Published:Updated:

`எனக்கு நன்றாகத் தெரியும்... அமைதி கொள்க'- ஆடை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோதிமணி

ஜோதிமணி
ஜோதிமணி

``பெண்களின் உடைகள் ஏன் எப்போதும் விவாதத்திற்கான ஒரு பொருளாக இருக்க வேண்டும். ஒருவருடைய தனிப்பட்ட தேர்வுகள் பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை?''

அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜோதிமணி, பேன்ட் - ஷர்ட் அணிந்து சென்றது, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து தனது ஃபேஸ்புக் தளத்தில் ஆடை குறித்த சர்ச்சைக்கு, "எனது உடைகளை விமர்சனம் செய்யும் காவி, பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

விட்டல் வாய்சஸ் அமைப்பு
விட்டல் வாய்சஸ் அமைப்பு

எந்த தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அது எனது தனிப்பட்ட உரிமையும்கூட. ஆகவே அமைதிகொள்க!" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கிவரும் 'விட்டல் வாய்சஸ்' என்ற அமைப்பு, ஆண்டுதோறும் உலக நாடுகளில் உள்ள இளம் பெண் தலைவர்களை அழைத்து, மாநாடு நடத்தும்.

`இளம் பெண் தலைவர்'... 2-வது முறையாக கௌரவிக்கப்பட இருக்கும் ஜோதிமணி!

அந்த வகையில் இந்த வருடம், 25 நாடுகளைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து, கடந்த 2-ம் தேதி முதல் வரும் 9-ம் தேதி வரை மாநாடு நடத்துகிறது. ஹாரிசன் மாகாணத்தில் நடைபெறும் மாநாட்டில், இந்தியா சார்பில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான ஜோதிமணி அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி அமெரிக்கா சென்ற அவர், பேன்ட்- ஷர்ட் அணிந்து சென்றார்.

அமெரிக்காவில் ஜோதிமணி
அமெரிக்காவில் ஜோதிமணி

அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக, அதற்கு கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. மணப்பாறையில் சுஜித் வீட்டில் இருந்ததையும், அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்களை வைத்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேநேரத்தில், 'இடத்திற்குத் தகுந்தாற்போல் உடை அணிவதில் என்ன தப்பு?' என்று ஜோதிமணிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், தனது உடை குறித்தான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் ஜோதிமணி.

அந்தப் பதிவில், ''சர்வதேச பெண் தலைவர்கள் சந்திப்பிற்கான பயணத்திற்கு, எனது தொகுதியில் இருந்தும் வெளியில் இருந்தும் குவிந்துவரும் வாழ்த்துகள் என்னைப் பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது. அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். எனது உடைகளை விமர்சனம் செய்யும் காவி, பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. எந்தத் தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அது எனது தனிப்பட்ட உரிமையும்கூட. ஆகவே அமைதி கொள்க!

அமெரிக்காவில் ஜோதிமணி
அமெரிக்காவில் ஜோதிமணி

பெண்களின் உடைகள் ஏன் எப்போதும் விவாதத்திற்கான பொருளாக இருக்க வேண்டும்? ஒருவருடைய தனிப்பட்ட தேர்வுகள் பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? இங்கு இருக்கும் அனைத்து ஆண்களும் குறிப்பாக என்னை விமர்சனம் செய்பவர்கள், தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வேட்டியைத் தான் அணிந்துகொண்டிருக்கிறார்களா?

தமிழ்-இந்திய கலாசாரம் என்பது, அடிப்படையில் பிறரை மதிப்பது. அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள். காட்டன் புடவைகள், ஜீன்ஸ் மற்றும் சட்டைகள்மீது எனக்கு ஆழ்ந்த பிரியம் உண்டு. நான் திரும்பியவுடன் மேலும் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன், உங்கள் மனக் கவலைகளுக்காக! அதுவரை கலாசாரம் என்பது என்ன என்று கொஞ்சமாவது ஆழ்ந்து யோசித்துப்பாருங்கள். அதைப் பெண்கள் மட்டும் ஏன் சுமந்து செல்ல வேண்டும், ஆண்கள் ஏன் சுமக்கக் கூடாது?

அமெரிக்காவில் ஜோதிமணி
அமெரிக்காவில் ஜோதிமணி

நான் கலந்துகொள்ள இருக்கும் இந்த சந்திப்பிற்கு முக்கியமான ஒரு திட்டம், பெண் தலைவர்கள் எப்படி, அவர்களுடைய உடைகள், திருமண வாழ்க்கை, அவர்களுடைய புறத்தோற்றம், அவர்கள் எப்படி சிரிக்கிறார்கள் போன்ற விஷயங்களின் அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதுதான். இந்தப் பெண் வெறுப்பு மனநிலையை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தீவிரமாக இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் எங்களோடு இருக்கும் எல்லா ஆண்களுக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு