Published:Updated:

``நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா?''- அழகிரி குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்!

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன் கைதானதையடுத்து, `ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம்' என்று பேசிய சீமானைக் கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

'நெல்லை கண்ணன் கைது, தமிழுக்கும் தமிழருக்கும் நேர்ந்த பெருத்த அவமானம்' என்று நாம் தமிழர் கட்சி கொந்தளிப்புடன் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், 'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று வெளிப்படையாகப் பேசிய சீமானை ஏன் கைது செய்யவில்லை...' என்று தமிழகக் காங்கிரஸ் கட்சி கொதித்திருப்பது, தமிழக அரசியலில் அடுத்த பரபரப்புக்கு திரி பற்றவைத்திருக்கிறது.

நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு கூட்டத்தில் ஆன்மிக பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி தமிழக பா.ஜ.க-வினர் மெரினாவில் கூடி போராட்டம் நடத்தினர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இதையடுத்து, பெரம்பலூரில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை தமிழக காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியினர், 'சீமான் ஏன் கைது செய்யப்படவில்லை' என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, ''மோடி, அமித்ஷா பற்றி நெல்லை கண்ணன் அவ்வாறு பேசியிருக்கக் கூடாதுதான். அவரது பேச்சில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், அவரின் இந்தப் பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதைவிடக் கொடூரமாகப் பல பொதுக்கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றியிருக்கிறார். 'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம்' என்று வாக்குமூலமே கொடுத்திருக்கிறார் சீமான். விடுதலைப் புலிகளின் தலைமைகூட, ராஜீவ்காந்தி கொலை பற்றி அவ்வளவு உறுதியாகப் பேசியது கிடையாது. ஆனாலும்கூட, சீமான் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதற்கு என்ன காரணம்?

இத்தனைக்கும் எங்கள் கட்சியினர் சீமானைக் கைது செய்யக்கோரி பல காவல் நிலையங்களில் புகார்களும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மோடி, அமித்ஷாவைப் பற்றிச் சொன்னால் உடனடி நடவடிக்கை; ராஜீவ்காந்தியைப் பற்றிச் சொன்னால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதான் ஒரு மாநில அரசின் செயலா? நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி; சீமானுக்கு ஒரு நீதியா?

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

'பேய் ஆட்சி செய்தால், பிணந்திண்ணும் சாத்திரங்கள்' என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைக்கு தமிழகத்தில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்பதுபோல், பலம் மிக்கவர்கள் பற்றி யாராவது பேசினால், உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். கோலம் போட்டதற்காகக்கூட கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், 'கொலை செய்து புதைத்ததே நாங்கள்தான்' என்று ஒருவர் சுய வாக்குமூலம் கொடுத்த பிறகும்கூட, அவர் மீது நடவடிக்கை இல்லையென்று சொன்னால், இந்த நாட்டில் முறையாக அரசாட்சி நடைபெறுகிறதா, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா, முதல் அமைச்சர் இவற்றைக் கவனிக்கிறாரா, காவல்துறை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கைப்பாவையாக மாறிவிட்டதா என்றெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது.

நெல்லை கண்ணனைப் பொறுத்தவரையில், அவரது அரசியல் வாழ்வில் தவறானவர் என்றோ, வன்முறையைத் தூண்டுகிறவர் என்றோ சொல்ல முடியாது. ஆனாலும்கூட, 'மோடி, அமித்ஷா பற்றிய பேச்சு' என்றதும் பயந்தடித்துக்கொண்டு, புத்தாண்டு அன்றே நெல்லைக் கண்ணனைக் கைது செய்கிற இந்தத் தமிழக அரசு, சீமானைக் கைது செய்வதில் ஏன் இந்த வேகத்தைக் காட்டவில்லை? மத்திய ஆட்சியாளர்கள் மீது தமிழக ஆட்சியாளர்களுக்கு இருக்கும் பயம்தான் இதற்கான காரணம்!

கண்ணியம் மிக்க காவல்துறை, அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அரசின் அடியாட்களாகவோ, வேலைக்காரர்களாகவோ இருக்கக் கூடாது. எனவே, இவ்விஷயத்தில் காவல்துறையையும் தமிழக அரசையும் நாங்கள் கண்டிக்கிறோம்'' என்றார் ஆவேசமாக.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி குறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ''காங்கிரஸ் கட்சியினர், எந்த விஷயத்துக்குப் போராட வேண்டுமோ, அந்த விஷயத்துக்குப் போராட மாட்டார்கள். ஆனால், எந்த விஷயத்துக்குப் போராட்டம் தேவையில்லையோ அந்த விஷயத்தை, தங்கள் அரசியல் லாபத்துக்காகத் திசை திருப்பிப் போராடுவார்கள்.

'ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்ற சீமானின் பேச்சை எக்காரணம் கொண்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; ஒப்புக்கொள்ளவில்லை' என்று நாங்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டோம்.

இப்போது குடியுரிமை சட்டத் திருத்தம் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, பட்டவர்த்தனமாகப் பேசப்பட்ட இந்த விஷயத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?

ராஜீவ்காந்தி படுகொலையான அந்தச் சமயத்தில்கூட, தங்களது ஓட்டு அரசியல் லாபத்துக்காகத்தான் அந்த மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, உணர்வுபூர்வமாக இல்லை. ஆக, ஒரு தலைவன் செத்தால், கொண்டாடக்கூடிய ஒரு கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது. 'தங்கள் கட்சித் தலைவர்கள் யாரையாவது போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா... அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முடியுமா' என்றெல்லாம் பார்க்கக்கூடிய அளவுக்கு மாறிவிட்ட காரணத்தால்தான் அப்போதும் அவர்களுக்கு உணர்ச்சியில்லை... இப்போதும்கூட சீரியஸாக எடுக்கவில்லை. எனவே, 'காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்ற அவர்களது கேள்வி குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை'' என்று ஒதுங்கிக்கொண்டார்.

சீமான்
சீமான்

தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் கேட்டு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்...

'' 'டேய் மரியாதையா பேசு' என்று ஒருவரைக் கைநீட்டி, கோபமாகப் பேசுவதென்பது வேறு; 'டேய் உன்னைக் கொன்னுடுவேன்' என்று பேசுவது வேறு. இந்த இரண்டு பேச்சுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

`கோலம்போட்ட காயத்ரி; அறப்போர் இயக்கத்தை ஏன் சுட்டிக்காட்டினார் கமிஷனர்?' -அதிர்ச்சிப் பின்னணி

நெல்லை கண்ணன், அன்றைக்குப் பேசிய பேச்சு என்பது, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக ஒரு அமைப்பைத் தூண்டிவிடுவதாகத்தான் இருந்தது. ஆக, வன்முறையைத் தூண்டுகிற விதத்தில் இந்தப் பேச்சு உள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில்தான் அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜீவ்காந்தி படுகொலை என்பது, ஏற்கெனவே பல்லாண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கான தீர்ப்பும் சொல்லப்பட்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில், அரசியலில் தான் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சீமான், அப்படியொரு கருத்தை மேடையில் பேசியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

பொதுவாக, பிரபலம் ஆவதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி பிரபலமாக நினைக்கின்றனர். 'அரசியலில் இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் எல்லாம் இருப்பார்களா...' என்பதுமாதிரிதான் பொதுமக்களே இந்தப் பேச்சைப் பார்க்கின்றனர். ஆக, சீமான் பேசிய அந்தப் பேச்சை தமிழக மக்களே விரும்பவில்லை.

எனவே, சீமான், நெல்லை கண்ணன் என இருவரது பேச்சும் வேறு வேறு சூழல்களைக் கொண்டது என காங்கிரஸ் கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்றார் தெளிவாக.

அடுத்த கட்டுரைக்கு