Published:Updated:

`கொலைக் குற்றவாளிகளை செந்தில் பாலாஜி பாதுகாக்கிறார்!' - ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன் ( நா.ராஜமுருகன் )

`செந்தில் பாலாஜியின் மூலமாகத் தான், இந்த கொலை நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்'

``கரூர் மாவட்டத்தில் இளநீர் வியாபாரம் செய்துவந்த இளைஞர் கிருஷ்ணமூர்த்தி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க துணைநிற்கும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று ஜான் பாண்டியன் போட்ட ட்வீட்டால், கரூர் மாவட்ட அரசியல் களம் சூடாகியிருக்கிறது.

 ஜான் பாண்டியன் ட்வீட்
ஜான் பாண்டியன் ட்வீட்
கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

சமீபத்தில்,கரூர் சின்ன ஆண்டாங்கோயில் கோவில்மேட்டுத் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞரை மர்மகும்பல் ஒன்று பட்டப்பகலில் வெட்டிக் கொலைசெய்தது. இந்தநிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் கரூருக்கு வருகை தந்தார். படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி செய்ததோடு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்
பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்
நா.ராஜமுருகன்

அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்,``தேவேந்திர குல சமூகத்தினை சார்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், அவரது மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டார். `உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வோம்' என்று போலீஸ் உத்திரவாதம் அளித்த நிலையில், அவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்கு, காவல்துறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் கொலையை வைத்தும், அந்த கொலையில் கைது செய்யப்பட்டவர்களை வைத்தும் அரசியல் செய்பவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துக்கொள்கிறோம். அந்த கொலையில் எஸ்.சி, எஸ்.டி சட்டம் போடப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கரூர்: காதல் மனைவி முன்பு வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்! - இளநீர்க் கடை பயங்கரம்

கொலை குற்றத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பாதுகாக்க துணைநிற்கிறார். செந்தில் பாலாஜி பற்றி, என்னை விட கரூர் மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும். அவர் எத்தனை கட்சிகளுக்கு சென்றவர், இன்னும் எத்தனை கட்சிகளுக்கு செல்ல உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆகவே, மக்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் இப்படிதான் செய்வார்கள். செந்தில் பாலாஜி எத்தனை நாள் தியாகி இமானுவேல் சேகரன் கல்லறைக்குச் சென்றார் என்பதை அவரால் சொல்ல முடியுமா?

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்த விவகாரத்தில் அவர் அரசியல் செய்கிறார். அதற்கு, எங்கள் குல மக்கள் தான் கிடைத்தார்களா? மேலும், ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளின் சகோதரர்கள், செந்தில் பாலாஜியின் அடைக்கலத்தில்தான் இருந்துள்ளனர். அப்போது, செந்தில் பாலாஜியின் மூலமாகத் தான், இந்த கொலை நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜான் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்திலும், `கரூர் மாவட்டத்தில் இளநீர் வியாபாரம் செய்துவந்த இளைஞர் கிருஷ்ணமூர்த்தி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க துணைநிற்கும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த ட்விட் கரூர் மாவட்ட தி.மு.க-வினரிடையே சூட்டைக் கிளப்பிய நிலையில், செந்தில் பாலாஜி ஜான் பாண்டியன் ட்வீட்டுக்குப் பதிலளித்திருக்கிறார்.

செந்தில் பாலாஜியின் பதில்
செந்தில் பாலாஜியின் பதில்

செந்தில் பாலாஜி, தனது பதிலில், `படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினரை மருத்துவமனையிலும், மீண்டும் அவரது வீட்டில் தாய், தந்தையரையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிகள் மீதான சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தி.மு.க-வும், நானும் துணை நிற்போம்' என்று தெரிவித்துள்ளார். ஜான்பாண்டியன் பற்ற வைத்துள்ள இந்த விவகாரம், கரூர் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு