Election bannerElection banner
Published:Updated:

கன்னட மொழி... ஜெயலலிதா பாணி - சிறைக்குள் சசிகலாவின் சீக்ரெட் மாற்றங்கள்!

சசிகலா
சசிகலா

`நான்கு ஆண்டுக்கால சிறை வாழ்க்கை, அவரது கடந்தகால வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு பாருங்கள் அந்த மாற்றத்தை...' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

`சிறைக்குள் சசிகலா என்ன செய்கிறார்’ என்பது குறித்த புதிய தகவல்கள் இப்போது வெளியாகிவருகின்றன. ``கடந்த நான்கு ஆண்டுக்கால சிறை வாழ்க்கை அவரது கடந்தகால வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு பாருங்கள், அந்த மாற்றங்கள் தெரியும்...'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சசிகலா
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவருக்கு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நான்கு ஆண்டு தண்டனைக் காலம் வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. ஆனால், ஏற்கெனவே அவர் சிறையிலிருந்து காலத்தையும், தண்டனைக் காலத்தில் அவர் இரண்டு முறை பரோலில் வந்த நாள்களையும் கணக்கிட்டால், அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதியோடு அவரது தண்டனைக் காலம் நிறைவடைகிறது. அதைத் தாண்டி அவரை சிறைக்குள் வைத்திருக்க முடியாது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10,000 ரூபாய் தொகையும் அவர் சார்பில் கடந்த வாரம் கட்டப்பட்டுவிட்டது.

இந்தநிலையில், சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன. சிறைக்குள் சசிகலா செடிகள் வளர்ப்பது, சேலைகளுக்கு டிசைனிங் வேலை, பூக்கள் வளர்ப்பது போன்ற பல பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.மேலும். கன்னட மொழியை முழுமையாகக் கற்றுக்கொண்டிருக்கிறார் என்று சிறைத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்து, சசிகலாவைச் சிறைக்குள் சந்திக்கும் அவருக்கு நெருக்கமான உறவினர்களிடம் பேசியபோது சசிகலாவின் சிறை வாழ்க்கை குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

``நான்கு ஆண்டுச் சிறை வாழ்க்கை சசிகலாவை முழுமையாக மாற்றியிருக்கிறது. அதோடு இந்தச் சிறைக்காலத்தில் பல்வேறு இழப்புகளையும் அவர் சந்தித்திருக்கிறார். குறிப்பாக, அவருடைய கணவர், அண்ணன், அண்ணி ஆகியோரின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறைக்குள் அவர் பல சிக்கல்களைச் சந்தித்தார். ஆனால், போகப் போகச் சிறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். போயஸ் கார்டனில் அவர் வசிக்கும்போதே, செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். போயஸ் கார்டனில் புதிய வகைச் செடிகளை நட்டுவைத்து வளர்த்துவந்தார். சிறைக்குள் ஆரம்பத்தில் அவர் ஆரம்பித்த வேலையே கன்னட மொழியைக் கற்றுக்கொள்வதுதான். அந்த மொழியைப் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார். கன்னட மொழிப் பயிற்சி முடித்தற்கான சான்றிதழையும் அவர் பெற்று ஓர் ஆண்டுக்கும் மேலாகிவிட்டது. அவருடைய உடல்நிலை ஆரம்பத்தில் அவருக்கு சிக்கலாக இருந்தாலும், இப்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. யோகா செய்யும் வழக்கத்தையும் சிறைக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய உடலின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் பல முறை சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் அவருடைய கண்களிலிருந்து அடிக்கடி தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். அது இப்போதும் இருக்கிறதாம்.

