Published:Updated:

பா.ஜ.கவில் சாய்னா நேவால்... அரசியல் கட்சிகள் பிரபலங்களின் ரிட்டயர்மென்ட் ப்ளானா?

சாய்னா
சாய்னா

அரசியல் கட்சிகளில் இணைந்து வரும் விளையாட்டு வீரர்களின் வரிசையில் தற்போது பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் இணைந்துள்ளார்.

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். ராஜ்யவர்தன் ரத்தோர், மேரி கோம், கௌதம் கம்பீர் வரிசையில் கடந்த 6 ஆண்டுகளில் பி.ஜே.பி-யில் சேர்ந்த நட்சத்திரங்களின் பட்டியலில் சாய்னா நேவாலும் இணைந்துள்ளார். இந்த நிலையில், சாய்னா நேவாலின் அரசியல் நுழைவு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் அரசியலில் நுழைவது ஒன்றும் புதிதல்ல. பல பிரபலங்களும் திடீர் அரசியல் என்ட்ரி கொடுத்து குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட கதைகளெல்லாம் உண்டு. அதற்கு அவர்களின் நட்சத்திர அந்தஸ்தும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் ஏற்றம் காணாமல் சறுக்கியவர்களும் உண்டு.

பி.ஜே.பி - காங்கிரஸ்
பி.ஜே.பி - காங்கிரஸ்

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் பி.ஜே.பி-யில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகி பின்னர் காங்கிரஸில் இணைந்து மாநில அமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸில் இணைந்த முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் தற்போது தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவராக விளங்கி வருகிறார். துப்பாக்கிச் சுடுதலில் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ராஜ்யவர்தன் ரத்தோர் பி.ஜே.பி-யில் இணைந்து தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜேந்தர் சிங் கடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பி.ஜே.பி-யில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 தேர்தலுக்கு முன்பாக பி.ஜே.பி-யில் இணைந்த கவுதம் கம்பீர் தற்போது எம்.பி-யாக உள்ளார்.

பிரபலங்களின் நட்சத்திர அந்தஸ்து மட்டுமே அவர்களுக்கு தேர்தல் வெற்றியைக் கொடுத்துவிடாது என்பதும் உண்மை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேர்தலில் தோல்வியுற்ற வரலாறு உண்டு. அதே நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்துகொண்டே வெற்றி பெற்ற வரலாறு எம்.ஜி.ஆருக்கு உண்டு. ஆனால், பிரபலங்களின் அரசியல் நுழைவு எந்தக் காரணங்களுக்காக, எதை நோக்கமாக வைத்து இருக்கிறது என்பது பற்றிய விவாதங்களும் இங்கு எழுப்பப்படவே செய்கின்றன. எம்.ஜி.ஆர் - சிவாஜி போன்றவர்கள் தங்களுடைய துறையில் உச்சம் பெறுவதற்கு முன்பிருந்தே தங்களை ஒரு அரசியல் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டு செயல்பட்டனர். மேலும், அவர்களின் நட்சத்திர வளர்ச்சியும், அரசியல் வளர்ச்சியும் ஒரு சேர நிகழ்ந்தது என்பதும் உலகறிந்தது.

சினிமா பிரபலங்கள்
சினிமா பிரபலங்கள்

இன்று பிரபலங்கள் தங்களுடைய துறைகளில் செல்வாக்கு இழக்கின்றபோதோ அல்லது ஓய்வு பெறுகிற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறபோதோ மட்டுமே அரசியல் பிரவேசத்தைத் தேர்வு செய்கின்றனர் என்கிற கருத்தும் உள்ளது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்புதான் கௌதம் கம்பீர் பி.ஜே.பி-யில் இணைந்தார். அடுத்து சில கிரிக்கெட் நட்சத்திரங்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற பேச்சுக்களும் அடிபடவே செய்கின்றன.

