Published:Updated:

அலங்கோலமான மத்திய எழில் முற்றம்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

இத்தனை வரலாற்றுச் சின்னங்களையும் ஒரே முடிவில் தவிடுபொடியாக்கும் திட்டத்தைத்தான் இன்றைய பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார்.

அலங்கோலமான மத்திய எழில் முற்றம்!

இத்தனை வரலாற்றுச் சின்னங்களையும் ஒரே முடிவில் தவிடுபொடியாக்கும் திட்டத்தைத்தான் இன்றைய பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார்.

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, அதிகார பீடங்களை அடிக்கடி மாற்றிக்கொள்வது அரசியல்வாதிகளின் வாடிக்கை. வரலாற்றில் தலைநகரங்களே பலமுறை பந்தாடப்பட்டுள்ளன. இப்போது பா.ஜ.க-வின் முறை. கடந்த 1911, டிசம்பர் 12-ம் தேதி இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்று பிரிட்டன் அரசு முடிவுசெய்து கால்கோள் நட்டது. 1905-ம் வருடம் வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததால் ஏற்பட்ட கலகங்களை அடக்க முடியாத அன்றைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு, இனி கல்கத்தாவில் குப்பையைக் கொட்ட முடியாது என்று முடிவு செய்து இந்த முடிவை எடுத்தார். எட்வின் லுட்டியன்ஸ் என்ற கட்டடக்கலை நிபுணரின் யோசனையில் புதிய நிர்வாக நகரம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதனாலேயே, இன்றும் புதுடெல்லியை ‘லுட்டியன்ஸ் டெல்லி’ என்றும் அழைப்பார்கள்.

கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

வரலாற்றைத் தவிடுபொடியாக்குவதா?

ஆறு வருடங்களில் பணிகள் முடிந்தாலும், முதல் உலக யுத்தத்துக்குப் பிறகே 1931, பிப்ரவரி 12-ம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், தான் முடிசூட்டிக்கொண்டதற்கு அடையாளமாக டெல்லியில் தனது தர்பாரை மறுநாள் பிப்ரவரி 13-ம் தேதி நடத்தி முடித்தார். ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி தாகூர் எழுதிய கவிதைதான், இன்றைய `ஜன கண மன...’ என்பது பலருக்குத் தெரியாது.

அதற்கு முன்னதாக 1929-ம் வருடம் மத்திய சட்டப்பேரவைத் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதுதான் மாவீரன் பகத்சிங் அந்தப் பேரவையில் குண்டு வீசினார். அதனுடன் தூக்கி எறியப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் இந்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன: “நாங்கள் உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்த வெடிகுண்டை வீசவில்லை. செவிடாகிப்போன உங்கள் காதுகளில் எங்கள் கோரிக்கை விழ வேண்டும் என்று உணர்த்தத்தான் இந்த குண்டை வீசினோம்!”

இதே கட்டடத்தில்தான் இந்திய அரசியல் நிர்ணய சபை இரண்டரை வருடங்கள் விவாதம் நடத்தி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நிறைவேற்றியது. இந்த மத்திய சட்டப்பேரவைதான், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாடாளுமன்றமாக அழைக்கப்படுகிறது. வட்ட வடிவமான இந்தக் கட்டடத்தில் மக்களவையும், மாநிலங்களவையும், உறுப்பினர்களுக்கான அலுவல் அறைகளும், நாடாளுமன்றத்தின் செயலகமும் கடந்த 90 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகின்றன.

இத்தனை வரலாற்றுச் சின்னங்களையும் ஒரே முடிவில் தவிடுபொடியாக்கும் திட்டத்தைத்தான் இன்றைய பிரதமர் மோடி உருவாக்கியிருக்கிறார். அந்தத் திட்டத்தின் பெயர் `மத்திய எழில் முற்றத் திட்டம்’ (Central Vistas Project). அதற்கான மொத்த செலவுத் தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடாளுமன்றத்தின் முக்கோண வடிவக் கட்டடம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்துப் போடப்பட்டிருக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, இதற்கான பூமி பூஜையை மோடி நடத்திவிட்டார். இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவரும், மக்களவைத் தலைவரும் அழைக்கப்படாதது ஏனென்று எவருக்கும் தெரியாது. மீண்டும் ஒரு முறை உச்ச நீதிமன்றம், தனது அனுமதியின்றி இந்தத் திட்டத்தைத் தொடரக் கூடாது என்று உத்தரவிட நேர்ந்தது.

அலங்கோலமான மத்திய எழில் முற்றம்!

64,500 சதுர மீட்டர் பரப்பளவுள்ள புதியக் கட்டடத்தில், 888 மக்களவை மற்றும் 386 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 1,274 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுவதற்கு வசதிகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எதுவாயினும், கோரமான தொற்றுநோயால் கடந்த ஒன்பது மாதங்களாக இன்னலில் சிக்கியிருக்கும் இந்நேரத்தில் ஆடம்பரம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

புதுடெல்லி நகரமைப்பு சட்டத்தின்கீழ் அங்குள்ள நிலங்களின் தன்மையை மாற்றுவது மற்றும் பல அடுக்கு கட்டடங்கள் கட்டுவது இவையெல்லாம் தீவிரமாக ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன. டெல்லியில் இடப்பற்றாக்குறையால் தான் பக்கத்து மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் புதிய காலனிகள் உருவாகியுள்ளன. பல அரசியல் வாதிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்துசெல்லும் டெல்லியின் செயல்பாடுகளை வர்ணித்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலின் பெயர் ‘தந்திர பூமி’ என்பதில் வியப்பேதுமில்லை.

2019-ல் இரண்டாம் முறையாக மோடி அரசமைத்த பிறகு, அவர்களது வரலாற்று அழிப்புச் செயல்பாடுகள் அதிகரித்தன. பைசாபாத்தை `அயோத்தி’ என்றும், அலகாபாத்தை `பிரயாக்ராஜ்’ என்றும் பெயர் மாற்றியவர்கள்... இன்னும் பாபர், அக்பர், ஷாஜஹான், ஜஹாங்கீர் ஆகிய மொகலாய மன்னர்களின் பெயரிலுள்ள சாலைகளின் பெயர்களையெல்லாம் மாற்றுவதற்கு வெகு நாளில்லை!

அலங்கோலமான மத்திய எழில் முற்றம்!

நீதிமன்றம் தடைவிதிக்க முடியுமா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, மக்கள் வரிப்பணத்தில் இப்படி புதிய கட்டடங்கள் எழுப்புவதற்கு நீதிமன்றங்களால் தடைவிதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சட்டங்கள், உத்தரவுகளை ரத்துசெய்யும் அதிகாரம் படைத்த நீதிமன்றங்கள், அதேசமயம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என்றொரு வாதம் எப்போதும் வைக்கப்படும்.

புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்ட தமிழக அரசின் தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் புதிய இடத்துக்கு மாற்ற தி.மு.க அரசு முயன்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அதற்கான புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. ஆனால், 2011-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அரசு அந்த முடிவை மாற்றி, புதிய கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றினார். இன்றைக்கு அந்தக் கட்டடத்திலுள்ள பல இடங்கள் எவ்வித உபயோகமுமின்றி பூட்டிக்கிடக்கின்றன. குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடங்களை, முற்றிலும் வேறுபட்ட பயன்பாட்டுக்காக மாற்றுவது வீண் செயலன்றி, மக்கள் பணத்தைக் குப்பையில் கொட்டுவதாகும்.

ஓர் அரசியல் கட்சியின் கொள்கை என்பது அடுத்த அரசியல் கட்சியின் கொள்கைக்கு மாற்றாக இருப்பினும், அரசு என்ற ஓர் அமைப்பு தொடர்ச்சியான அமைப்பு. அதில் போடக்கூடிய திட்டங்கள், அதற்கான செலவினங்கள் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலக மறுமாற்றத்துக்குத் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால், ராணிமேரி கல்லூரியையும், கிண்டி அரசு பொறியியல் கல்லூரியையும் தலைமைச் செயலகமாக மாற்றுவதற்கான முயற்சிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. அண்ணா நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதற்கான ஜெயலலிதாவின் முன்னெடுப்புக்கும் தடைவிதித்தது.

`புதிய ஆந்திரத்துக்கான தலைநகரம் அமராவதி’ என்றார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. அதற்காக, கோடிக்கணக்கில் செலவு செய்யத் தொடங்கிய அவரது தெலுங்கு தேசக்கட்சி 2019-ல் தோற்கடிக்கப்பட்டது. புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மூன்று தலைநகரங்களை அறிவித்தார். அதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

இதில் விசித்திரம் என்னவென்றால், `ஒரு தாலுகாவின் தலைமை இடத்தை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது’ என்ற முதல் தீர்ப்பை 1988-ல் உச்ச நீதிமன்றம் ஆந்திரப்பிரதேச வழக்கொன்றில்தான் அளித்தது. ஆனால், முடிவுகள் உள்நோக்கம் கொண்டவையாகவும், மக்கள் வரிப்பணம் வீணாகும்போதும் நீதிமன்றங்கள் தலையிடாமல் வேடிக்கை பார்க்க முடியாது. மோடியின் மத்திய எழில் முற்றத் திட்டம், இன்றைக்குப் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. வீண் விரயம் என்பதுடன், இருக்கக்கூடிய கட்டமைப்பை மாற்றத் தேவையில்லை என்ற எண்ணமும் வலுத்து வருகிறது.

ஒரு கோட்டை சிதிலமடைந்துவிட்டால் அதில் மிஞ்சியுள்ள பகுதியை தமிழில் ‘அலங்கம்’ என்று சொல்வார்கள். செங்கோட்டையின் அலங்கத்திலிருந்துதான் நமது பிரதமர்கள் சுதந்திர தின விழாவில் முழக்க உரை நிகழ்த்து கிறார்கள். அதற்கு அருகிலேயே இருக்கக்கூடிய நாடாளுமன்றத்தை அலங்கோலமாக்கி, புதிய எழில் முற்றம் உருவாக்க நினைக்கும் மோடியின் வரலாற்று பக்தியை என்னவென்று சொல்வது? உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கூறும் என்று எதிர்பார்க்கலாம்.