Published:Updated:

பா.ஜ.க-வின் துக்ளக் தர்பார்!

‘மக்கள் நடப்பதை நிறுத்த முடியாது. இருப்புப் பாதையில் உறங்குவோரைத் தடுக்க முடியாது. இவையெல்லாம் மாநிலங்கள் விசாரிக்க வேண்டிய பிரச்னைகள்’

பிரீமியம் ஸ்டோரி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன. சாமானியர்களின் கடைசி நம்பிக்கையாகத் திகழ்ந்த நீதிமன்றங்களும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இவர்கள் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ‘சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ நினைப்பவர்கள், அவர்களின் சூட்கேஸ்களைத் தூக்கிச் செல்லலாமே!’ என்று ஆணவத்துடன் பதில் அளிக்கிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஊரடங்கு காலத்தில் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து மற்ற மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும், சோற்றுக்கு வழி இல்லாமல் சொந்த மாநிலங் களுக்குத் திரும்ப முயன்றுவருகிறார்கள். ஆனால், அரசுகள் இவர்களைத் தடுக்கின்றன. தொழிற் சாலைகள், கட்டுமானங்கள், உணவகங்கள் தொடங்கி விவசாயத் தொழில்கள் வரை கொத்தடிமைகள்போல் வேலை செய்துவந்த இவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால் தொழில்களை எப்படி நடத்த முடியும் என முதலாளிகள் அரசுகளுக்குக் கொடுத்த நிர்பந்தமே இதற்குக் காரணம்.

மத்திய அரசு ‘வந்தே பாரத்’ என வானூர்திகளை அனுப்பி சீனா தொடங்கி அமெரிக்கா வரை உள்ள இந்தியர்களை அழைத்துவர முயன்ற அதே நேரத்தில், சாலைகளில் சாரைசாரையாகச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திரும்பவும் தங்கள் நகரங்களுக்கு அனுப்பப்பட்டனர். இப்படியான சூழலில்தான் அவர்களது இன்னல்களைக் களையும்படி பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு 31.3.2020 அன்று வந்தது. அன்றைக்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர்கூட இல்லை. வெளியில் வந்தவர்களுக்கும் தங்குமிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளோம்’ என்று கூறினார். ஆனால், 45 நாள்களுக்கு மேலாகியும் நிலைமை மாறவில்லை.

பா.ஜ.க-வின் துக்ளக் தர்பார்!

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தின் போபாலுக்கு இருப்புப்பாதை வழியே நடந்து சென்ற 16 தொழிலாளர்கள் பசி மயக்கத்தில் இருப்புப்பாதை யிலேயே உறங்கிவிட, சரக்கு ரயில் அவர்கள்மீது ஏறி பலியானார்கள். இதன் பிறகுதான் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்புப்பாதைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் பயணம் செய்வது அனைவரின் கவனத்துக்கும் வந்தது. ‘இருப்புப்பாதைகளில் ரயில்கள் மட்டுமே செல்ல முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?’ என்று சில அறிவுஜீவிகள் ஞானசூன்யத்தைக் காட்டிக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

கடந்த வாரம் அதை விசாரித்த நீதிபதிகள், ‘மக்கள் நடப்பதை நிறுத்த முடியாது. இருப்புப் பாதையில் உறங்குவோரைத் தடுக்க முடியாது. இவையெல்லாம் மாநிலங்கள் விசாரிக்க வேண்டிய பிரச்னைகள்’ என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். காணொலிமூலம் வழங்கப்படும் இந்தத் தீர்ப்புகள், மக்கள் பிரச்னைகளுக்கு கானல்நீராகவே அமைகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரிட்டிஷார் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆட்சியைப் பிடித்தவுடன் பிரிட்டிஷ் இந்தியாவையும் பிரிட்டிஷ் நாட்டையும் தனித்தனி நாடுகளாக அறிவித்தனர். காலனிநாடுகளை அவர்கள் என்றைக்கும் தங்களது எஜமான் தேசத்துடன் இணைத்துக் கொண்டதில்லை.
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

தேச எல்லைகளை வரையறுப்பதன் மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பினர். மேலும், தங்களது நாட்டில் உருவாக்கப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் காலனி நாட்டின் மக்களுக்கு அளித்ததில்லை.

பல்வேறு காலனிய தேசங்களில் பயிர்கள் உள்ளிட்ட தொழில்களை விரிவுபடுத்துவதற்கு அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காக காலனி இந்தியாவில் ஏஜென்டுகளை அமர்த்தி தொல்குடியினரை அடிமைத் தொழிலாளர்களாக ஏற்றுமதி செய்தனர். இப்படி பிஜி தீவுக்கு கரும்புத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அனுப்பப்பட்ட பெண் தொழிலாளர்கள் படும்பாட்டை, மகாகவி பாரதி பதிவுசெய்துள்ளார்.

அவர் விம்மி விம்மி யழுங்குரல்

கேட்டிருப் பாய்காற்றே! துன்பக்

கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்

மீட்டும் உரையாயோ?”

பஞ்சை மகளிரெல்லாம் – துன்பப்

பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு

தஞ்சமு மில்லாதே - அவர்

சாகும் வழக்கத்தை யிந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ? - ஆ!

வீர காளீ, சாமுண்டி காளீ!”

ஓரளவு நாகரிகம் வளர்ந்த 19-ம் நூற்றாண்டிலும் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே கட்டமைப்புத் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெவ்வேறு பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். குறைந்த ஊதியம், மோசமான பணிச்சூழல் என அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டது.

பா.ஜ.க-வின் துக்ளக் தர்பார்!

முதலாம் உலகப்போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் (ஐ.எல்.ஓ), புலம்பெயர்ந்து அழைத்துச் செல்லப்படும் ஒப்பந்தக் கூலி அடிமைகள் பற்றி சில தீர்மானங்களை நிறைவேற்றியது. குறிப்பாக, தங்கள் உறுப்பு நாடுகள் புலம்பெயர்ந்தவர் களுக்காக சட்டப் பாதுகாப்பு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியது.

ஆனால், இந்தியாவில் மலிவான உழைப்புச் செல்வத்தைச் சுரண்ட நினைத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், உருப்படியான ஒரு சட்டத்தைக் கூட நிறைவேற்றவில்லை. ஒருகட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும், இருப்புப்பாதைப் பணிகளிலும் படும் வேதனைகள் பற்றி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது. அதன் பிறகே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ‘ராயல் கமிஷன்’ இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. 1929-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ராயல் கமிஷனின் அறிக்கையில் இந்தியத் தொழிலாளர்கள் படும்பாடு மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டது.

அந்தக் காலகட்டங்களில் பிளேக், காலரா, மலேரியா, தட்டம்மை என மக்களை கூண்டோடு அழிக்கும் கொள்ளை நோய்கள் பல இருந்தன. நோய்களுக்குப் பயந்து பஞ்சாலைகளில் வேலை பார்த்த தொழிலாளர்கள், ஒட்டுமொத்தமாக ஓடிப்போனார்கள். தொழிலாளர்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டால் பஞ்சாலைகளை நடத்துவது யார்? அதனால், குஜராத்தில் பல பஞ்சாலைகளில் காலரா போனஸ் அறிவிக்கப்பட்டது.

கிராமத்திலிருந்து வேலைக்கு வந்த விவசாயிகள், விவசாயக் காலத்தில் சொந்த ஊருக்கு விவசாயம் செய்ய சென்றுவிடக் கூடாது என்பதற்காக வருகைப் பதிவேடு போனஸ் கொடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது உணவுப் பொருள்கள் பதுக்கப்பட்டன. விலைவாசி தாறுமாறாக உயர்ந்தது. உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆலைகளில் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் வழங்கவும் பணம் கடன் கொடுக்கவும் சொசைட்டிகள் உருவாக்கப்பட்டன. அப்போது உருவானதுதான் பஞ்சப்படி. கொடுமையான பிரிட்டிஷார் காலத்தில்கூட இப்படியெல்லாம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளை உணர்ந்து சில ஊக்கத் திட்டங்களை வகுத்து, அவர்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள்.

பா.ஜ.க-வின் துக்ளக் தர்பார்!

ஆனால் இந்த 21-ம் நூற்றாண்டில், அதே குஜராத்தில் சூரத் நகரிலிருந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் செல்ல குவிந்த ஊழியர்களை, காவல்துறை தடியடி நடத்திக் கலைத்திருக்கிறது. மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் கூடியவர்களும் அடித்து விரட்டப் பட்டனர். சென்னை மணலி அருகிலும் இப்படிக் கிளம்பிய வடமாநிலத் தொழிலாளர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். சென்னையில் கட்டடத் தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள, அவர்களது ஆதார் அட்டைகளை கட்டுமான நிறுவனங்கள் பிடுங்கிவைத்துக் கொண்டன. எதிர்ப்புக்குரல் எழுப்பியவர்களை உள்ளுர் காவல்படை கவனித்துக்கொண்டது.

இவற்றையெல்லாம் தாண்டி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு `தொழிலாளர் ரயில்கள்’ (ஷ்ராமிக் எக்ஸ்பிரஸ்) விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தாலும் அதற்கு கட்டணம் கொடுப்பதிலும் பிரச்னை. `காங்கிரஸ் கட்சி அந்தத் தொழிலாளர்களுக்கான கட்டணங்களைச் செலுத்திவிடும்’ என சோனியா காந்தி அறிக்கை விட்டவுடன் சில ரயில்கள் ஓடின. ஆனால், கர்நாடகத்தில் கட்டுமான நிறுவனங்களின் அழுத்தத்தால் கட்டண ரயில்களும் ரத்துசெய்யப் பட்டன.

இது போதாது என, பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் தற்காலிகமாக முடக்கிவைக்கும் உத்தரவுகள் வரத் தொடங்கியுள்ளன. ‘ஆயிரம் நாள்களுக்கு எந்தத் தொழிலாளர் சட்டங்களும் உத்தரப்பிரதேசத்தில் அமலில் இருக்காது’ என யோகி அரசாங்கம் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. தொற்று நோய் எதிர்ப்பில் மக்களை செல்லாக்காசாக்கி வருவதுடன், உற்பத்தித் துறையில் தொழிலாளர் களை அடக்கி ஆள்வதன்மூலம் லாபத்தை ஈட்டிவிடலாம் என்ற பழைய பிரிட்டிஷ் சந்தைப் பொருளாதார எண்ணங்களே இன்றைய முதலாளிகளிடமும் அரசுகளிடமும் இருக்கின்றன.

மோடி அரசின் தொற்றுநோய் எதிர்ப்புப் போராட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களைவிட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெடும்பயணம் எல்லோர் மனதிலும் முள்ளாகக் குத்திக் கிழிக்கிறது. இதுவரை இந்தத் தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக எண்ணிவந்த பலரது உள்ளங்களில், ஈரம் கசியும் மாற்று எண்ணங்களும் உதயமாகியிருக்கின்றன. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், மோசமான சில முகலாய மன்னர்களின் ஆட்சியை நினைவூட்டுகின்றன.

பா.ஜ.க-வின் துக்ளக் தர்பார்!

தனது தலைநகரத்தை மாற்றிய முகமதுபின் துக்ளக், மக்களை கட்டாயமாக இடம்பெயர உத்தரவிட்டான். பிறகு, மீண்டும் ஒருமுறை பழைய தலைநகரத்துக்கே திரும்பும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தித் திரும்ப வைத்தான். இதுதான் சரித்திரத்தில் அகீர்த்தி பெற்ற பயணங்களாக நமக்குச் சொல்லித்தரப் பட்டது. ஆனால், தற்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இருப்பிடம் நோக்கிய பயணம்தான் சரித்திரத்திலேயே மோசமான நெடும்பயணம் என என்றைக்கும் பதிவில் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு