Published:Updated:

மூழ்கிப்போன கப்பல் கல்லூரி! - கேள்விக்குறியான மாணவர் எதிர்காலம்...

கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
கல்லூரி

கே.எஸ். அழகிரியைச் சுற்றும் சர்ச்சை

மூழ்கிப்போன கப்பல் கல்லூரி! - கேள்விக்குறியான மாணவர் எதிர்காலம்...

கே.எஸ். அழகிரியைச் சுற்றும் சர்ச்சை

Published:Updated:
கல்லூரி
பிரீமியம் ஸ்டோரி
கல்லூரி

‘‘என் தந்தை புற்றுநோயால் வீட்டிலேயே முடங்கியிருக்க, என் தாய் கூலி வேலைக்குச் செல்கிறார். அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்ததையும், சொத்தையும் விற்றுத்தான் என்னைப் படிக்கவைத்தார்கள். நான் படித்த பிறகு எனக்கு நல்ல வேலை கிடைத்து குடும்பத்தின் வறுமை தீரும் என்று கனவில் இருந்தார்கள். ஆனால், நான் படித்த கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லாததால், எங்களது கனவு கலைந்துவிட்டது. நான் மட்டுமல்ல... இந்தக் கல்லூரியில் படித்த அனைத்து மாணவர்களின் நிலையும் இதுதான். வறுமையின் கொடுமையில் வாழ்வதா, தற்கொலை செய்துகொள்வதா என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்’’ - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சொந்தமான கல்லூரியில் படித்த ஹரிஹரசுதன் என்ற மாணவர், அழகிரிக்கு எழுதியுள்ள கடிதத்தின் சில வரிகள் இவை!

இந்தக் கண்ணீர் கடிதத்தின் நகல் நமக்கும் கிடைக்க, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதனைச் சந்தித்துப் பேசினோம். ‘‘கப்பல் சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்பது என் கனவு. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் ‘பெருந்தலைவர் காமராசர் கடல்சார் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி’ கொடுத்த விளம்பரத்தை நம்பி, என் பெற்றோர் சொத்தை விற்றும், கடனை வாங்கியும்தான் பணம் கட்டி அந்தக் கல்லூரியில் என்னைச் சேர்த்தார்கள். படித்து முடித்தால் கப்பலில் வேலைக்குச் செல்லலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அந்தக் கல்லூரியில் சரியான ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் இல்லை. அந்த கோர்ஸுக்கான வசதிகளும் இல்லை. இதையெல்லாம் கல்லூரி நிர்வாகத்தில் கேட்டால் பதில் இல்லை... மீறிக் கேட்டபோது மிரட்டினார்கள்.

மூழ்கிப்போன கப்பல் கல்லூரி! - கேள்விக்குறியான மாணவர் எதிர்காலம்...

இந்தநிலையில், மும்பையிலுள்ள கப்பல் போக்குவரத்துத்துறைக்கு கல்லூரியைப் பற்றித் தொடர்ந்து புகார்கள் சென்றதால், கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்து விட்டார்கள். ஆனால், கல்லூரி நிர்வாகம் அங்கீகாரம் ரத்துசெய்யப் பட்ட பிறகும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தது. எங்களுக்கு போலிச் சான்றிதழ் வழங்கி ஏமாற்றினார்கள். இதற்கிடையே கல்லூரியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து கல்லூரித் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். இதில், ‘அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டது சரிதான். மாணவர்களிடம் வாங்கிய கட்டணத்தில் ஐம்பது சதவிகிதத்தைத் திரும்ப வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நானும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால், கல்லூரி நிர்வாகத்திடமிருந்து இதுவரை பதில் இல்லை.

எனது குடும்பத்தில் கஷ்டம் அதிகமாகிவிட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அப்பா முடங்கிக் கிடக்கிறார். அம்மா கூலி வேலைக்குப் போகிறார். எனக்கு வேறு கல்லூரியில் சேரவும் வசதியில்லை. என்னைப்போலவே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 மாணவர்களின் எதிர்காலமும் வீணாகிவிட்டது. என் நிலையை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கடித நகலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்களுக்கும் அனுப்பியுள்ளேன். அவர்களாவது அழகிரியிடம் பேசி எங்கள் பணத்தை வாங்கித் தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் ஆதங்கத்துடன்.

ஹரிஹரசுதன்
ஹரிஹரசுதன்

கல்லூரியைப் பற்றி விசாரித்தோம்... ‘‘கே.எஸ்.அழகிரி குடும்பத்தினர் நடத்திவரும் ‘கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி அறக்கட்டளை’ மூலம் நடத்தப்படும் இந்தக் கல்லூரியில், கப்பல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் உள்ளதாக நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இதனால், ஆறு மாதச் சான்றிதழ் பயிற்சி படிப்புக்கு நாடு முழுவதிலுமிருந்து மாணவர்கள் சேர்ந்தார்கள். ஆனால் கப்பல் துறை சார்ந்த வல்லுநர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் போதிய அளவில் இல்லாததுடன், பயிற்சிக்கான கள வசதிகளும் இல்லை. கடந்த 2019-ம் ஆண்டு இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத்துறைக்கு புகார்கள் சென்றதால் கப்பல் போக்குவரத்துத் துறையின் விதிகளைப் பின்பற்றாதது, அதிக கட்டணம் வாங்கியது, கல்லூரி வளாகத்தில் வசதிகள் இல்லாதது ஆகிய காரணங்களைக் காட்டி, ஐந்தாண்டுகளுக்குக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டார்கள்” என்றார்கள்.

மூழ்கிப்போன கப்பல் கல்லூரி! - கேள்விக்குறியான மாணவர் எதிர்காலம்...

கே.எஸ்.அழகிரியைத் தொடர்புகொண்ட போது, ‘‘என் மகன் தமிழரசுதான் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி. அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று கூறி அவரது செல்போன் எண்ணைக் கொடுத்தார். தமிழரசுவிடம் பேசினோம். ‘‘ஐம்பது சதவிகிதக் கட்டணத்தைத் திருப்பித்தருவது தொடர்பான உத்தரவு மற்றும் அங்கீகாரம் தொடர்பாக எங்கள் மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. மாணவர் ஹரிஹரசுதன் தொடர்ந்த வழக்கும் விசாரணையில் இருக்கிறது. அவருடன் படித்த அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அவர் மட்டும்தான் புகார் கூறிக்கொண்டிருக்கிறார். அங்கீகாரம் இல்லாமல் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறைதான் ஆன்லைன் மற்றும் செய்முறைத் தேர்வை நடத்தியது. அதன் அடிப்படையில்தான் அந்த மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகுதான் அங்கீகாரத்தைத் திரும்பப்பெறுவதாக கப்பல் போக்குவரத்துத் துறையிடமிருந்து எங்களுக்குக் கடிதம் வந்தது. அதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறோம்’’ என்றார்.

கப்பலை வழிநடத்த முடியாத ஒரு கேப்டன், கட்சியை மட்டும் எப்படி வழிநடத்துவார்?