Published:Updated:

சோஷலிசமும் மதச்சார்பின்மையும் படும்பாடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோஷலிசமும் மதச்சார்பின்மையும் படும்பாடு!
சோஷலிசமும் மதச்சார்பின்மையும் படும்பாடு!

பாரதீய ஜனதா கட்சியும், தனது குறிக்கோள் சோஷலிசம் என்று கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றிக்கொள்ள நேரிட்டதுதான் நகைமுரண்.

பிரீமியம் ஸ்டோரி

இந்திய தேசிய காங்கிரஸும் பாரதீய ஜனதா கட்சியும் தங்களை சோஷலிஸ்ட் கட்சிகளாக மாற்றிக்கொண்டது சென்னை நகரத்தில்தான். இது, இன்றைய தலைமுறையினர் பலருக்கும் புதிய விஷயமாக இருக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய மாநாடு 1955-ம் ஆண்டு, ஜனவரி மாதம் ஆவடியில் கூடியது. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், தமிழக முதல்வர் காமராஜரும் முக்கியப் பங்கு வகித்த மாநாடு அது. இந்தியா சுதந்திரம் பெற்று எட்டு வருடங்கள் ஆகியிருந்தன. இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. முதல் ஐந்தாண்டு திட்டமும் நிறைவேறிவிட்டது. அந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், இளைஞர்கள் மத்தியில் உற்சாகமூட்டவும் ‘சோஷலிச பாணியில் சமுதாயம் அமைப்போம்’ என்ற முக்கியத் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

திடீரென்று சோஷலிச அரிதாரம் பூசிக்கொண்ட காங்கிரஸைக் கிண்டல் செய்து அறிஞர் அண்ணா, தம்பிகளுக்குக் கடிதம் எழுதினார். ‘காகிதப்பூ மணக்காது. காங்கிரஸ் சோஷலிசம் இனிக்காது’ என்றது அந்தக் கடிதம். அவர் சொன்னதுபோல காங்கிரஸ் அளித்த இனிப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சோஷலிச அவதாரமெடுத்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டைவிட்டு காங்கிரஸ் விரட்டப்பட்டது.

 கே.சந்துரு, மேனாள் நீதிபதி,  சென்னை உயர் நீதிமன்றம்
கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

‘சோஷலிச’ பா.ஜ.க!

ஆனால் பாரதீய ஜனதா கட்சியும், தனது குறிக்கோள் சோஷலிசம் என்று கட்சியின் சட்ட திட்டங்களை மாற்றிக்கொள்ள நேரிட்டதுதான் நகைமுரண். கடந்த 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியின் அகில இந்திய கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போதுதான் அவர்கள் அந்தச் சட்டத் திருத்தத்தை செய்தார்கள். தேர்தல் பாசாங்குகளுக்காகவோ அல்லது உண்மையிலேயே தங்களை ஏழைப் பங்காளர்களாகக் காட்டிக்கொள்ளவோ அவர்கள் அந்தச் சட்டத் திருத்தத்தைச் செய்யவில்லை.

இந்திரா காந்தி 1975-ல் கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த 42-வது திருத்தச் சட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு வரிகளில் இரண்டு புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அதுவரை, ‘இந்தியா ஜனநாயகக் குடியரசு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வாசகங்களுடன், ‘இந்தியா சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு’ என்று திருத்தப்பட்டது.

சோஷலிசமும் மதச்சார்பின்மையும் படும்பாடு!

1978-ம் ஆண்டு இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஜனசங்கம் கட்சியுடன் இதர கட்சிகளும் சேர்ந்து `ஜனதா கட்சி’ என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. ‘நெருக்கடி நிலையின்போது கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்வோம்’ என்று கூறிய ஜனதா கட்சி அரசு, அதற்காக 44-ம் அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. அப்போதும் புதிதாகச் சேர்க்கப்பட்ட ‘சோஷலிசம், மதச்சார்பின்மை’ ஆகிய முகப்பு வரிகளை மாற்றவில்லை.

முதன்முறையாக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க., பிரதமர் வாஜ்பாயின் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கடாசலைய்யா தலைமையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையில்கூட அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சேர்க்கப்பட்ட ‘சோஷலிசம், மதச்சார்பின்மை’ ஆகிய வார்த்தைகளை நீக்குவதற்கு பரிந்துரைக்கவில்லை.

`அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு வரிகளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம்...’ என்று பலரும் கருதலாம். ‘அந்த வரிகள் அரசமைப்புச் சட்டத்தின் ஆதார கட்டமைப்பு; வீட்டின் கதவுகளிலுள்ள தாழ்ப்பாள்களின் சாவித் துவாரத்தைப் போன்றது. அதன் மூலம் வீட்டின் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியும்’ என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டது. சத்தியமான வார்த்தைகள் அவை.

இதையொட்டி 1989-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 29A(5) என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்படி, இந்தியாவில் பதிவுபெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யும்போது தங்களது கட்சியின் சட்ட திட்டங்களையும் கொள்கைப் பிரகடனங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் புதிய திருத்தத்தின்படி பதிவு செய்ய விரும்பும் கட்சிகள் தங்களுடைய கட்சிப் பிரகடனத்தில் ‘எங்களது கட்சி இந்தியாவை சோஷலிச, மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்’ என்று அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துகொள்ள முடியாது.

இந்திரா காந்தி - வாஜ்பாய்
இந்திரா காந்தி - வாஜ்பாய்

வார்த்தைகளை நீக்கும் முயற்சிகள்

ராஜாஜி தலைமையில் செயல்பட்டுவந்த சுதந்திரா கட்சி முழுக்க முழுக்க முதலாளித்துவத்தை ஆதரித்த கட்சி. அந்தக் கட்சியினர் தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் அவர்களது கட்சித் திட்டத்தை மாற்ற வேண்டும். எனவே, இந்தத் திருத்தத்தை எதிர்த்து அவர்கள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோல்வியுற்றனர். பின்னர் இதே போன்ற ஒரு வழக்கு 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், ‘இந்திய அரசின் கொள்கை ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுவிட்டது. எனவே, சோஷலிசத்தை நம்பாதவர்களும் இந்தக் குடியரசில் அங்கம் வகிக்க முடியும். புதிதாக அரசமைப்புச் சட்ட முகவுரையில் சேர்க்கப்பட்ட `சோஷலிசம்’ என்ற வார்த்தையால், அந்தக் கொள்கையை நம்பாதவர்களையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, 42-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், `சோஷலிசம்’ என்பதற்கான ஒரு புதிய வியாக்கியானத்தையும் அளித்தது. அதன்படி, ‘சோஷலிசம் என்பது ஒரு பொதுக் கருத்தாக இருக்க முடியாது. அது ஒவ்வொருவரும் பார்க்கிறவிதத்தில் வேறுபடலாம். எனவே, இந்த 42-வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய முடியாது’ என்று தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த விஷயத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு குற்ற மனப்பான்மை எழவில்லை. தங்களது கட்சி சட்டத்தைத் திருத்தி, தாங்களும் மதச்சார்பின்மையையும் சோஷலிசத்தையும் ஆதரிப்பதாகக் கூறிக்கொள்வதால் அவர்களுக்கு இழப்பு ஏதுமில்லை. அப்படி தங்களது கட்சிக் கொள்கையைத் திருத்தவில்லையென்றால் தேர்தலிலேயே நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

சோஷலிசமும் மதச்சார்பின்மையும் படும்பாடு!

எனவே, ஒரு பக்கம் கட்சிக் கொள்கை அறிக்கையை சென்னையில் 1999-ல் கூடிய அகில இந்திய மாநாட்டில் அறிவித்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அந்தக் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர். ராகேஷ் சின்ஹா என்ற பா.ஜ.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் கடந்த மார்ச் மாதம் மாநிலங்களவையில் ‘அரசமைப்புச் சட்டத்திலிருந்து `சோஷலிசம்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் பின்னர் விவாதங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தநிலையில் தற்போது பல்ராம் சிங் மற்றும் கருணேஷ் குமார் சுக்லா ஆகிய இரு வக்கீல்கள் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்களின் மனுவில் ‘சோஷலிசம், மதச்சார்பின்மை ஆகிய இரு வார்த்தைகளையும் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்குவதுடன், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29A(5)யும் ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளனர். மேலும், ‘பழைமையான நாகரிக மற்றும் வரலாற்றுப் பின்னணியுள்ள பாரத தேசத்தில் அரசு தர்மம் என்ற அடிப்படையில் ஆட்சி செய்வதை மாற்றி, கம்யூனிஸ்ட் தத்துவமான சோஷலிசத்தை அரசின் வழிகாட்டு முறையாகத் திணிப்பது தவறு. அது மத உணர்ச்சிகளைப் புண்படுத்தும்’ என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தேர்தலில் நிற்பதற்காகக் கட்சியைப் பதிவு செய்துகொண்டு, சட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக, தங்களது கட்சி சோஷலிசத்தையும் மதச்சார்பின்மையையும் முழுமையாக நம்புகிறது என்று தேர்தல் ஆணையத்திடம் வாக்குறுதியளித்த பா.ஜ.க அந்த நிபந்தனைகளிலிருந்து வெளியேறுவதற்காக இப்படிப் பல வழிகளில் முயன்றுவருகிறது.

தடம்புரண்ட காங்கிரஸ்

ஆனால், காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்களுக்கு அப்படிப்பட்ட தர்மசங்கடம் எதுவும் இல்லை. சோஷலிச பாணி சமுதாயம் என்று 1955-ம் ஆண்டிலேயே அறிவித்ததோடு, 1976-ல் நமது நாட்டை `மதச்சார்பற்ற குடியரசு’ என்று சட்டத்தையும் திருத்திவிட்டு, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் முயற்சியில்தான் காங்கிரஸ் அரசு சோஷலிசக் கொள்கைகளை அப்பட்டமாகக் கைவிட்டுவிட்டு, தனியார்மயமாக்கலை நோக்கி நகர ஆரம்பித்தது. அதே நரசிம்மராவ் ஆட்சியில்தான் 1992-ல் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது. அவர் வழிகாட்டிய பாதையில், நீதிமன்றத்தின் உத்தரவுடன்தான் ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று பா.ஜ.க தனது கனவு திட்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தி முடித்தது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் ஆகிய மூன்று லட்சியங்களில் நடைபோடும் பா.ஜ.க, இன்று இந்தியாவில் `பொதுத்துறையின் நவரத்தினங்கள்’ என்று கூறக்கூடிய தொழில்களை யெல்லாம் தனியார் மயமாக்கியதுடன், ஆண்டாண்டு காலமாக அரசின் அங்கமாக விளங்கும் ரயில்வே துறையையும் விமானத் துறையையும் தனியாருக்கே தாரைவார்த்துவிட்டது.

இந்த இரு கட்சிகளும் தங்களது கட்சி அறிக்கையில் `சோஷலிசத்தையும், மதச்சார்பின்மை யையும் நம்புகிறோம்’ என்று கூறிக்கொண்டாலும் அவர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமாகவும் செயல்படும் இவ்விரு கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்தால்தான் சோஷலிச நடவடிக்கைகளை செயல்படுத்த முடியும். இந்தியாவும் தன்னை மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்று வர்ணித்துக்கொள்ள முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு