Published:Updated:

``அ.தி.மு.க-வில் உள்ள சிலரே எனது தோல்விக்குக் காரணம்.” - ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்
பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன்

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வால் பழிவாங்கப்பட்டதாகவும் அதனால் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

கூட்டத்தில், மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது; பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்; உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், “மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தமிழர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் அங்கு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது.

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.
ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

பட்டியல் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்துள்ள போதிலும், கிறிஸ்துவ மதத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள் சாதிச் சான்று பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு கரணமாகக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவிகிதம் மக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தார்கள். அந்தக் கூட்டணி பெற்ற வெற்றிகளுக்கும் வாக்குகளுக்கும் எங்கள் சமூகத்தினரின் பங்களிப்பு அதிகம்.

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களின் கட்சி சார்பாக வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளைக் கேட்டோம். எங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் தென் மாவட்டங்களில் போட்டியிடும் வாய்ப்பை எனக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் அ.தி.மு.க-வில் உள்ள சிலர் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்குச் சம்பந்தமே இல்லாத எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க-வின் திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையால் நான் தோற்கடிக்கப்பட்டேன். அ.தி.மு.க-வில் உள்ள சிலரே எனது தோல்விக்குக் காரணம். அவர்கள் என் தொகுதியில் பிரசாரத்துக்குக்கூட வரவில்லை.

என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே சம்பந்தமே இல்லாத எழும்பூர் தொகுதியைக் கொடுத்தார்கள்.
ஜான் பாண்டியன்

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை கொடுத்த காரணத்திற்காக நன்றியுணர்வுடன் இருந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறாமல் கொடுத்த தொகுதியில் போட்டியிட்டேன். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றிக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வெற்றிக்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வாக்குகளே காரணம்.

தேர்தலுடன் அ.தி.மு.க-வுடனான கூட்டணி முடிந்துவிட்டது. தற்போது அவர்களுடன் உறவு மட்டுமே இருக்கிறது. அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருப்பதால் அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதனால் அ.தி.மு.க அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது.

ஜான் பாண்டியனுடன் பிரிசில்லா பாண்டியன்
ஜான் பாண்டியனுடன் பிரிசில்லா பாண்டியன்

என் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வரும் 21-ம் தேதி டெல்லிக்குச் சென்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறேன். பிரதமரை சந்திக்கும்போது மேக்கேதாட்டு அணை விவகாரம் பற்றிப் பேசுவேன்” என்று ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு