Published:Updated:

களமிறங்கிய காடுவெட்டி குருவின் மகன்! - `மஞ்சள் படை' தொடங்கப்பட்ட பின்னணி

 காடுவெட்டி குருவின் குடும்பம்
காடுவெட்டி குருவின் குடும்பம்

அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர். இதுவரையிலும் 128 வழக்குகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார்.

`மாவீரனின் மஞ்சள் படை' என்ற இயக்கத்தை ஆரம்பித்ததோடு, "பெண்களை ஏமாற்றி சொத்துகளைப் பறிக்கும் நாடகக் காதலை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். என் அப்பா வழியைத் தொடர்ந்து பின்பற்றுவேன்" என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்.

மாவீரனின் மஞ்சள் படை
மாவீரனின் மஞ்சள் படை

`நுரையீரல் மற்றும் தொண்டைத் திசுக்கள் நோயால்’ பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல் 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார். அன்றிலிருந்து காடுவெட்டி குருவின் குடும்பதுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியது.

என் அண்ணனின் சாவுக்கு ராமதாஸும் அன்புமணியும்தான் காரணம் என்று குருவின் தங்கை பகிரங்கமாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டிகொடுத்தார். அத்தோடு, குருவின் மகன் கனலரசன், "என் தந்தையை இழந்து எங்களது குடும்பமே தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

காடுவெட்டி குரு குடும்பம்
காடுவெட்டி குரு குடும்பம்

எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்" என்று பேட்டிகொடுத்தார். அதேபோல் குருவின் தாய், கட்சி கட்சின்னு என்னோட புள்ளைய அழிச்ச மாதிரி என்னோட பேரனையும் அழிக்கப் பாக்குறீங்களானு மாநில துணைப் பொதுச் செயலாளர் வைத்தியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபோன்று காடுவெட்டி குரு இறந்த பிறகு, இன்று வரையிலும் அசாதாரண சூழல் நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் குருவின் மகன், மகள் இருவரும் இணைந்து `மாவீரனின் மஞ்சள் படை' என்ற ஒரு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். பா.ம.க-வினரை எதிர்த்து இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்களா என்று பலரை யோசிக்க வைத்திருக்கிறது.

எதற்காக இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்று காடுவெட்டி குருவின் மகன் கனலரசனிடம் பேசினோம். "இது வன்னிய சமுதாய மக்களுக்காக இந்த அமைப்பைத் தொடங்கவில்லை. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் அவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். என் அப்பாவுக்கு மாவீரன் என்று பெயர் சும்மா வரவில்லை. பா.ம.க மேடைகளில் கடுமையான வார்த்தைகளால் பேசுவதால் கிடைத்த பெயர் அல்ல.

குருவின் குடும்பம்
குருவின் குடும்பம்

அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர். இதுவரையிலும் 128 வழக்குகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார். ஒரே ஒரு வழக்கு மட்டும்தான் அவரது சொந்த பிரச்னைக்காக அவர் மீது போடப்பட்டது. மற்ற அனைத்து வழக்குகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான். என் அப்பாவை பட்டியலின மக்களின் விரோதிகள் போலச் சித்திரித்துவிட்டார்கள். ஆனால், எத்தனை பட்டியலின மக்களின் குடும்பங்களை வாழ வைத்திருக்கிறார் தெரியுமா?

அவர் செய்த காரியங்களை வெளியில் கொண்டுவருவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். அத்தோடு அப்பா இருந்தபோது அவரை ஆதரித்த பல சமுதாய தலைவர்களும் எங்களுடன் கைகோக்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களும் எங்களோடு இணைய இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய இருக்கிறோம்" என்றார்.

``அத்தோடு எங்க அப்பாவின் முதல் நோக்கமே நாடகக் காதலை எதிர்ப்பதுதான். அதைத்தான் நாங்களும் செய்யப்போகிறோம். ஒரு குடும்பத்தில் ஆசை ஆசையாக வளர்த்த ஒரு பெண்ணை காதல் என்ற போர்வையில் நாடகம் ஆடி அழைத்துச் செல்கிறது ஒரு கூட்டம். அத்தோடு அந்தப் பெண்ணை தவறான முறையில் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பத்தாரிடம் பணம் பறிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.

கடனில் இருக்கிறதா காடுவெட்டி குரு குடும்பம்?
கடனில் இருக்கிறதா காடுவெட்டி குரு குடும்பம்?

இதுதான் தவறு என்கிறோம். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதைக் கடுமையாக எதிர்ப்பேன். ஒரு பெண் வீதியில் நடந்தால் அது என் அக்காவோ என் தங்கையோ என்று மனதுக்குள் வர வேண்டும். அப்படி நடந்தால்தான் நாடகக் காதல் முற்றுபெறும். இது முற்றுபெறும் வரையிலும் நாங்கள் விடப்போவதில்லை" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு