Published:Updated:

பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்! - உற்சாகத்தில் ஜீவஜோதி

ஜீவஜோதி
ஜீவஜோதி

கொள்கைகள் பிடித்ததாலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் கவர்ந்ததாலும் பா.ஜ.க-வில் இணைந்த எனக்கு கட்சி பதவியும் கொடுத்துள்ளதாக ஜீவஜோதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜீவஜோதி தன் முதல் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி, ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர். தற்போது தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி மகளிருக்கான டெய்லரிங் ஷாப் மற்றும் தன் அப்பா ராமசாமி பெயரில் வல்லம் அருகே அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பா.ஜந்வில் சேர்ந்த ஜீவஜோதிக்கு அக்கட்சியில் முக்கிய பதவி தரப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று பா.ஜ.க-வின் தஞ்சை தெற்கு மாவட்டத் துணை தலைவராக ஜீவஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கட்சி நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ஜீவஜோதி தனது முதல் கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு, அதற்கான நீதி கேட்டு பெரிய அளவிலான சட்டப்போராட்டத்தை நடத்தினார். அப்போது மீடியாவில் அடிக்கடி ஜீவஜோதி குறித்த செய்தி வந்து கொண்டிருந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தெரிந்த நபராகவும் மாறினார்.

பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஜீவஜோதி
பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஜீவஜோதி

அத்துடன் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு எதிராகச் செயல்பட்டதுடன் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவருக்கு தண்டனையும் வாங்கித் தந்தார்.

அப்போது ஜெயலலிதா இல்லையென்றால் இது நடந்திருக்காது. ஒரு பெண்ணாகப் போராடிய எனக்கு நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்த வித்திட்டு முதல் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார்.

பி.ஜே.பி அறிவிப்பு கடிதம்
பி.ஜே.பி அறிவிப்பு கடிதம்

பல இடங்களில் ஜெயலலிதாவைப் பற்றி புகழ்ந்துள்ளதுடன் பெண்ணாகப் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை ஆண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய இன்ஸ்பிரேஷன் எனவும் கூறிவந்தார். தஞ்சாவூரில் செட்டிலான ஜீவஜோதி டெய்லரிங் மற்றும் ஹோட்டல் தொழிலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த வாரம் வேதாரண்யத்தில் நடைபெற்ற கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பம்பரமாகச் சுழன்று அந்த நிகழ்ச்சியை செய்து முடித்தார். இதையடுத்து தற்போது ஜீவஜோதி பா.ஜ.க தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

பி.ஜே.பி மாநிலத் துணைத் தலைவர் கருப்பு.முருகானந்தம் ஜீவஜோதிக்கு உறவினர் என்பதால் கட்சியில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். முதலில் ஜீவஜோதிக்கு மாநில அளவிலான பொறுப்பை பெறுவதற்கான முயற்சியை செய்து வந்தார்.

அப்போது அவரின் நலம் விரும்பிகள் மாநில அளவிலான பொறுப்பை பெற்றால் அலைச்சல் அதிகமாக இருக்கும் குடும்பத்தைக் கவனிக்க நேரமிருக்காது எனக் கூறியதையடுத்து அதைக் கைவிட்டார். மாவட்ட துணைத் தலைவராக நியமனம் செய்வதற்கு முன்பே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். தற்போது முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் மேலும், முழு நேர அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார்” என்றனர்.

ஜீவஜோதி
ஜீவஜோதி

இது குறித்து ஜீவஜோதியிடம் பேசினோம், ``அரசியல் எனக்கு பிடித்தமான ஒன்று. எப்போதும் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பேன். பா.ஜ.க-வின் கொள்கைகள் பிடித்ததாலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் கவர்ந்ததாலும் பா.ஜ.க-வில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவியும் கொடுத்து அலங்கரித்திருக்கின்றனர். இனி கட்சி தலைமை கட்டளையிடும் பணிகளைச் செய்வதுடன், பா.ஜ.க-வின் புகழை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு முழு நேரமாக உழைக்க இருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு