Published:Updated:

சிலந்தி அடைந்த பூஜை அறை; தூசி படிந்த நூலகம்... எப்படி இருக்கிறது ஜெயலலிதாவின் வேதா நிலையம்?

தீபா - தீபக்
News
தீபா - தீபக்

ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலின் அதிகார மையமாகத் திகழ்ந்த வேதா நிலையம், இன்று ஜெயலலிதாவின் வாரிசு கைகளுக்குப் போயிருக்கிறது

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீடு, முறைப்படி அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. வீட்டின் சாவியை சென்னை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், உறவினர்களுடன் இன்று வேதா நிலையத்துக்கு வந்திருந்தனர். 30 வருட தமிழக அரசியலில், அதிகார மையங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த வேதா நிலையம், தூசி படிந்து பாழ்பட்ட நிலையில் இருப்பதாகக் குறைபட்டுக்கொள்கிறார்கள் தீபா, தீபக்கின் உறவினர்கள். 'எப்படி இருக்கிறது ஜெயலலிதா வாழ்ந்த வீடு?' விவரமறிய நேரடி விசிட் அடித்தோம்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, போயஸ் கார்டன் பின்னி சாலைக்குள் நுழையும்போதே ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அவர் வீடு அமைந்திருக்கும் தெருவுக்குள் செல்வதற்கே, காவலர்களின் ஆயிரம் கேள்விகளைத் தாண்டித்தான் செல்லவேண்டியிருக்கும். இப்போது அப்படி எந்தக் கெடுபிடியும் இல்லை. முதன்முறையாக தீபா, தீபக் போயஸ் வீட்டுக்கு வருவதால், சில போலீஸார் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். இவர்களும் இரண்டு நாள்களில் கிளம்பிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. பிற்பாடு, வீட்டின் பாதுகாப்பை தீபா, தீபக் இருவரும்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். வீட்டின் வாசலில், கடந்த அ.தி.மு.க அரசால் மாட்டிவைக்கப்பட்ட 'ஜெயலலிதா நினைவு இல்லம்' போர்டு இன்னும் அகற்றப்படவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு ஆள் உயர இரும்புகேட்டைத் தாண்டியவுடன், வலப்புறத்தில் ஒரு சிறு தோட்டம் இருக்கிறது. நான்கு வருடங்களாக வீடு பூட்டப்பட்டிருந்ததால், புற்கள் மண்டிப்போய் பராமரிப்பு இல்லாமல் இருப்பதைக் காண முடிந்தது. மா, பலா, வாழைமரங்கள் உயிர்ப்போடு இருந்தன. வீட்டின் பக்கவாட்டை ஒட்டி இரண்டு தென்னை மரங்கள் மட்டும் பட்டுப்போன நிலையில் இருக்கின்றன. அதன் கழிவுகள்கூட அகற்றப்படாததால், அதில் மழைநீர் தேங்கி, கொசு முட்டைகள் நிரம்பியிருக்கின்றன. வீட்டின் இடதுபுற வழியாக கிச்சன் பின்பக்கம் வரை செல்வதற்கு தனி வழி இருக்கிறது. அந்த வழியிலும் குப்பைகள் தேங்கியிருந்தன. தீபாவுடன் வந்திருந்த அவர் உறவினர்கள் சிலர்தான், பக்கத்து வீடுகளில் பணியாற்றிய பணியாட்கள் துணையுடன் குப்பைகளைக் கூட்டிச் சுத்தம்செய்தனர். தோட்டத்திலிருந்த ஒரு மோட்டாரும் பாழடைந்து துருப்பிடித்த நிலையில் இருந்தது. பல சிசிடிவி கேமராக்கள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன.

வேதா நிலையம் பிரதான வீட்டை ஒட்டி, பணியாட்கள் தங்குவதற்கும், ஜெயலலிதாவின் முகாம் அலுவலகம் செயல்படுவதற்கும் தனியாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தின் கீழே மூன்று கார்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் இருக்கின்றன. அவையும் குப்பைகளுடன்தான் காட்சியளித்தன. வீட்டுக்குள் தீபா, தீபக், தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் உறவினர்கள், வழக்கறிஞர்கள் தவிர வேறு யாரும் செல்லவில்லை. தொடக்கத்தில் வீட்டில் கரன்ட் இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, மெயின் ஸ்விட்சுகளை தேடி ஆன் செய்த பிறகுதான் சில அறைகளில் மட்டும் கரன்ட் வந்தது. மேல் மாடத்துக்குத் தன் கணவர் மாதவனுடன் வந்த தீபா, அங்கிருந்தபடியே தன் அத்தை கையசைப்பதுபோல, கீழே குழுமியிருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கையசைத்தார். வீட்டிலிருந்தவர்களுக்கு ஹோட்டலிலிருந்து உணவு கொண்டுவந்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபாவின் உறவினர்கள் சிலருடன் பேசினோம். ``நான்கு வருடங்களாகப் பூட்டப்பட்டிருப்பதால், வீடே தூசி படிந்து குப்பையாகத்தான் இருக்கிறது. பூஜை அறையில் சிலந்திகள் வலை பின்னியிருந்தன. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நூலகம் தூசி படிந்த நிலையில் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒரே நாளில் சுத்தம் செய்துவிட முடியாது என்பதால், பணியாட்கள் அமர்த்தி ஒருவாரத்திற்குள் சுத்தம் செய்யலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். வீட்டின் முதல் தளத்திலிருந்த ஒரு ஏ.சி-யின் ஒயர் எப்போதோ தீப்பிடித்துக் கருகிப்போயிருக்கிறது. அதனால் ஒருசில அறைகளுக்கு கரன்ட் வரவேயில்லை. மொபைல் டார்ச் மூலமாகத்தான் அறைகளைப் பார்வையிட்டோம். ஜெயலலிதா இருந்த அறையைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டார் தீபா. 'என் அத்தை ரூம் இதைவிடப் பெருசா இருக்கும். இதை இப்படி சுருக்கிவெச்சிருக்காங்களே. இதுலயா அத்தை வாழ்ந்தார்' என்று கோபப்பட்டார். விநாயகர் ஹோமம் செய்த பிறகுதான், முறைப்படி இந்த வீட்டுக்குள் தீபா, தீபக் குடிபுக வேண்டுமென்பது எங்களது விருப்பம். இதற்கு தீபாவும் சம்மதித்திருக்கிறார்" என்றனர்.

தீபா - தீபக்
தீபா - தீபக்

ஜெயலலிதாவின் வீட்டில் இரண்டு பெரிய ஜெனரேட்டர்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அவைப் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், அவற்றின் நிலை என்னவென்பது தெரியவில்லை. 'இந்த வீட்டைப் பராமரிப்பதற்குக் குறைந்தது பத்து பணியாட்களாவது தேவைப்படுவார்கள். அவர்களுக்கான சம்பளம் கொடுத்து தீபா, தீபக் இருவரும்தான் இனி வீட்டைப் பாதுகாக்க வேண்டும்'’ என்கிறது அவர்களின் உறவினர்கள் தரப்பு. 80-களின் இறுதியில் தொடங்கி, ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலின் அதிகார மையமாக திகழ்ந்த வேதா நிலையம், இன்று ஜெயலலிதாவின் வாரிசு கைகளுக்குப் போயிருக்கிறது. அதன் மதிப்பு மரியாதையை, வாரிசுகளும் பாதுகாக்க வேண்டுமென்பதே அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பம்.