Published:Updated:

`அப்போது கோடிக்கணக்கில் கொடுக்க வருவார்கள்!' -ஜெ,. உதவியாளர் பூங்குன்றன் வேதனை

ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்
ஜெயலலிதாவுடன் பூங்குன்றன்

சென்னை மற்றும் தஞ்சாவூரில் வசித்து வந்த பூங்குன்றன் தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தன் உறவினருக்குச் சொந்தமான இல்லத்தில் இருந்தபடி விவசாயம் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெ-வின் மறைவுக்குப் பிறகு எதிலும் தலைகாட்டாமல் சத்தமில்லாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். தற்போது தஞ்சாவூரில் வசித்துவரும் பூங்குன்றனுக்கு நெருக்கமான சிலர் சில தினங்களுக்கு முன் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாட வைத்துள்ளனர். அப்போது அமைச்சர்கள் சிலர் போன் மூலம் பூங்குன்றனுக்கு வாழ்த்து கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயப் பணியில் பூங்குன்றன்
விவசாயப் பணியில் பூங்குன்றன்

ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்தவரை எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியான பூங்குன்றன் அரசியலிலிருந்தும் ஆட்சியாளர்களிடமிருந்தும் ஒதுங்கிக் கொண்டார். அதன்பின்னர் சென்னை மற்றும் தஞ்சாவூரில் வசித்து வந்த பூங்குன்றன் தற்போது தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தன் உறவினருக்குச் சொந்தமான இல்லத்தில் இருந்தபடி விவசாயம் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி பூங்குன்றனின் பிறந்தநாளுக்கு அமைச்சர்கள் சிலர் போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூடவே சிலர், அருளானந்த நகர் இல்லத்துக்கே நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்ததுடன் கேக் வெட்ட வைத்து பிறந்தநாளைக் கொண்டாட வைத்துள்ளனர். இதனால் பூங்குன்றனிடம் புதிய உற்சாகம் தென்படுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மேலும், நேற்று பூங்குன்றனுக்கு திருமண நாள் என்பதால் தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும்விதமாக ஃபேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், `வேதா இல்லம்' எனும் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட எனக்கு வாய்த்தவளோ பாவம். ஒருமுறை என் மனைவியிடம் தொலைபேசியில் கோபமாக பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்த அம்மாவின் தனிப் பாதுகாவலர் வீரபெருமாள், `அரசியல்வாதிகளிடமும் முன்பின் தெரியாதவர்களிடமும் காட்டும் அன்பை உங்களையே நம்பி வாழும் குடும்பத்தினரிடம் காட்டவேண்டாமா.. நல்லவன், கெட்டவன் என்று தெரியாதவர்களிடம் கொட்டும் ஆறுதல் வார்த்தைகளை, உங்களையே உயிராக நேசிக்கும் மனைவியிடம் உதிர்க்க வேண்டாமா?' என்றார். `உண்மைதான் சார்' என நன்றி தெரிவித்துவிட்டு அதன்படி நடக்க முயன்றேன்.

சந்தோஷத்தில் பங்கெடுப்பவர்கள் பலர், துன்பத்தில் பங்கெடுப்பவர்களோ சிலர். இரண்டிலும் பங்கெடுத்து இறுதிவரை நம்மை சுவாசிப்பவள் மனைவி. வேலையில்லாதபோது என்னைக் கரம்பிடித்தவள். அவளை கரம்பிடித்த பிறகே எனக்கு வேலை கிடைத்தது. குலதெய்வம் 'அம்மா' இருக்குமிடமே எனக்குச் சொர்க்கம். அதனால் இவளுக்கு நான் அளித்ததோ நரகம். நரகத்திலும் வாழ்ந்து என்னில் கரைந்த என் மனைவிக்கு வாழ்த்துகள்' என தன் மனைவியைப் பற்றி உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

புதிய தோற்றத்தில் பூங்குன்றன்
புதிய தோற்றத்தில் பூங்குன்றன்

பூங்குன்றனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ``அம்மாவை (ஜெயலலிதா) மலை போல் நம்பியிருந்த பூங்குன்றன், அவரின் திடீர் மரணத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அம்மா இருந்தவரையில் பரபரப்புடன் இருந்த அவர் தற்போது எந்த அரசியல் பார்வையும்படாமல் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீவிர முருக பக்தரான அவர் சில மாதங்களாகவே விவசாயத்தில் ஆர்வம் கொண்டு தானே வயலில் இறங்கி ஈடுபாட்டுடன் விவசாயம் செய்து வருகிறார். பொருளாதாரரீதியாக பெரும் சிரமத்தில் இருக்கிறார்.

`முதலமைச்சர், பொதுச் செயலாளர் கனவில் எனக்குத் தெரிந்தே 25 பேர்!' - ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்

தற்போது அவருக்கு நெருக்கமான சிலரிடம் மனதில் உள்ள குமுறல்களை பேசத் தொடங்கியிருக்கிறார். `ஜெயலலிதாவிடம் இருந்தபோது எனக்கு பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுப்பார்கள். அவர்களிடம், `நான் இருப்பது கோயிலில். அந்த தெய்வம் என்னைப் பார்த்துக்கொள்ளும். எனக்கு இந்தப் பணம் வேண்டாம்' என அதை வாங்க மறுத்துவிடுவதுடன் அவர்களை அம்மாவிடம் மாட்டி விடமாட்டேன்.

பூங்குன்றன் ஒட்டிய போஸ்டர்
பூங்குன்றன் ஒட்டிய போஸ்டர்

எத்தனையோ பேரை நான் காப்பாற்றியிருக்கிறேன். பலர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்' என்பார். இப்போதும் அவர் ஜெயலலிதா அம்மாவைப் பற்றித்தான் அடிக்கடி பேசுவார். ஆனால், அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியாளர்கள் இவரைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருக்கிறது. அம்மா நினைவு நாளில் போஸ்டர் ஒட்டுவது, பிறந்தநாளில் அன்னதானம் செய்வது என சத்தமில்லாமல் செய்து வருகிறார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு