Published:Updated:

டீச்சர் ஆதரவுக் குரல்கள்: பாடம் படிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

திறமையான தலைவரைப் பதவியிலிருந்து நீக்குவது நியாயம் இல்லை. அதிகாரம் என்றும் மக்களின் கையில்தான் என்பதை மறக்க வேண்டாம்

பிரீமியம் ஸ்டோரி

‘சி.பி.எம் கட்சியில் முற்றிலும் புதியவர்களுக்கே அமைச்சர் பதவி’ என்ற கட்சித் தீர்மானத்தின் அடிப் படையில், கேரளத்தில் 21 அமைச்சர்களுடன் பினராயி விஜயன் மே 20-ம் தேதி பதவி ஏற்றுவிட்டார். ஆனாலும், ‘கே.கே.சைலஜா டீச்சரை மீண்டும் அமைச்சரவைக்கு அழைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை மட்டும் கேரளத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நிஃபா வைரஸ், கொரோனா வைரஸ் போன்றவற்றைக் கட்டுப்படுத்த சிறப்பாக நடவடிக்கை எடுத்தவர் சைலஜா. கொரோனா அச்சம் தொடரும் இந்தக் கால கட்டத்தில், அவர் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகவேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம்.

பார்வதி
பார்வதி

‘`சைலஜா கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற கூத்துப்பறம்புத் தொகுதி, இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், சைலஜாவுக்கு மட்டனூர்த் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேறு தொகுதியில் போட்டியிட்டாலும், கேரளத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சைலஜாவை மக்கள் வெற்றிபெற வைத்தனர். 60,963 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற்றார். கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், சைலஜா மீண்டும் அமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கையில்தான் மட்டனூர் மக்கள் அமோக வெற்றியை அள்ளிக் கொடுத்தனர். ஆனால், கே.ஆர்.கெளரியம்மா, சுசீலா கோபாலன் போன்ற பெண்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் போல் சைலஜா டீச்சருக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது’’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ரீமா கல்லிங்கல்
ரீமா கல்லிங்கல்

மட்டனூர்த் தொகுதி, முன்னாள் அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் கோட்டை. ‘இரண்டு முறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர்களுக்கு, மூன்றாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம்’ எனக் கொள்கை முடிவு எடுத்திருந்தது கட்சி. அதன் அடிப்படையில் இ.பி.ஜெயராஜனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ‘தனது தொகுதியில் சைலஜா அமோக வெற்றிபெற்றது, இ.பி.ஜெயராஜனுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் கட்சியில் தனக்கு உள்ள மத்தியக்குழு உறுப்பினர் பொறுப்பை பலமாகப் பயன்படுத்தி, சி.பி.எம் கட்சிக் கூட்டத்தில் சைலஜா அமைச்சர் ஆகாமல் இருப்பதற்கான வேலைகளைச் செய்தார்’ என்கின்றனர் சிலர். ‘இரண்டுமுறை தொடர்ச்சியாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர்களுக்கு, அடுத்த முறை போட்டியிட சீட் வழங்கப்பட மாட்டாது’ என்ற கட்சிக் கொள்கை அடிப்படையில், அடுத்த முறை சைலஜாவுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.

சைலஜா டீச்சருக்கு ஆதரவாக நடிகை ரீமா கல்லிங்கல் முதலில் குரல் கொடுத்தார். ‘பெண்ணுக்கு என்ன குழப்பம்’ என அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், நிஃபா, கொரோனா காலச் சவால்களை தைரியமாக எதிர்கொண்ட சைலஜா டீச்சரை, மீண்டும் அமைச்சராக அமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், கே.ஆர்.கெளரியம்மாவும் சைலஜா டீச்சரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இருவருக்கும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பு மூலம் உணர்த்தினார். ரீமா கல்லிங்கலின் கணவர் ஆஷிக் அபு, ‘நிஃபா வைரஸ்’ குறித்து ‘வைரஸ்’ என்ற சினிமாவை இயக்கினார். அதில், சைலஜா டீச்சராக ரேவதி நடித்திருந்தார்.

டீச்சர் ஆதரவுக் குரல்கள்: பாடம் படிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

நடிகை பார்வதி திருவோத்து, ‘`திறமையான தலைவரைப் பதவியிலிருந்து நீக்குவது நியாயம் இல்லை. அதிகாரம் என்றும் மக்களின் கையில்தான் என்பதை மறக்க வேண்டாம்’’ எனக் கொந்தளித்துள்ளார். ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் இடதுசாரி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள். அவர்கள் தொடர்ந்து சைலஜாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சினிமாப் பிரபலங்கள் பலர், ‘இந்தக் காலகட்டத்தில் சைலஜா டீச்சர் இருந்தால் தைரியமாக இருக்கும்’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘பெண் அரசியல்வாதி ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எனப் பொதுமக்களுடன் இணைந்து கேரள சினிமாப் பிரபலங்கள் குரல்கொடுத்திருப்பது அரிதான நிகழ்வு’ என்கின்றனர்.

சைலஜா டீச்சர் ஓரங்கட்டப்பட்டது பற்றியும், ‘பழையவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றால், நீங்களும் ஒதுங்கியிருக்கலாமே’ என்றும் முதல்வர் பினராயி விஜயனிடமே கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, ‘`புதியவர்கள் வரட்டும் என்ற அணுகுமுறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவருக்காகத் தீர்மானத்தைத் தளர்த்தினால், பின்னர் பலருக்காகவும் தளர்த்த வேண்டிவரும். எல்லோரும் புதுமுகம் என்றால், முதல்வரும் புதுமுகமாக இருக்கலாமே என்ற விமர்சனம் சாதாரணமாக வருவதுதான். ஆனால், கட்சி இப்படித்தான் தீர்மானித்தது’’ என்றார் அவர். அதுமட்டுமல்ல, அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதையும் பினராயி சொல்லிவிட்டார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சைலஜா இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ‘`கட்சி சொன்னதால் அமைச்சர் ஆனேன். இப்போது எம்.எல்.ஏ-வாக இருந்து தொகுதி மக்களுக்குப் பணி செய்வேன். எனக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் எழும் கருத்துகள் இரண்டு, மூன்று நாள்களில் மறைந்துபோகும். சுகாதாரத்துறை அமைச்சராக எனது செயல்பாடு சைலஜா என்ற தனி ஒருவரால் நடந்தது அல்ல. இடது ஜனநாயக முன்னணி அரசின் அங்கமாக நடைபெற்றது. இப்போது எம்.எல்.ஏ என்ற முறையில் நான் அந்த அரசின் அங்கமாகச் செயல்படுகிறேன்’’ என்று மட்டும் சொன்னார் அவர்.

ஆனாலும் சைலஜா டீச்சரை அமைச்சராக்க வேண்டும் என்ற ஆதங்கம் தீரவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு