Published:Updated:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% நிறைவு! - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை எப்போது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

ஆகஸ்ட் 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது வலுவான வாதங்களைவைத்து, ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவெடுத்துள்ளதாம் தமிழக அரசு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இதையடுத்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்து தர்மயுத்தம் தொடங்கினார். ஊழல் வழக்கில் சசிகலாவுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படவே, எடப்பாடியை முதல்வராக அமரவைத்துவிட்டுச் சென்றார் சசிகலா. பிறகு தினகரன் ஒதுக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் இணைந்தார். இணையும்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் நிபந்தனையை முன்வைத்தார் பன்னீர்செல்வம். அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அ.தி.மு.க அரசு அமைத்தது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதையடுத்து, விசாரணையைத் தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தது.

பிரதாப் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை
பிரதாப் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை

விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டபோது, மூன்று மாதங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்ததே தவிர, விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்தநிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் 2019, ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்துக்குத் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டதால், ஆறுமுகசாமி ஆணையத்தால் விசாரணையைத் தொடர முடியவில்லை. ஆணையத்துக்காக சேப்பாக்கம் எழிலகத்தில் ஒதுக்கப்பட்ட அலுவலகமும் மூடப்பட்டது. அதில் பணிபுரிந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கான மாதச் சம்பளத்தை அரசு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை ஆணையத்துக்கான செலவு 3 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றிருக்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜூலை 2-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தைக் கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ``மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது?’' எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது தொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தது. இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, `ஆறுமுகசாமி ஆணையம் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று சுப்பிரமணி தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? - தகவல் அறியும் உரிமைச் சட்டம் சொல்வதென்ன?

அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 90 சதவிகித விசாரணை முடிந்துவிட்டது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் முடக்கப்பட்டது. அதன் காரணமாக ஏப்ரல் 2019 முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 25-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது’ என்றார்.

சண்முகசுந்தரம், அரசுத் தலைமை வழக்கறிஞர்
சண்முகசுந்தரம், அரசுத் தலைமை வழக்கறிஞர்

தி.மு.க வழக்கறிஞர் அணி வட்டாரத்தில் விசாரித்தபோது, ``உச்ச நீதிமன்றத்தில் வரவிருக்கும் வழக்கு விசாரணையில் அரசுத் தலைமை வழக்கறிஞரோ அல்லது மூத்த வழக்கறிஞர்களோ சென்று வாதாடி தடையை நீக்குவதற்கு முயலவிருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், உடனடியாகத் தடையை நீக்கி அறிக்கையை அரசுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது தடை நீக்கப்பட்டால், ஆறுமுகசாமிக்கு அலுவலகமும், பணியாட்களும் வழங்கப்படும். இதுவரை தயாரிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்து, விசாரிக்கப்படுபவர்கள் மீதமிருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செப்டம்பர் இறுதிக்குள் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிகிறது” என்றனர்.

ஆறுமுகசாமி ஆணையம்: அரசின் சம்பிரதாய காலநீட்டிப்பா... உண்மையான அக்கறையா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு