Published:Updated:

' முதலில் இயக்கமாக...பிறகு கட்சி..!' பா.ம.க-வுக்கு செக் வைக்கும் காடுவெட்டி குரு குடும்பம்

குருவின் மகன்
குருவின் மகன்

ஆளுங்கட்சியினர் உதவியோடு இங்கு 144 தடை உத்தரவைப் போட்டிருக்கிறார்கள். பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருவதாக இருந்தது. இந்தத் தடையால் யாரையும் ஊருக்குள் விடாதபடி செய்து விட்டார்கள்.

காடுவெட்டி குருவின் 59-வது பிறந்த நாளான இன்று அவரது மகன் `காடுவெட்டியாரின் மஞ்சள் படை' என்ற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். இதனால் பதற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காடுவெட்டி பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள் காவல்துறையினர். இந்தத் தடை பா.ம.கவினர் திட்டமிட்டுச் செய்தது என ஆதங்கப்படுகிறார்கள் குருவின் ஆதரவாளர்கள்.

காடுவெட்டி குருவின் குடும்பம்
காடுவெட்டி குருவின் குடும்பம்

வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் பா.ம.க-வில் முன்னணித் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு. `நுரையீரல் மற்றும் தொண்டைத் திசுக்கள் நோயால்’ பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குரு, சிகிச்சை பலனின்றி 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``எனது மூத்த மகனாக நினைத்த குரு என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார். அவர் இருந்து இந்தக் குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நானும் எனது கட்சியும் செய்யும்’’ என்று அறிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க... அன்றிலிருந்து காடுவெட்டி குருவின் குடும்பத்துக்குப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. `சொத்திற்காக எனது பிள்ளைகளைக் கடத்தி வைத்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று குருவின் மனைவி லதா கையொப்பமிட்ட ஒரு கடிதம் வெளிவந்தது. அதன் பிறகுதான் பிரச்னை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அடுத்த நாளே குருவின் மகன் கனலரசன் `எங்க அம்மாவிற்கு எழுத படிக்கத் தெரியாது. அது போலியான கையெழுத்து. யாருடைய பேச்சை கேட்டுக்கொண்டு எங்க அம்மா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்' என்று ஒரு வீடியோ ஒன்றைவெளியிட்டார்.

மஞ்சள் படை
மஞ்சள் படை

அதேநேரம், ``நாங்கள் பிறந்த ஊருக்குள்ளேயே எங்களை விட மாட்டேங்குறாங்க. எனது அண்ணனை ராமதாஸும் அன்புமணியும்தான் கொன்று விட்டர்கள்" என குருவின் தங்கை மீனாட்சி கடுமையான வார்த்தைகளால் பத்திரிகைகளுக்குப் பேட்டிகொடுத்தார். அதன் பிறகு அடிதடி வழக்குகள் எனப் பல சச்சரவுகளை குருவின் குடும்பம் கடந்து வந்தது. இந்த நிலையில் `மாவீரனின் மஞ்சள் படை' என்ற இயக்கத்தை அவரது மகன் கனலரசன் இன்று ஆரம்பித்து உள்ளார்.

மாவீரனின் மஞ்சள் படை
மாவீரனின் மஞ்சள் படை

`இயக்கத்தை ஆரம்பித்துவிடக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சியினர் உதவியோடு நேற்று மாலை 7 மணியளவில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது காவல்துறை. இந்தத் தடை பா.ம.கவினர் திட்டமிட்டுச் செய்தது' என ஆதங்கப்படுகிறார்கள் குருவின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும்.

மீண்டும் பிரச்னை எழ என்ன காரணம் என்பதை விசாரிக்கத் தொடங்கினோம். இதுதொடர்பாக குருவின் தங்கை மீனாட்சியிடம் பேசினோம். ``எனது அண்ணன் இறந்தது முதல் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அச்சுறுத்தல்களால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தோடு பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கனலரசன் `மாவீரனின் மஞ்சள் படை' என்ற இயக்கத்தை ஆரம்பிப்பதற்காக சமுதாய தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டுச் சென்ற போது பல சிக்கல்களை உருவாக்கினார்கள்.

குருவின் தங்கை
குருவின் தங்கை

தலைவர்களும் ஆதரவு தருவதாகச் சொன்னதோடு படத் திறப்பிற்கும் வருவதாகவும் சொன்னார்கள். காடுவெட்டியில் தலைவர்களும் இளைஞர்களும் வந்தால் எங்களது குடும்பம் மீண்டும் போட்டிக்கு வந்துவிடும் என்பதால் ஆளுங்கட்சியினர் உதவியோடு இங்கு 144 தடை உத்தரவைப் போட்டிருக்கிறார்கள். பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருவதாக இருந்தது. இந்தத் தடையால் யாரையும் ஊருக்குள் விடாதபடி செய்து விட்டார்கள். அத்தோடு எங்களது குடும்பத்தாரையுமே ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கும் மேல் வரக்கூடாது என்று சிக்கல் மேல் சிக்கல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

`காடுவெட்டி’ குருவின் மனைவி
`காடுவெட்டி’ குருவின் மனைவி

இவர்கள் நெருக்கடி கொடுக்கக் கொடுக்கத்தான் நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது இயக்கமாக ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு முடிவெடுப்போம். கூடிய விரைவில் ராமதாஸ் குடும்பம் செய்த முறைகேடுகளை வெளி உலகத்திற்குக் கொண்டு வர இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு