Published:Updated:

`எங்கள் உயிருக்கு ஆபத்து..' - தஞ்சையில் கலங்கிய காடுவெட்டி குருவின் சகோதரி

குருவின் சகோதரி செந்தாமரை
குருவின் சகோதரி செந்தாமரை

என் அண்ணன் குருவின் மறைவுக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

`எங்கள் குடும்பத்தை மொத்தமாக அழிக்க நினைத்தால் ஒரு பாட்டில் விஷத்தை வாங்கிக் கொடுத்து கொன்றுவிடுங்கள்' என தஞ்சாவூரில் குருவின் சகோதரி செந்தமாரை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை
காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை

வன்னியர் சங்கத் தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் மருமகன் மனோஜ், அவரின் அண்ணன் மதன் என மூன்று பேர் நேற்று இரவு காடுவெட்டியில் தாக்கப்பட்டதையடுத்து தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதனுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் குருவின் மருமகன் மனோஜ், அன்புமணி ராமதாஸ் தூண்டுதலின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளராக உள்ள ரவி என்பவர் தலைமையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரவி தரப்பிலும் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதன்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸார் தஞ்சாவூருக்கு வந்து குருவின் மகன் கனலரசனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல வேனில் ஏற்றினர். கனலரசனின் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பின்னர் இறக்கி விட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களால் அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் பரபரப்புடன் காணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் செய்தியாளர்களைச் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தார்.

குருவின் மகன் கனலரசன்
குருவின் மகன் கனலரசன்

அப்போது அவர் கூறியதாவது, `` என் அண்ணண் குருவின் மறைவுக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். என் அண்ணன் மகன் கனலரசனை எதாவது செய்ய வேண்டும் என மருத்துவர் குடும்பம் கொலைவெறித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். எங்கள் குடும்பத்தைப் பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதைச் செய்து வருகின்றனர். கனலைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே வெட்டியுள்ளனர். நாங்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படியான தாக்குதலை நடத்தியுள்ளனர். எங்கள் வயலுக்கு வேலைக்கு வருபவர்களை அடித்துள்ளனர்.

என் மீது பொய் வழக்கு போட்டு என் வேலையைப் பறிக்க நினைத்தார்கள். எங்கள் குடும்பத்தை மொத்தமாக அழிக்க நினைத்தால் ஒரு பாட்டில் விஷத்தை வாங்கி கொடுத்துக் கொன்றுவிடுங்கள். வயலுக்குப் போன கனலரசனை ராமதாஸ் உத்தரவின் பெயரில், பா.ம.க மாவட்டச் செயலாளர் ரவி, சின்னபிள்ளை, அவரின் மகன் அய்யப்பன், பாலமுருகன், காமராஜ் மற்றும் அவரின் மகன் சதீஸ் ஆகியோர் தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து, கனல் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து இதைக் கூறிவிட்டு வேறு வழியாக அங்கிருந்து வந்துள்ளார்.

சிகிச்சையில் மதன்
சிகிச்சையில் மதன்

இந்த நிலையில் நேற்று இரவு தாக்கியுள்ளனர். அத்துடன் வெட்டுப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள என் மகனைக் கைது செய்யச் சொல்லி வழக்கு கொடுத்துள்ளனர். அவன் கையில் எந்தவித ஆயுதமும் இல்லை. எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கள் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து வந்தார். ஆனால், தேர்தலிலின்போது அ.தி.மு.க கூட்டணிக்கு பா.ம.க சென்ற பிறகு, போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகும் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனக் கூறி திரும்பவும் போலீஸ் பாதுகாப்புக் கேட்டு மனு அளித்துள்ளோம். ஆனால், இதுநாள் வரை கொடுக்கப்படவில்லை.

எங்களிடம் பூர்விக சொத்துகள் மட்டுமே உள்ளன. பா.ம.க சொத்துகள் எதுவும் எங்களிடம் இல்லை. அறக்கட்டளை சொத்துகளை அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டனர். எங்கள் அண்ணன் இருந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. தற்போது அவரின் மகன் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் எங்களைத் தாக்குகிறார்கள்" என்றார் கலங்கியவாறு.

அடுத்த கட்டுரைக்கு