Election bannerElection banner
Published:Updated:

கனலரசன் கைது விவகாரம்: `ராமதாஸின் தூண்டுதலே காரணம்..!’ - சொல்கிறார் காடுவெட்டி குரு மனைவி

காடுவெட்டி குரு மனைவி சுவர்ணலதா
காடுவெட்டி குரு மனைவி சுவர்ணலதா

`அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரை பல வகையில் சித்ரவதை செய்கிறார்கள்’ என காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம்சாட்டி வந்தனர்.

அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள காடுவெட்டி குருவின் சமாதிக்கு வந்த அவரின் மனைவி சுவர்ணலதா, ``என் மகன் கனலரசன் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராமதாஸ்தான் காரணம். அவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கைது நடந்திருக்கிறது. உடனடியாக அவனை விடுதலை செய்யவில்லையென்றால், நான் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காடுவெட்டி குரு சமாதியில்
காடுவெட்டி குரு சமாதியில்

வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு, கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து குரு குடும்பத்தினருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

``அன்புமணியின் வளர்ச்சிக்கு நாங்க தடையாக இருப்போம் என்கிற காரணத்தால் ராமதாஸ் எங்க குடும்பத்தினரைப் பல வகையில் சித்ரவதை செய்கிறார்” என காடுவெட்டி குரு குடும்பத்தின் தரப்பில் குற்றம்சாட்டிவந்தனர். குரு மறைவுக்குப் பிறகு அவரின் மனைவி சுவர்ணலதாவை ராமதாஸ் மிரட்டி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் ராமதாஸ் செயலை உணர்ந்து வெளியே வந்துவிட்டதாகவும் கூறிவந்தனர்.

காடுவெட்டி குரு மகன் கனலரசன்
காடுவெட்டி குரு மகன் கனலரசன்

இந்தநிலையில் காடுவெட்டி குருவின் மகன், `மஞ்சள் படை’ என்ற அமைப்பை நடத்தி வருவதுடன், அதன் தலைவராகவும் இருந்துவருகிறார். மஞ்சள் படையின் கொடியைப் பல்வேறு இடங்களில் ஏற்றிவந்தார். இதற்கு பா.ம.க தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாகச் சொல்லப்பட்டது. இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றச் சென்ற கனலரசனை போலீஸார் கைதுசெய்தனர்.

பின்னர் பழைய வழக்கு ஒன்றில் 15 நாள்கள் ரிமாண்ட் செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `ராமதாஸின் தூண்டுதலின் பேரில் ஆட்சி மேலிட உத்தரவால் கனலரசன் கைதுசெய்யப்பட்டதாகவும், அரியலூருக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினை கனலரசன் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக ராமதாஸ் காய்களை நகர்த்தி போலீஸுக்கு அழுத்தம் கொடுத்து கனலரசனைச் சிறையில் அடைத்துவிட்டதாகவும்’ குருவின் தங்கை செந்தமாரை குற்றம்சாட்டினார்.

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

இந்தநிலையில், காடுவெட்டியில் அமைந்துள்ள குருவின் சமாதிக்கு அவரது மனைவியும், கனலரசனின் அம்மாவுமான சுவர்ணலதா இன்று வந்தார். கண்கள் கலங்க குருவின் போட்டோ முன் நின்று வணங்கியவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ``மஞ்சள் படையின் கொடியை ஏற்றச் சென்ற என் புள்ளை கனலைக் கைதுசெய்து சிறையில் அடைச்சிருக்காங்க. ராமதாஸின் தூண்டுதலின்பேரிலேயே இந்தக் கைது நடந்திருக்கிறது. உடனே அவனை விடுதலை செய்ய வேண்டும். தேர்தல் நேரம் இல்லையென்றால் பெரிய பிரச்னை ஆகிவிடும்.

காடுவெட்டி குரு மனைவி சுவர்ணலதா
காடுவெட்டி குரு மனைவி சுவர்ணலதா

விடுதலை செய்யப்படவில்லையென்றால், நானே களத்தில் இறங்கி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன். மஞ்சள் படையின் கொடியை எங்கும் ஏற்றுவேன். குருவோட புள்ளை கொடி ஏற்றாமல் வேறு யார் ஏற்றுவார்? அதுமட்டுமல்லாமல் கொடிதானே ஏற்றினான்... வேறு எதாவது பிரச்னை செய்தானா... கொடி ஏற்றுவதில் என்ன தவறிருக்கிறது?

ஏன் இப்படிப் பண்றாங்க... அவன் வளரக் கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்றாங்க. சின்னப் பையனான என் புள்ளையக் கைதுசெய்யக் காரணம் என்ன... ஏற்கெனவே அவனைப் படிக்கவிடாம செஞ்சாங்க. அவன் மேல ஆயிரம் கேஸ் போட்டாங்க. என் கணவர் குரு இருந்திருந்தா யாராவது கிட்ட வந்திருப்பாங்களா... வந்திருக்க முடியுமா?

`ஸ்டாலின் சந்திப்பைத் தடுக்கவே கனலரசன் கைது; கொதிக்கும் காடுவெட்டி குரு குடும்பம்!’ - என்ன நடந்தது?

எந்த இடத்திலும் காடுவெட்டி குரு படம் தெரியக் கூடாது, அவர் குடும்பம் எங்கும் வரக் கூடாது, வளரக் கூடாது என்பதற்காக ராமதாஸ் தூண்டுதலின் பேரில் இவை நடக்குது. எனது கணவர் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளின்போது அவரது நினைவிடத்துக்கு வந்து யாரையும் மரியாதை செய்யவிடாமல் போலீஸார் தடை உத்தரவு போட்டு தடுப்பது ஏன்?

ஜெயலலிதா, கருணாநிதியின் நினைவிடத்துக்கு 144 தடை உத்தரவு போடாத நிலையில், என் கணவரின் நினைவிடத்துக்கு வருவதற்கு மட்டும் ஏன் தடை உத்தரவு போடுகின்றனர்? இது கண்டிக்கத்தக்கது. எனக்கும் பா.ம.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ராமதாஸிடம் பேசுவதில்லை.

காடுவெட்டி குருவின் சமாதியில் அவர் மனைவி சுவர்ணலதா
காடுவெட்டி குருவின் சமாதியில் அவர் மனைவி சுவர்ணலதா

எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என் அம்மா வீட்டில் வசித்துவந்தேன். குரு இருந்தவரை நாங்க வெளியே தெரியாமல் இருந்தோம். உடனடியாக கனலரசனை விடுதலை செய்யவில்லையென்றால் நான் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்” என எச்சரித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு