காஸ்ட்ரோ அரசு நாட்டுடைமை ஆக்கியது. அது மட்டுமல்ல, “உலகின் எதிரி அமெரிக்கா” என்று பிரகடனம் செய்தார் ஃபிடல். அதனால் அவர்மீது கடும் ஆத்திரத்தில் இருந்தது அமெரிக்கா. அத்தகைய சூழலில்தான், ஃபிடல் காஸ்ட்ரோ அங்கு சென்றிருந்தார். அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ஐசன்ஹொவர் இருந்தார். உலக வல்லரசான நம்மீது துளியும் அச்சமின்றி, ஒரு குட்டியூண்டு நாடான கியூபா சவால்விடுகிறதே எனப் பெருங்கோபத்தில் இருந்தார் அமெரிக்க அதிபர்.

நியூயார்க் சென்ற ஃபிடல் காஸ்ட்ரோ, மிட்டவுனில் உள்ள ஷெல்பர்ன் என்ற ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினார். அங்கு, அவருக்கு பலவிதமான தொல்லைகள் தரப்பட்டன. அந்த விடுதியை விட்டு வெளியேற முடிவுசெய்த அவருக்கு, வேறு எந்த விடுதியும் இடம்தர முன்வரவில்லை. உடனே ஐ.நா அதிகாரிகளை சந்தித்த காஸ்ட்ரோ, ‘எனக்கு தங்க இடம் தர மறுக்கிறார்கள்; நான் ஐ.நா அலுவலக வளாகத்தில் டென்ட் அடித்து தங்கப்போகிறேன்’ என்றார். அதைக் கேட்டு அந்த அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்.

ஃபிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ

அந்த நேரத்தில், அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடிய மால்கம் எக்ஸ் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலரின் உதவியுடன் ஹோட்டல் தெரசா என்ற ஒரு பழைய விடுதியில் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரின் குழுவினரும் தங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. கறுப்பின மக்கள் அதிகமாக வசித்த ஹார்லம் என்ற பகுதியில் அந்த விடுதி அமைந்திருந்தது. அதில், தன் தலைமையகத்தை அமைத்துச் செயல்பட ஆரம்பித்தார் ஃபிடல் காஸ்ட்ரோ.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு மதிய விருந்து வழங்கிய அமெரிக்க அதிபர், அந்த விருந்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோவை அழைக்கவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோ என்ன செய்தார் தெரியுமா? ஹோட்டல் தெரசாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கே இருந்த தேனீர் விடுதியில் விருந்தளித்தார். மற்ற நாடுகளின் தலைவர்கள் தங்கியிருந்த விடுதிகளெல்லாம், தலைவர்களின் சந்திப்புகளால் களைகட்டியிருந்தபோது, ஃபிடல் தங்கியிருந்த விடுதியை எந்தத் தலைவரும் எட்டிப்பார்க்க வில்லை. ஃபிடலை சந்தித்தால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும் என்கிற அச்சமே அதற்குக் காரணம்.

ஃபிடல் காஸ்ட்ரோ
ஃபிடல் காஸ்ட்ரோ

அந்தச் சமயத்தில், உலகின் மதிப்புமிக்க தலைவர் ஒருவர் ஹோட்டல் தெரசாவுக்கு திடீர் விசிட் அடித்தார். அவர், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு. தன் அறைக்குள் நுழைந்த நேருவைக் கண்டதும், மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் தலைவர் ஒருவர் தம்மை சந்திக்கவந்திருக்கிறாரே என்று பதறிப்போய்விட்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. அவரை ஆசுவாசப்படுத்தினார் நேரு. அந்தச் சந்திப்பு குறித்து பின்னாளில் மனம் திறந்த ஃபிடல், “அப்போது எனக்கு 34 வயதுதான். பெரிய அளவுக்கு அறியப்படாதவனாக இருந்தேன். அப்போது என்னை சந்தித்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அந்த ஆஜானுபாகுவான உருவத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடன் நான் பதற்றமடைந்துவிட்டேன். அதை உணர்ந்து என்னைப் பற்றியும் என் செயல்பாடுகள் பற்றியும் மிக உயர்வாகப் பேசி, என்னை அவர் ஆசுவாசப்படுத்தினார்” என்றார்.

ஐ.நா கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, நான்கு மணி நேரம் 26 நிமிடங்களுக்கு உரையாற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, ஆப்பிரிக்காவில் ஒடுக்குமுறைக்கு ஆளாகிய கறுப்பின மக்களுக்கு தன் ஒருமைப்பாட்டை தெரிவித்தார். பத்து நாள்கள் நியூயார்க்கில் தங்கியிருந்த ஃபிடல், 11-வது நாள் கியூபாவுக்கு புறப்படத் தயாரானார். அப்போது, ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அவரது விமானத்தை அமெரிக்கா பறிமுதல்செய்தது. உடனே, அன்றைய சோவியத் அதிபர் குருசேவ் உதவ முன்வந்தார். அவர் கொடுத்த விமானத்தில் கியூபாவுக்குச் சென்றார் ஃபிடல் காஸ்ட்ரோ.

இந்திரா காந்தியுடன் ஃபிடல்
இந்திரா காந்தியுடன் ஃபிடல்

தன்னுடைய உளவு அமைப்பான சிஐஏ-வின் மூலம் ஃபிடல் காஸ்ட்ரோவைப் படுகொலை செய்ய பலமுறை அமெரிக்கா முயற்சி செய்தது. அப்படிப்பட்ட தலைவருடன் நேரு காலத்தில் ஏற்பட்ட உறவு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், தேவ கவுடா, ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் என நீண்ட காலம் தொடர்ந்தது. ஃபிடல் மரணமடைவதற்கு முன்பாகக்கூட, இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரி கியூபா சென்று ஃபிடலைச் சந்தித்தார். கியூபா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துவந்தபோதிலும், அமெரிக்காவின் பகை நாடாயிற்றே என்றெல்லாம் அஞ்சாமல், கியூபாவுடன் இந்தியத் தலைவர்கள் உறவாடினர்.

1992-ம் ஆண்டு, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் கியூபா மக்கள் உணவுக்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், 1000 டன் கோதுமையையும் ஆயிரம் டன் அரிசியையும் இந்திய அரசு அனுப்பியது. இந்தியா அனுப்பிய உணவுதானியங்களை, ‘இந்தியாவின் ரொட்டி’ (Bread of India) என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. ‘இந்தியாவின் ரொட்டி’ என்ற அந்த சொற்றொடர், அப்போது கியூபா மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்தியாவை மிகுந்த நன்றியுடன் அந்நாட்டு மக்கள் பார்த்தனர். அப்போது கியூபாவின் மக்கள்தொகை ஒரு கோடியே பத்து லட்சம். இந்தியா வழங்கிய உணவுதானியம், கியூபா மக்கள் அத்தனை பேருக்கும் போதுமானது என்பதைக் குறிக்கவே ‘இந்தியாவின் ரொட்டி’ என்று அவர் குறிப்பிட்டார். கியூபாவின் தலைவர்களும் அந்நாட்டு மக்களும் இன்றும் இந்தியாவை நன்றியுணர்வுடன் பார்க்கிறார்கள்.

மன்மோகன் சிங்குடன் ஃபிடல்
மன்மோகன் சிங்குடன் ஃபிடல்
XP Division

இன்றைக்கு தனக்கு வேண்டியதைத் தருமாறு இந்தியாவை அமெரிக்க அதிபர் மிரட்டுவதும், அவரின் மிரட்டலுக்கு சிறு கண்டனம்கூட தெரிவிக்காமல், அமெரிக்கா கேட்பதை உடனடியாக நாம் அனுப்புவதும் நம் தேசத்தின் இறையாண்மை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. டொனால்டு ட்ரம்ப்புக்கெல்லாம் இந்தியா அச்சப்பட வேண்டியதில்லை. ஏனெனில், நம்மைவிட வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட கொரியாவைப் பார்த்து பயப்படுபவர்தான் ட்ரம்ப்.

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்தே வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவியது. “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், வடகொரியா முற்றிலும் அழிக்கப்படும்” என்று ஐ.நா சபையில் உரையாற்றியபோது எச்சரித்தார். ட்ரம்ப்பின் அந்தப் பேச்சுக்கு, “ஒரு நாய் குரைக்கும் சத்தத்தைப் போன்றது” என்று பதிலடிக் குரல் வடகொரியாவிடமிருந்து எழுந்தது. அது, வட கொரியா அதிபரின் குரல் அல்ல. வட கொரியாவின் அதிகாரி ஒருவரின் குரல் அது.

கிம் ஜோங் உன் மற்றும் ட்ரம்ப்
கிம் ஜோங் உன் மற்றும் ட்ரம்ப்

வடகொரியாவின் உறுதியான நிலையைக் கண்டு இறங்கிவந்த ட்ரம்ப், அந்த நாட்டுடன் சமாதானமாகப் போவதற்கு வெள்ளைக்கொடி வீசினார். ட்ரம்ப், கிம் ஜோன் உன் இடையே சிங்கப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த சந்திப்பு முடிந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய ட்ரம்ப், விமானத்தைவிட்டு இறங்கியதும், இரவோடு இரவாக ஒரு ட்வீட் போட்டார். “இப்போதுதான் வந்துசேர்ந்தேன். நீண்ட பயணம். ஆனால், அதிபராக நான் பொறுப்பேற்ற தினத்தைக் காட்டிலும் அதிகமான பாதுகாப்பை இப்போது அனைவராலும் உணர முடியும். இனி ஒருபோதும் வட கொரியாவிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. அமெரிக்க மக்களே... இன்றிரவு நன்றாக உறங்குங்கள்.” என்பதுதான் அந்த ட்வீட்.

வெளிநாடு செல்வதற்கு ஒரு நல்ல விமானம்கூட வடகொரியாவிடம் கிடையாது. சீனா கொடுத்த விமானத்தில்தான், சிங்கப்பூர் சென்று ட்ரம்ப்பை சந்தித்தார் கிம் ஜோங் உன். அப்படிப்பட்ட ஒரு நாட்டின் தலைவரிடம், உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க வல்லரசு எந்த அளவுக்கு பம்மியது என்பதை உலகமே கண்டது.

கிம் ஜோங்க உன் மற்றும் ட்ரம்ப்
கிம் ஜோங்க உன் மற்றும் ட்ரம்ப்

கிம் ஜோங் உன் அளவுக்கெல்லாம் நாம் போக வேண்டாம். ‘நண்பேன்டா’ என்று நாம் நம்பிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென நம்மைப் பார்த்து மிரட்டுவதை, அது தவறு என்றாவது சொல்வோம். கைதட்டி விளக்கேற்றச்சொன்ன நம் பிரதமரிடம் நம் மக்கள் கைகூப்பிக் கேட்பது, அந்த நெஞ்சுரத்தைத்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு