Published:Updated:

'தேர்தலைச் சந்திக்காத, தேசத்தின் நாயகன்!' - ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

தேர்தலைச் சந்திக்காத பெரும் மக்கள் தலைவர்களுக்கான வரிசையில் நிச்சயம் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும் ஓர் இடமுண்டு. அவருடைய பிறந்த தினம் இன்று.

ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஜெயப்பிரகாஷ் நாராயண் ( India Today )

மக்கள் நாயகன் என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண், சுதந்திர இந்தியாவின் முகங்களில் முதன்மையானவர். மாபெரும் களப்போராளியாகத் திகழ்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜெ.பி என்றும் அழைக்கப்பட்டார். தேர்தல் அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் தோன்றி மறைந்தாலும், மக்கள் திரளை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் (Mass leaders) மிகவும் குறைவு. இந்தியாவின் மிக முக்கியமான, பெரும் மக்கள் திரளைக் கட்டுப்படுத்திய இரு அரசியல் தலைவர்கள், தேர்தல் அரசியலில் ஈடுபடாதவர்கள் என மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியாரைக் குறிப்பிடுவர். தேர்தலைச் சந்திக்காத பெரும் மக்கள் தலைவர்களுக்கான அந்த வரிசையில் நிச்சயம் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும் ஓர் இடமுண்டு. இறுதிவரை மக்களுக்காக மட்டுமே களத்தில் நின்ற இரண்டாவது காந்தி இவர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஜெயப்பிரகாஷ் நாராயண்

பிரிட்டிஷ் இந்தியாவின் பீகார் மாகாணத்தில் பிறந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அமெரிக்காவில் தங்கி உயர்கல்வி பயின்றார். ஏழு ஆண்டுக்கால அமெரிக்க வாசத்தில், காரல் மார்க்ஸ் அறிமுகம் பெற்ற ஜெ.பி, இந்தியச் சமூகத்தையே அடியோடு மாற்றியமைக்க வேண்டுமென முடிவுசெய்தார். 1929-ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு, காந்தியின் அழைப்பை ஏற்று சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெ.பி, காந்தியின் படைத்தளபதிகளில் முதன்மையானவராக விளங்கினார்.

’ஒத்துழையாமை’ இயக்கத்தில் கலந்துகொண்டதன்மூலம் பொதுவாழ்வில் நுழைந்தார், ஜெ.பி. 'வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கலந்துகொண்டதற்காகக் கைதுசெய்யப்பட்டு ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்த ஜெ.பி தலைக்கு, பிரிட்டிஷ் அரசு 10,000 ரூபாய் விலை வைத்தது. பின்னர் 1943-ம் ஆண்டு மீண்டும் கைதுசெய்யப்பட்ட ஜெ.பி, 16 மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளை எதிர்கொண்டார்.

நேருவுடன், ஜெயப்பிரகாஷ் நாராயண்
நேருவுடன், ஜெயப்பிரகாஷ் நாராயண்

சுதந்திரத்திற்குப் பிறகு, பிரதமர் நேரு பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் அமைச்சரவையில் சேர மறுத்துவிட்டார். தேர்தல் அரசியலையே முற்றாகப் புறக்கணித்து மக்கள் பணியில் ஈடுபட்டுவந்தார். வினோபா பாவே-யின் அழைப்பை ஏற்று, பூமிதான இயக்கத்திற்காக நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். நெருக்கடி நிலை காலத்தில், சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டார், ஜெ.பி.

ஒருமுறை அல்ல; இருமுறை நாட்டின் உயரிய பொறுப்புகளை அலங்கரிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் அதை ஏற்காது மறுத்தவர் ஜெ.பி. காங்கிரஸில் தனக்குப் பிறகு ஜெ.பி-தான் என நேருவே பலமுறை குறிப்பிட்டபோதும், நேருவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு வந்த பிரதமர் நாற்காலியையும் அலங்கரிக்க மறுத்தார், ஜெ.பி. எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் தோற்று ஜனதா கட்சி பெரும்பான்மையாக வெற்றிபெற்றபோதும் பிரதமர் நாற்காலி ஜெ.பி-யை நோக்கி வந்தது. அப்போதும் அதை ஏற்காமல் மறுத்துவிட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஜெயப்பிரகாஷ் நாராயண்
Outlook

சில காலம் பொது வாழ்விலிருந்து விலகியிருந்த ஜெ.பி, 1970 -களின் தொடக்கத்தில் உருவான வேலைவாய்ப்பின்மை, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முதன்மையான முகமாகத் திகழ்ந்தார். ஜூன் 5, 1974 அன்று பாட்னாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜெ.பி, "சுதந்திரம் அடைந்து 27 ஆண்டுகள் கழித்தும் இந்த நாட்டு மக்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றனர். அரசாங்கம் பதவி விலகுவது நமக்கான தீர்வு அல்ல. நமக்குத் தேவை, முழுமையான புரட்சியே" என்றார்.

பிரதமர் இந்திரா காந்தி, நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். "சுதந்திரத்தைவிடவும் உணவுதான் முக்கியம்" என நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேசியபோது, அதற்கு எதிர்வினையாற்றிய ஜெயப்பிரகாஷ் நாராயண், "சுதந்திரம் என்றுமே என் வாழ்வின் ஆதார ஒளி போன்றது. என் வாழ்வின் அங்கமாகிப்போன இந்த சுதந்திரத்தை வேறு எந்தக் காரணத்திற்காகவும் நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்" என்றார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண்
ஜெயப்பிரகாஷ் நாராயண்

1977-ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பிறகான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா கட்சியை உருவாக்குவதில் முக்கியமான பங்காற்றினார். 1977-ம் ஆண்டு பொதுத்தேர்தலை, "அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவைத் தீர்மானிக்கப்போகின்ற தேர்தல்" என்று குறிப்பிட்டார். எந்த காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக காந்தி, நேரு காலம்தொட்டு உழைத்தாரோ, அதே காங்கிரஸ் கட்சியின் முதல் தோல்விக்கு வித்திட்டார் ஜெ.பி.

மீண்டும் ஒரு ஜெ.பி தேவை

நெருக்கடி நிலை காலத்தில், சண்டிகர் சிறையில் ஜெ.பி அடைக்கப்பட்டபோது, அவருக்குப் பொறுப்பாக இருந்தவர் அன்றைய சண்டிகர் ஆட்சியர், தேவசகாயம். இப்போது, நாகர்கோவிலில் வசிக்கும் அவரைத் தொடர்புகொண்டு ஜெ.பி -யுடனான நினைவுகளைக் கேட்டேன்.

78 வயதைத் தாண்டிவிட்ட தேவசகாயம், ஜெயப்பிரகாஷ் நாராயண் என்ற பெயரைக் கேட்டதுமே உற்சாகமாக நம்மிடம் பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். “இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட முதல் நபர் ஜெ.பி-தான். ‘ஜனநாயகம் என்பது வெறும் காகிதத்தில் பெயரளவிலானதாக இருக்கக்கூடாது. இந்தியாவில், 90 சதவிகிதத்திற்கும் மேலான மக்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியவில்லை. என்னுடைய பணி என்பது அவர்களுக்காக, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகமாக இருக்கமுடியும்’ என ஜெ.பி அடிக்கடி குறிப்பிடுவார்” என்றார் தேவசகாயம்.

தேவசகாயம் மேலும் குறிப்பிடுகையில், “நெருக்கடிநிலை காலத்தில், இந்திரா காந்தி அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர், ஜெ.பி. சண்டிகரில் சிறைவைக்கப்பட்டிருந்த ஜெ.பி-யின் பாதுகாப்பிற்கு, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த நான்தான் பொறுப்பு. பலமுறை அவருடன் உரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. நெருக்கடி நிலை காலத்தை இந்தியாவின் ’இரண்டாவது சுதந்திரப் போராட்டம்’ எனக் குறிப்பிட்டார் ஜெ.பி. நெருக்கடிக்குப் பிறகும் நீண்ட யோசனைக்குப் பிறகும்தான், பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தை ஜனதா கட்சியுடன் இணைக்க முடிவுசெய்தார். ஜனசங்கத்தினரால் அவர் உருவாக்கிய ஜனதா கட்சி சிதறியதைக் கண்டு, தனக்கு மீண்டும் துரோகம் இழைக்கப்பட்டதாக வருந்தினார். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உயிர்மூச்சாகக்கொண்டிருந்த ஜெ.பி, தற்போதைய காலகட்டத்தில் உயிரோடு இருந்திருந்தால், நம்பர் 1 ஆன்டி நேஷனல்’ ஆக விளங்கியிருப்பார். காந்தி மரபுக்கு எப்படி காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாட முடியாதோ, அதைப் போலவேதான் ஜெ.பி-யின் மரபுக்கு பாரதிய ஜனதா கட்சி உரிமைகொண்டாட முடியாது. இன்றைய அரசியல் களத்தில் மீண்டும் ஒரு ஜெயப்பிரகாஷ் நாராயண் தேவை” என்றார்.