Published:Updated:

`மத்திய அரசின் தோல்வி தொடங்கிவிட்டது!' - ஜார்க்கண்டைச் சுட்டிக் காட்டும் முகுல்வாஸ்னிக்

``மத்திய அரசு நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. மத்திய அரசின் நாள்கள் எண்ணப்பட்டுள்ளது. மத்திய அரசின் தோல்வி இதிலிருந்தே தொடங்கிவிட்டது” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல்வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

முகுல்வாஸ்னிக்
முகுல்வாஸ்னிக்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். தொடர்ந்து முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

முகுல் வாஸ்னிக்
முகுல் வாஸ்னிக்

அப்போது பேசிய அவர்,``ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இதில், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் வாயிலாக நாட்டு மக்களின் மன நிலைமை என்ன என்பது பிரதிபலித்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தேர்தல் பிரசாரங்கள் ஜார்க்கண்ட் மாநில மக்களிடையே எடுபடவில்லை.

பா.ஜ.க ., வேட்பாளர்களை மக்கள் ஒதுக்கி ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளனர். மத்திய அரசின் கடந்த சில ஆண்டுக்கால ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் வகையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக , தற்போது கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்களும் பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடும்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. மத்திய அரசின் நாள்கள் எண்ணப்படுகிறது.

முகுல் வாஸ்னிக்
முகுல் வாஸ்னிக்

மத்திய அரசின் தோல்வி இதிலிருந்தே தொடங்கிவிட்டது. பா.ஜ.க அரசுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் இதோடு மட்டும் நிற்கப்போவதில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் மக்கள், பா.ஜ.க ஆட்சியை இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவார்கள்” என்றார்.