Published:Updated:

`காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி கலந்துகொள்ள முடியும்?'- டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு தங்கபாலு பதில்!

கே.வி.தங்கபாலு
கே.வி.தங்கபாலு

'தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளதா...' என்ற கேள்விக்கு, 'கருணாநிதி - சோனியா; மு.க.ஸ்டாலின் - ராகுல்' ஆகியோரை ஒப்பிட்டுப் பதில் சொல்கிறார் கே.வி.தங்கபாலு.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இடையிலான வெளிப்படையான மனக் கசப்புகள் தமிழக அரசியலை தடம் புரள வைத்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியிருக்கிறது!

நடந்து முடிந்த ஊரக, உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்குப் போதிய இடங்களை தி.மு.க கூட்டணி ஒதுக்கவில்லை என்றக் குற்றச்சாட்டு அக்கட்சியினரிடையே முனகலாக இருந்துவந்தது. இதுவிஷயமாக தங்கள் கட்சித் தலைமையிடமும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் குமுறலாக வெளிப்படுத்தினர். இதையடுத்து கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி, '27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியைக்கூட தி.மு.க எங்களுக்கு வழங்கவில்லை. கூட்டணி தர்மத்தை மீறி நடந்துகொண்டது தி.மு.க' என்று நேரடியாகக் குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கே.எஸ்.அழகிரியின் வெளிப்படையான இந்த அறிக்கை, தி.மு.க தரப்பை கடுமையாகப் பாதித்தது. 'கூட்டணிக்குள் இருப்பவர்கள், தங்களிடையேயான சிறுசிறு பிரச்னைகளை கட்சித் தலைவர்களிடையே பேசித் தீர்த்துக்கொள்வதைத் தவிர்த்து, இப்படி பொதுவெளியில் கொட்டித் தீர்ப்பது நாகரீகமான அரசியல் அல்ல. இது கட்சித் தொண்டர்களிடையே ஒற்றுமையின்மையையும் மன ரீதியிலான பிளவையுமே உண்டாக்கும்' என்று அக்கட்சியின் தலைவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரமும், 'தி.மு.க., கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்ற வருத்தத்தையே காங்கிரஸ் கட்சி அறிக்கையாக வெளியிட்டுள்ளது' என்று கூறி, தங்கள் பக்க நியாயத்துக்கு வலு சேர்த்தார். இது தி.மு.க-வினருக்கு மேலும் எரிச்சலூட்டியது.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தைக் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை கூட்டியிருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் உரசலில் இருந்துவந்த தி.மு.க., இக்கூட்டத்தில் கலந்துகொள்வதையும் தவிர்த்துவிட்டது. இதுகுறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு, 'தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் இந்தச் சூழலில், நாங்கள் எப்படி காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும்...' என்று எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

இப்படி,கூட்டணி இடையிலான மனக்கசப்புகள் வெளிப்படையாக வெடித்துவரும் இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் பேசினோம்...

''தி.மு.க - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதா?''

''எங்கள் கூட்டணியில் ஒரு பிரச்னையும் இல்லை. தி.மு.க - காங்கிரஸ் இடையிலான உறவு தற்போது உறுதியாகவே உள்ளது. தொடர்ந்தும் அது உறுதியாகவே இருக்கும்.''

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

''காங்கிரஸின் டெல்லி தலைமை கூட்டிய கூட்டத்தில், தி.மு.க கலந்துகொள்ளாதது அதிருப்தியின் வெளிப்பாடுதானே?''

''எல்லாம் விரைவில் சரியாகும். கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். எங்கள் மத்திய தலைமையும் தி.மு.க தலைமையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள். அதனால் எந்தப் பிரச்னையும் வராது.''

`அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!'- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்

''தி.மு.க தலைவரை நேரடியாக குற்றம்சாட்டியபிறகு, எப்படி காங்கிரஸ் கூட்டத்தில் பங்குபெற முடியும்... என்று டி.ஆர்.பாலு கேட்டுள்ளாரே?''

''தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இந்தக் கூட்டணி என்பது சோனியாகாந்தி, கருணாநிதி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் மு.கஸ்டாலினும் இணைந்து இதே கூட்டணியைத் தொடர்கிறார்கள். இந்தக் கூட்டணி இனிமேலும் தொடரும்; அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

கூட்டணியைப் பொறுத்தவரையில், சில நேரங்களில், சின்னச்சின்ன பிரச்னைகள் ஏற்படுவதென்பது இயல்பானதுதான். ஆனால், அவையும்கூட சரிசெய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அதுதான் தமிழகத்துக்கும் தமிழக முன்னேற்றத்துக்கும் பயனளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே, தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னையில் விரைவில் நல்லதொரு தீர்வு வரும் என்று நம்புகிறோம்.''

சோனியா காந்தி
சோனியா காந்தி

''உள்ளாட்சித் தேர்தல் பிரச்னை குறித்து, தமிழகக் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக தி.மு.க-வை விமர்சித்திருக்கக்கூடாது என்கிறார்களே?''

''தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிகழ்வுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். நாங்கள் உறுதியாக, ஒற்றுமையாக இருந்து செயல்படவே விரும்புகிறோம். இந்தக் கூட்டணி தொடரவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும்கூட. அதனால், கூட்டணிக்குக் குந்தகம் வராதவகையில் தொடர்ந்து நாங்கள் பார்த்துக்கொள்வோம்.''

''கூட்டணிக்கிடையிலான பிரச்னைகளை தலைவர்களே பேசித் தீர்க்காமல், தனியாக அறிக்கையாக வெளியிட்டது தவறு என்று தமிழகக் காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறதா?''

தங்கபாலு
தங்கபாலு

''இது சம்பந்தமான பிரச்னைகள் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என்றே நான் நம்புகிறேன். தி.மு.க கூட்டணியில் இருப்பதையே நாங்களும் விரும்புகிறோம். இந்தக் கூட்டணி தொடர்வதுதான் தமிழகத்துக்கும் நல்லது. எனவே, இனிவரும் நாட்களில், இந்தக் கூட்டணிக்குள் எந்தப் பிரச்னையும் வராமல், பார்த்துக்கொள்வது எங்களின் கடமை!''

``ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்!'' - இந்தி எதிர்ப்புப் போராளி நடராசனின் மறைவு குறித்து அண்ணா!
அடுத்த கட்டுரைக்கு