Published:Updated:

`வேண்டாம் கமல்நாத் ஜி... இந்த வயதில் கத்துவது நல்லதல்ல!’ - ம.பி முதல்வரை விமர்சித்த அமித்ஷா

இந்த வயதில் கத்த வேண்டாம். அது உடல் நலத்துக்கு நல்லதல்ல என மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தை விமர்சித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அமித்ஷா
அமித்ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.

குடியுரிமை விழிப்புணர்வு தொடர்பாக மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், ``என்ன எதிர்ப்பு வந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். எங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப்போவதில்லை" என்று கூறினார். அந்த மேடையில் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் வயதைக் குறிப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`ஒரு அங்குலம்கூட பின்வாங்கப் போவதில்லை!' - குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அமித் ஷா #CAA
நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர என் வயதை இல்லை.
ம.பி முதல்வர் கமல்நாத்

``குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம், இந்த வயதில் கத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. முதலில் மத்தியப் பிரதேசத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யுங்கள்” என விமர்சித்தார் அமித்ஷா.

கமல்நாத்
கமல்நாத்

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கமல்நாத், ``எங்கள் அரசின் சிறந்த செயல்பாடுகளை ஒரு வருடத்தில் காட்டியுள்ளோம். 365 நாள்களில் செய்ய வேண்டிய வாக்குறுதிகளை 265 நாள்களில் செய்து முடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை. பல இளம் பா.ஜ.க தலைவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து இந்த வயதிலும் மக்கள் என்னை நம்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.