 சசிகலா, இளவரசி
சசிகலா, இளவரசி
விகடன்

சிறைக்குள் செல்லும்போதே சில சாமி படங்களையும் அவர் எடுத்துச் சென்றிருக்கிறார். சசிகலா சிவ வழிபாட்டில் அதிக நாட்டம் உடையவர். அதேபோல் எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட, அடிக்கடி பார்த்தசாரதியையும் கும்பிடுவார். சிறைக்குள் இருக்கும் தனது அறையில் சிறிய அளவில் இந்த சாமி படங்களை வைத்து தினமும் கும்பிட்டுவருகிறார். நான்கு மணி நேரம் பூஜைக்காகச் செலவு செய்கிறார். ஜெயலலிதாவைப்போல் இப்போது ஆஞ்சநேயரையும் வழிபட ஆரம்பித்திருக்கிறார் சசிகலா. இதனால், இப்போது முழுமையாக சைவ உணவையே உட்கொள்ளும் பழக்கத்துக்கு வந்துவிட்டார். சசிகலாவும் இளவரசியும் ஒரே அறையில் இருப்பதால் சசிகலாவுக்குத் தனிமை சூழ்நிலையில்லை. தினமும் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். காலையில் எழுந்து பூஜைகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஓர் ஆண்டுக்குச் சிறையில் அவர்களைச் சந்திக்கச் சென்றவர்களிடம் வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வாங்கிவரச் சொல்லியிருந்தார். சென்னையிலிருந்து காய்கறி விதைகள் வாங்கி அவருக்கு கொடுக்கப்பட்டன. அந்த விதைகளைப் போட்டு வளர்த்துவந்து, அதில் கிடைக்கும் காய்கறிகளைப் பெண் சிறைக் கைதிகளின் உணவுக்குப் பயன்படுத்திவருகிறார்கள்.

சிறைக்குள் விவசாயம் செய்தாரா சசிகலா... கைதிகள் விவசாயம் செய்ய வாய்ப்புண்டா?

பெண்கள் சிறை வளாகத்தில் அவர் வளர்த்துவரும் செடிகளிலிருந்த பூக்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறார். தொலைக்காட்சியில் தினமும் தமிழ்ச் செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதால், தமிழகத்தின் அனைத்து அரசியல் நிலவரங்களையும் துல்லியமாக்க அறிந்துவைத்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அவரை யாரும் சந்திக்க முடியவில்லை. கொரோனா தொற்றின் தாக்கத்தால் சிறை நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

சிறையிலிருந்துகொண்டே தனக்கு நெருக்கமான பலருக்கும் கடிதங்களை அவர் எழுதியிருக்கிறார். தன்னை யார் சந்திக்க வேண்டும் என்பதை அவரே முடிவுசெய்வதால், அவர் ஒப்புதல் இன்றி அவரை யாரும் சந்திக்க முடியாத நிலை இருக்கிறது. வாரத்துக்கு ஒரு முறை இளவரசி, சசிகலா இருவருமே சுதாகரனைச் சந்திக்கிறார்கள்” என்கிறார்கள்.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

சசிகலாவுக்கான அபராதத் தொகை சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட நிலையில், கடந்த திங்கள் அன்று இளவரசிக்கான அபராதத் தொகையை வழக்கறிஞர் அசோகன் தரப்பினர் நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கிறது. சுதாகரனுக்கான அபராதத் தொகை மட்டுமே இதுவரை நீதிமன்றத்தில் செலுத்தப்ப வில்லை. சுதாகரனின் அபராதத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டால் மூவர் விடுதலையிலும் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால் மூவரில் சுதாகரனே முதலில் விடுதலையாவார் என்கிறார்கள். காரணம், சுதாகரன் ஏற்கெனவே பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்ட நாள்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரே முதலில் வெளியே வரும் நபராக இருப்பார் என்கிறார்கள். அதன் பிறகு இளவரசியும், கடைசியாக சசிகலாவும் விடுதலையாக வாய்ப்புண்டு என்கிறார்கள். சிறை வாழ்க்கை சசிகலாவுக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்தப் படிப்பினைகளை வெளியே வந்து அவர் வெளிப்படுத்தும்போது தெரியும் என்று 'ட்விஸ்ட்' வைக்கிறார்கள் அவரின் அனுதாபிகள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு