Published:Updated:

``ஜெயலலிதாவை 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டை விட்டு ஓடிடணும்னு மிரட்டினாங்க!'' - நினைவுகூரும் உதவியாளர்

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

`நல்லா பாரு ரவி, நம்ம கட்சியில கருணாநிதிங்கிற பேர்ல இருக்கிறவங்க அனுப்பியிருக்கப் போறாங்க' ன்னார். `இல்ல கலைஞர் கடிதம்தான் அது'னு உறுதிபடுத்தின நிமிஷம், ரொம்பவே ஆச்சர்யப்பட்டாங்க.

"அப்ப அவங்களோட பிறந்த நாள் புரோகிராம் ரொம்ப சிம்பிள். காலையில எழுந்து வீட்டிலேயே நீண்ட நேரம் சாமி கும்பிடுவாங்க. பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட இருந்து வர்ற வாழ்த்துக்காக வெயிட் பண்ணுவாங்க. அது கிடைச்சதும் உற்சாகமாகிடுவாங்க. வீட்டு வேலையாட்களைக் கூப்பிட்டு யார் சைவம், யார் அசைவம்னு லிஸ்ட் எடுத்து எல்லாருக்கும் ஹோட்டல்ல சாப்பாடு சொல்லச் சொல்லிடுவாங்க. மத்தபடி கேக் வெட்டுகிற பழக்கமெல்லாம் கிடையாது!"

மறைந்த ஜெ.ஜெயலலிதா அ.தி.மு.கவின் கொ.ப.செ.வாக இருந்த காலகட்டத்திலிருந்து அவரது செயலாளராக இருந்த ரவிராஜ், தான் போயஸ் கார்டனில் வலம் வந்த நாள்களை நினைவு கூர்கிறார்.

ஜெயலலிதாவுடன் ரவிராஜ்...
ஜெயலலிதாவுடன் ரவிராஜ்...

"மறைந்த முதல்வரோட அம்மா சந்தியா காலத்துல இருந்தே போயஸ் கார்டன்ல எல்லாமுமா இருந்த மாதவன் நாயர் முதுமை காரணமா ஓய்வு பெற, அந்த இடத்துக்குப் போனவன்தான் நான். சொந்த ஊர் தஞ்சாவூர்ப் பக்கம். படிச்சு முடிச்சுட்டு ஓ.என்.ஜி.சியில வேலை கிடைச்சாலும், எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமா சென்னை வந்து வலம்புரி ஜான் கிட்ட இருந்தவனுக்கு இந்த வாய்ப்பு எதிர்பாராதது.

வேலைக்குச் சேர்ந்த நாள் ஒரு மாதத்தின் முதல் தேதி. பணியாட்களுக்குச் சம்பளம் போட்டிருந்த கவர்களை எங்கிட்ட தந்து, `எல்லாருக்கும் சம்பளம் தந்திடு'ன்னு சொன்னவங்க, கடைசியில எங்கிட்ட ஒரு கவரைத் தந்து 'நீ மட்டும் வெறுங்கையுடன் போகக் கூடாது'னு ஒரு தொகையைத் தந்தாங்க. அவங்களை நெருக்கத்துல பார்த்த அந்த முதல் அப்ரோச்சே எனக்குப் பிடிச்சுப் போக, அன்றிலிருந்து என் முகவரியே போயஸ் கார்டன்னு ஆகிடுச்சு.

தினமும் என்ன சமைக்கணும்கிறதுல இருந்து, வி.ஐ.பி,க்கள் அப்பாய்ன்மென்ட் வரை எல்லாத்தையுமே நானே கவனிச்சிட்டிருந்தேன். காலத்துக்கும் மறக்க முடியாத எத்தனையோ சம்பவங்கள் அந்த நாள்கள்ல நடந்தன.

ஜெயலலிதா - கருணாநிதி
ஜெயலலிதா - கருணாநிதி
ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைகள்..! #MyVikatan

ஒருநாள், அவங்களுக்கு வந்த கடிதங்களைப் பிரிச்சுப் பார்த்திட்டிருந்தப்ப, கண்ணில் அந்தக் கடிதம் பட்டது.

'புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனைப் பற்றித் தாங்கள் பொதுக்கூட்டத்தில் பேசியதைப் பாராட்டத் தோன்றியது' என்ற வார்த்தைகளுடன் 'மு.கருணாநிதி, தலைவர், திமுக' என இருந்தது. அந்தக் கடிதம் பத்தி அவங்களுக்குச் சொன்னேன்.

'நல்லா பாரு ரவி, நம்ம கட்சியில கருணாநிதிங்கிற பேர்ல இருக்கிறவங்க அனுப்பியிருக்கப் போறாங்க' ன்னார். 'இல்ல கலைஞர் கடிதம்தான் அது'னு உறுதிப்படுத்தின நிமிஷம், ரொம்பவே ஆச்சர்யப்பட்டாங்க.

அதேபோல எம்.ஜி.ஆர் மறைந்த சமயம். ரொம்பவே நெருக்கடியான சூழல் அது. திடீர் திடீர்னு மிரட்டல் கால்கள் வந்தது. `24 மணி நேரத்துக்குள் தமிழ்நாட்டை விட்டே ஓடிடணும்'ங்கிற ரேஞ்சுக்குக் கொலை மிரட்டல்கள் வரும். பின் வீட்டுக்காரங்ககிட்டப் பேசி, ஒருவேளை ஏதாவது நெருக்கடின்னா, கார்டனின் பின் வாசல் வழியா ஏணியைப் போட்டு, அவங்க வீட்டுக்குள் போயிடற மாதிரி ஒரு ஏற்பாட்டை வெச்சிருந்தோம். அப்ப நானும் இன்னும் சிலரும் சேர்ந்துதான் அவங்களுக்கு ஏணியில ஏறி இறங்கப் பயிற்சி தந்தோம். நல்லவேளையா அந்த மாதிரிச் சம்பவமெல்லாம் நடக்கலை.

மொத்தமா நான் அங்க இருந்த ரெண்டே முக்கால் வருஷத்துல (சசிகலாவின் வரவுக்கு முன்) சுமார் ஒரு வருஷம், 24 மணி நேரமும் அங்கேதான் இருந்தேன். அவங்க தன்னுடைய பணியாளர்கள் மீது எத்தனை பிரியமா இருப்பாங்கங்கிறதுக்கு நானே சாட்சி.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜானகி
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஜானகி
`நகைச்சுவை என்றால் உங்களுக்கு வேப்பங்காயா?'- மக்களின் கேள்விகளுக்கு ஜெ. பதில்கள் #VikatanOriginals

எம்.ஜி.ஆர் மறைஞ்சார். காலங்கள் மாறுச்சு. அவங்களைச் சுற்றி இருந்த ஆட்களும் மாறினாங்க. ஊர்ல உடல்நிலை சரியில்லாத என்னுடைய அம்மாவைக் கவனிக்கறதுக்காக சில மாசங்கள் சொந்த ஊருக்குப் போனேன் நான். அவ்ளோதான் திரும்ப என்னால கார்டனுக்குள் போகவே முடியலை. அவங்களும் மூணு முறை முதல்வராகி, இறந்தும் போயிட்டாங்க.

அவங்க முதல்வரான சமயத்துல ஓரிரு முறை சந்திக்க முயற்சி பண்ணினேன். அது நடக்கலை. அந்த முயற்சியை அத்தோடு நிறுத்திக்கிட்டேன்'' என்ற ரவிராஜ், தொடர்ந்து சொன்னதுதான் சோகம்.

"நான் அவங்க செயலாளரா இருந்தப்ப அவங்க சி.எம் இல்ல. ஆனா கட்சியில செல்வாக்கா இருந்தாங்க. ஆனாலும் நான் என்னுடைய வேலையில எந்தத் தப்பும் செய்யலை. அவங்களுக்கு 100 சதவிகிதம் விசுவாசமாவே இருந்தேன். அங்க இருந்ததை வச்சு அஞ்சு பைசா ஆதாயம் நான் அடையலை. எப்படின்னு கேட்டீங்கன்னா, இன்னைக்கு வரைக்கும் எனக்குச் சொந்த வீடு கிடையாது.

பார்த்திட்டிருந்த ஓ.என்.ஜி.சி வேலையை விட்டது அவங்க சொல்லித்தான். இப்ப என்னுடைய ரெண்டு மகள்கள் படிப்பு முடிச்சு நிற்கிறாங்க. 'talk immediately j.jeyalalitha'னு எம்.ஜி.ஆர் இறந்த சமயத்துல அவங்க எனக்கு அடிச்சிருந்த தந்தியைக் காமிச்சா, 'போங்கப்பா நீங்க பிழைக்கத் தெரியாத ஆளா இருந்திட்டீங்களே'னு சொல்றாங்க.

ரவிராஜ்
ரவிராஜ்

ஊர்ல மனைவி வேலைக்குப் போறது மூலமா வர்ற வருமானத்துல குடும்பம் ஓடிட்டிருக்கு. எனக்கும் ஏதாவது ஒரு வேலை கிடைச்சா, பிள்ளைகளின் கல்யாணக் கடமையை முடிக்க அது உதவியா இருக்குமே'னு அப்பப்ப சென்னைக்கு வந்து முயற்சி செய்திட்டிருக்கேன்" என்கிறார் ரவிராஜ்.

சிலருக்கு வாழ்க்கைதான் எத்தனை விசித்திரங்களை நிகழ்த்துகிறது!

அடுத்த கட்டுரைக்கு