Published:Updated:

`அ.தி.மு.க-வின் சரித்திரம் தெரிந்தால் இப்படிப் பேச மாட்டார் ஜெயக்குமார்!' - கனிமொழி எம்.பி

இ.கார்த்திகேயன்

”அ.தி.மு.க-வின் சரித்திரம் தெரிந்திருந்தால் அமைச்சர் ஜெயக்குமார் அநாகரிகமாகப் பேச மாட்டார்” என எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

”பா.ஜ.க மறுமுறை ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டையே ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பெரிய முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஒரு மொழி, ஒரு மதம் என்று அவர்கள் நினைக்கக்கூடிய அடையாளத்திற்குள் இந்த நாட்டை கொண்டு வர முயல்கிறார்கள். அதில் ஒரு முகமாகத்தான் ஒரு நாடு, ஒரு ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பறித்துக்கொள்ளும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை தி.மு.க-வும் தொடர்ந்து எதிர்த்துவருகிறது. இது, மாநில உரிமைகளில் தலையிடக்கூடியதாக உள்ளது. தி.மு.க தமிழை வைத்து வியாபாரம் செய்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி

அ.தி.மு.க-வே, தெரிந்தோ தெரியாமலோ பல முறை இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைக் கையில் எடுத்து நடத்தி இருக்கிறார்கள். எனவே, அமைச்சர் ஜெயகுமார், அ.தி.மு.க-வின் சரித்திரம் தெரிந்திருந்தால், இவ்வாறு தவறாக, நாகரிகமற்ற முறையில் பேசியிருக்க மாட்டார்” என்றார்.