Published:Updated:

`வெல்கம்' கமல்; சைலன்ட் மோடில் ரஜினி...! - மய்யத்தோடு கூட்டணி சேருமா மன்றம்?

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற கமல் விரும்புவதாகத் தகவல்கள் பரவின. எனினும் கமலுடன் இணைந்து பயணிக்கும் விஷயத்தில் ரஜினிக்குத் தயக்கம் இருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டது.

2021 -ம் ஆண்டு தமிழகம் வித்தியாசமான தேர்தல் களத்தைச் சந்திக்கவுள்ளது. இந்தத் தேர்தலை அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது வாக்களிக்கும் வாக்காளர்கள் வரை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். காரணம், கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆண்ட இரு முக்கிய கதாநாயகர்கள் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் களம் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. திரை நாயகர்களுக்கும் மக்களின் நாயகர்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அதனால், இந்தத் தேர்தல் களம் என்பது மற்ற அரசியல் கட்சிகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் கமல் ரஜினிக்குமே முக்கியம்.

ரஜினி
ரஜினி

கமல் ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் ஆழம் பார்த்துவிட்டார். ஆனால், ரஜினி `வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்’ என அமைதி காத்தாலும் அவ்வப்போது அதிரடியான கருத்துகளால் விவாதங்களில் தனது பெயரைக் கொண்டுவரவும் தயங்கியது இல்லை. நடிகர் விஜய் மாதிரி படத்தின் ஆடியோ லாஞ்ச் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் ரஜினிக்கு இல்லை. போயஸ் கார்டன் வீட்டு கேட்டை திறந்தாலே நேஷ்னல் பிரேக்கிங்தான்.

பெரும்பாலும் ரஜினியின் கருத்துகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் கருத்துகளோடு ஒத்துபோவதால், அவரை பா.ஜ.க வின் ஊதுகுழல் என நேரடியாகவே விமர்சிப்பவர்களும் உண்டு. இதற்கும் நேற்று கேட்டைத் திறந்து, `உணமையைச் சொன்னால் பா.ஜ.க வின் ஊதுகுழல் என்பார்களா? இது போன்ற கருத்துகள் வேதனை தருகிறது’ என்று பதிலளித்தார். முன்னதாக டெல்லிக் கலவரம் தொடர்பாகப் பேசியவர், ``சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதனால் அதைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

ரஜினி
ரஜினி

அதனால் மக்கள் போராடுவதில் பயனில்லை. சில கட்சிகள் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். ட்ரம்ப் போன்ற உலகத் தலைவர்கள் டெல்லி வரும்போது இது போன்ற கலவரங்களை உளவுத்துறை கணித்திருக்க வேண்டும். டெல்லிக் கலவரம் உளவுத்துறையின் தோல்வியைத்தான் காட்டுகிறது. உளவுத்துறையின் தோல்வி என்பது உள்துறையின் தோல்வியையும் காட்டுகிறது. டெல்லிக் கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசைக் கண்டிக்கிறேன்” என்றார் அதிரடியாக.

இதற்கு அடுத்த சில மணிதுளிகளில் ரஜினியின் இந்தக் கருத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வரவேற்று ட்வீட் செய்தார். ``சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்” என்றார். ஏற்கெனவே தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைந்து தேர்தல் களத்தில் சந்திப்போம் எனவும் கூறியிருக்கிறார்.

அரசியலில் ரஜினியும் கமலும் இணையும் அதிசயம் நடக்குமா என்று செய்தியாளர்கள் கமலிடம் கேட்டபோது, ``அதில் அதிசயம் எதுவுமில்லை. ஏற்கெனவே 44 ஆண்டுகள் திரைத்துறையில் சேர்ந்துதான் பயணித்திருக்கிறோம்'' என்றார். அதற்கு, `திரைத்துறையில் மட்டுமா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. ``தமிழகத்தின் மேம்பாட்டுக்காகச் சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம். கொள்கைகள் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம். அதற்கு இன்னும் நேரமிருக்கிறது” என்றார். இது தொடர்பாக அப்போதே சுடச் சுட ரஜினியிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என்றார்.

இந்தப் பதில் மய்யத்தை மகிழ்ச்சியடையச் செய்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற கமல் விரும்புவதாகத் தகவல்கள் பரவின. எனினும் கமலுடன் இணைந்து பயணிக்கும் விஷயத்தில் ரஜினிக்குத் தயக்கம் இருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டது. தான் கொண்ட கருத்துகளை ரஜினி பேசும் போது கமல் அதை வரவேற்கிறார். ஆனால் கமலின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக ரஜினி எதுவும் பேசுவதில்லை. இது தொடர்பாக மநீம கட்சியில் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம், ``தேவைப்பட்டால் மக்கள் நலனுக்காக இருவரும் இணைவார்கள். இவர்கள் இருவருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த மற்றொரு நபர் தேவையில்லை. அவர்களே அந்த அளவுக்கு நண்பர்கள். இணைந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலோடுதான் அவர்கள் வருவார்கள்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

இந்த இரு நட்சத்திரங்களும் இணைவதில் ரஜினி அதிக விருப்பம் இல்லாமல் இருப்பதாக வெளியாகும் தகவல்களை நான் மறுக்கிறேன். அவர்கள் சொன்னபடியே தேவைப்பட்டால் இணைவார்கள்” என்றார். `தனது கொள்கைகளுக்கு ஒத்த கருத்துகளை ரஜினி சொன்னால் உடனே வரவேற்கும் கமல், மாறான கருத்துகள் ரஜினி கூறும்போது அமைதி காப்பது ஏன்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``நேற்று ரஜினி சொன்ன கருத்தில் உடன்பாடு இருந்ததால் கமல் உடனடியாக அதை வரவேற்றார். அதே நேரம் தனக்கு உடன்படாத கருத்துகளைத் தெரிவிக்கும் போது அமைதி காப்பதுதான் நல்ல நட்பு. தேவைப்படும் போது அவர்களே இந்த முரண்களைப் பற்றி அமர்ந்து பேசுவார்கள். கமல்தான் ஆசைப்படுகிறார், ரஜினி விரும்பவில்லை போன்ற கருத்துகளை ஏற்கமுடியாது. இப்போது அது பற்றிப் பேசுவது அவசியமில்லை என்று தோன்றுகிறது.

இங்கு அரசியல் வியாபாரம் நடக்கிறது. யாராவது எதாவது சொன்னால், உடனே சென்று வரவேற்றோ விமசிர்த்தோ பேச வேண்டிய கட்டாயமில்லை. சிஏஏ-வுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளோம். போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளோம். ஆனால், மற்ற சில கட்சியினர் விமர்சித்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறார்கள்” என்றார்.

ரஜினி தரப்பில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த `ரஜினி' பாஸ்கரனிடம் பேசினோம்.. ``தலைவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ரஜினி - கமல் இணைப்பை அரசியலில் விரும்பவில்லை. நான் மட்டுமல்ல, ரஜினி அரசியல் வரவுக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் யாரும் இதை விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். எனினும் ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். அதில் மாற்றமில்லை. தனிப்பட்ட முறையில் ரஜினி தனியாகத் தேர்தலைச் சந்திப்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

`ரஜினி' பாஸ்கரன்
`ரஜினி' பாஸ்கரன்

கட்சி அறிவிப்பு தொடர்பாகவும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். பூத் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் அரசியல் மாநாடு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் கன்ஃபார்ம், தேதியை ரஜினி முடிவு செய்வார் என்கிறார்கள் மன்றத்தினர். இதன் பின்னர்தான் ரஜினி, கமல் இணைப்பு விஷயங்கள் பற்றி ஒரு தெளிவுகிடைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு