Published:Updated:

`இது வெறும் டிரெய்லர்தான்!’ - தஞ்சை விழாவில் பா.ஜ.க-வில் இணைந்த ஜீவஜோதி

ஜீவஜோதி
ஜீவஜோதி

`நம் கட்சியில் இணைந்து மக்கள் பணிகளைச் செய்ய ஆர்வமாகி தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவருக்குக் கட்சியினர் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.'

சென்னை ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டை கிடக்க காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜகோபால் மீது புகார் கொடுந்ததுடன் பெரும் சட்ட போராட்டத்தை நடத்தி அவருக்குத் தண்டனையை வாங்கித் தந்தார். இவர் ஏற்கெனவே பா.ஜ.க-வில் உறுப்பினராகிவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் தன்னை முழுமையாகக் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

ஜீவஜோதி கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க-வில் இணைய போகிறார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தன. அவர் தரப்பில் பேசியவர்கள், `ஜீவஜோதி பா.ஜ.க-வில் உறுப்பினராக ஆகிவிட்டார். ஆனால், நிர்வாகிகள் முன்னிலையில் முறைப்படி இணைவதற்கான பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவை சீக்கிரமே நடைபெற உள்ளது’ எனக் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளரான கருப்பு.முருகானந்தம் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இது குறித்து பா.ஜ.க-வினர் சிலர், ``நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, பிரபலமான அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. அதன்படி அவர் பா.ஜ.க-வில் சேர முடிவெடுத்தார். பா.ஜ.க-வில் சேர்வதற்கான அனைத்து உதவிகளையும் மாநில செயலாளரான கருப்பு.முருகானந்தம் செய்தார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

அத்துடன் ஜீவஜோதியை முதலில் நீங்க கட்சியில் உறுப்பினர் ஆகிவிடுங்கள். பின்னர், கட்சியில் இணைவதை ஒரு விழாபோல் எடுத்து முக்கிய நிர்வாகிகளை முன்னிலையில் இணைத்துக் கொள்ளலாம் என ஆலோசனையும் வழங்கினார். அதன்படியே ஜீவஜோதியும் செயல்பட்டார். இந்த நிலையில் மூன்று முறை அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு தள்ளிப்போயின.

இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலருக்கு கட்சியில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் பதவியேற்பு விழா திருமண மண்டபம் ஒன்றில் கருப்பு.முருகானந்தம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஜீவஜோதி, கருப்பு.முருகானந்தம் மற்றும் மாவட்டச் செயலாளரான இளங்கோ ஆகியோருக்கு மலர் கொத்து கொடுத்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.

`இது வெறும் டிரெய்லர்தான்!’ -  தஞ்சை விழாவில் பா.ஜ.க-வில்  இணைந்த ஜீவஜோதி

ஜீவஜோதியை கருப்பு.முருகானந்தம் மற்ற நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து பேசுகையில், `இவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது இவர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நம் கட்சியில் இணைந்து மக்கள் பணிகளைச் செய்ய ஆர்வமாகி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு கட்சியினர் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றார். ஜீவஜோதி தரப்பில் பேசினோம், ``முறைப்படி கட்சியில் இப்பதான் சேர்ந்திருக்கேன். இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான் இருக்கு. கட்சியில் பதவி கொடுத்தாலும் சரி கொடுக்கவில்லை என்றாலும் சரி, தலைமையின் உத்தரவுக்கு கட்டுபட்டு தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதில் என் பங்கும் இருக்கும்” என்கிறார்.

பின் செல்ல