பரபரப்பான விஷயங்களுக்குப் பஞ்சமில்லாத இன்றைய அரசியல் சூழலில் பிரபலங்கள் சொல்கிற கருத்து, அவர்கள் எடுக்கின்ற நிலைப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துறைகளிலும் பிரபலங்களின் மாறுபட்ட அரசியல் கருத்துகள், நிலைப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரிவுகள் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரிட்டன்... இந்தியாவுக்கு பாதிப்பா?

ஒரு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அரசின் நடவடிக்கையை கண்டித்தோ அல்லது எதிர்த்தோ ஒரு கருத்து தெரிவித்தால், அந்தத் துறையை மற்றொரு தரப்பு அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்க முன்வருகின்றனர். நாட்டில் நடைபெற்று வருகிற கும்பல் கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என சினிமா நட்சத்திரங்கள் பிரதமருக்கு திறந்தமடல் ஒன்றை எழுதி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு எதிர்வினையாக, வேறு சில சினிமா நட்சத்திரங்கள், அரசுக்கு ஆதரவாக பதில் கடிதம் எழுதினர்.

மத்திய அரசு ஜி.டி.பி போன்ற மிக முக்கியமான டேட்டாக்களில் மோசடி செய்வதாகக் கண்டித்து பொருளாதார வல்லுநர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அவர்களைக் கண்டித்து அரசுக்கு ஆதரவாக 131 ஆடிட்டர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

சேவாக் - ஷாருக்
சேவாக் - ஷாருக்

அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பட்டு பிரபலங்கள் சமூக ஊடகங்களிலே வெளிப்படையாக விவாதித்துக்கொண்ட சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இன்றைய அரசியல் சூழலில் பல பிரபலங்களின் மௌனங்கள் கூட கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையின் வன்முறைக்குப் பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ஜாமியாவின் முன்னாள் மாணவர்களான ஷாருக் கானும், சேவாக்கும் மௌனம் காத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் சமயங்களில் அரசுக்கு ஆதரவான சில கருத்துகளும் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கே பிரபலங்கள் பொது விவகாரங்களில் நிச்சயம் நிலைப்பாடு எடுக்க வேண்டிய தேவையுள்ளதா அல்லது அது தங்களின் தனிப்பட்ட முடிவு என மௌனம் காக்கலாமா என்பது மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவாகியுள்ளது. இருந்தாலும் பொதுவெளியில் இயங்கும் சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் ஏதாவதொரு நிலைப்பாடு எடுக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகிவிடுகிறது.

பிரபலங்கள் சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஓர் இடத்தில் இருப்பதனால் அவர்களின் கருத்தும் செயல்பாடுகளும் நிச்சயம் தாக்கம் செலுத்த வல்லவை. சாய்னா நேவாலின் அரசியல் நுழைவைப் பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நீண்டகாலம் அரசியல் விவகாரங்களில் ஈடுபடாமலே இருந்துவந்தார். எந்தவொரு விவகாரம் பற்றியும் சாய்னா நேவால் பொதுவெளியில் கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் அவரின் அரசியல் நுழைவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாய்னா
சாய்னா

பிரதமர் மோடியின் பிரசார உரை ஒன்றின்போது பி.ஜே.பி ஐ.டி பிரிவினர் டிரெண்ட் செய்த அதே கருத்தை சாய்னா நேவாலும் ட்வீட் செய்திருந்தார். அப்போதே பல அரசியல் கணக்குகள் போடப்பட்டன. தற்போது யூகங்களை மெய்ப்பித்து அதிகாரபூர்வமாக சாய்னா நேவால் பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டார். பிரதமர் மோடியின் பணிகள் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும், அவருடன் இணைந்து நாட்டுக்காகப் பணி செய்ய வேண்டும் என்பதற்காக பி.ஜே.பி-யில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சாய்னாவின் அரசியல் ஆட்டம் வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

`பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்!’- தங்கையுடன் பா.ஜ.க-வில் இணைந்த சாய்னா நேவால்
அடுத்த கட்டுரைக்கு