Election bannerElection banner
Published:Updated:

`என்னைப் பின்னாலிருந்து பொம்மலாட்டம் ஆட்டுவிக்க முடியாது!’ - கமல்ஹாசன் காட்டம்

கமல்
கமல்

`விழுப்புரம் மாவட்டத்தில் 80,000 ரூபாய்க்கு ஒரு குடும்பமே கொத்தடிமையாகி இருப்பது இனி நடக்காது. கந்துவட்டிக் கொடுமையும் இனி இருக்காது. எது கிடைத்தாலும் கொள்ளையடிக்கிறார்கள்.’ - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், `சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவருகிறார். இரண்டாம்கட்டப் பயணமாக நேற்று விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம்

அதன்படி நேற்று காலை விழுப்புரம் மகாராஜா திருமண நிலையத்தில் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து அவர்கள் மத்தியில் பேசியபோது, ``கார்களையும், மோட்டார் சைக்கிள்களையும் வேகமாக ஓட்டி வந்தவர்களுக்கு நன்றி. நாளைய தலைவர்கள் நீங்கள். அதனால் ஒரு தாயின் பதற்றத்துடன் கூறுகிறேன். நம்மை நிரூபிக்க வேண்டியது ரோட்டில் இல்லை, வாக்கில்.

விழுப்புரம் மாவட்டத்தில் 80,000 ரூபாய்க்கு ஒரு குடும்பமே கொத்தடிமையாகியிருப்பது இனி நடக்காது. கந்துவட்டிக் கொடுமையும் இனி இருக்காது. எது கிடைத்தாலும் கொள்ளையடிக்கிறார்கள். தென்பெண்ணை ஆறு மக்களின் சொத்து. இனி யாரும் அதில் கைவைப்பதற்கு விடக் கூடாது. வெள்ளையர்களே மேல் என்று தோன்றுகிறது, இந்தக் கொள்ளைக்காரர்களைப் பார்க்கும்போது. எதைப் பார்த்தாலும் வாயில் போட்டுக்கொள்கிறார்கள்.

கமல்
கமல்

மற்ற மாநிலங்களைவிட, தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள். இவர்களுக்கு நான் தரும் முதலிடத்தைப் பட்டியலிடுகிறேன். ஊழலில் முதலிடம், மாநிலத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதில் முதலிடம். மணல் கொள்ளையில் முதலிடம். தமிழகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் ஏழு அம்ச திட்டங்களில் படிப்படியாகக் கொண்டு வருவோம். `வெள்ளையனே வெளியேறு’ என்பது போல, `கொள்ளையனே வெளியேறு’ என்ற திட்டம் தொடங்கிவிட்டது. பிரதமர் தொலைக்காட்சியில் வருகிறார் என்றால், மக்கள் குலை நடுங்குகிறார்கள். மக்கள் நீதி மய்யம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால் எங்கள் எம்.எல்.ஏ-க்கள் உடனே ராஜினாமா செய்வார்கள். அதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்கள். அதில் தேதி மட்டும்தான் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.

கடலூர்:

பிற்பகல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கமல்ஹாசன் அந்தப் பகுதிகளிலுள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களைச் சந்தித்து உரையாற்றியவர், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

கமல்
கமல்

அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரு கட்சிகளுமே தொடர்ந்து பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுச் சுமத்திவருகின்றனவே?

``அவர்கள் ஒருவர்மீது ஒருவர் சொல்லிக்கொள்ளூம் குற்றச்சாட்டுகளே எங்களுக்கு வசதியாக இருக்கின்றன. நாங்கள் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. பட்டியலிட்டு அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைக்கும் அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தைத் திரட்டினால் போதுமானது. அதை நாங்கள் செய்வோம், எங்களுடைய அரசியல் பழி போடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல, வழிகாட்டும் அரசியலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."

திராவிடக் கட்சிகளை தோற்கடிக்கத்தான் ரஜினி மற்றும் கமல் இருவரும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுவைக்கப்படுகிறதே?

``என்னைப் பின்னாலிருந்து பொம்மலாட்டம் ஆட்டுவிக்க முடியாது. அத்தகைய பொம்மை அல்ல நான். வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டேன் நான்."

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவது குறித்து..?

``மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. உடனே அதற்கான பெயரைச் சொல்லுங்கள் என்றால், இப்போது சொல்ல இயலாது. மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் வரவேற்பு, எழுச்சி பற்றிப் பேசலாம்” என்று முடித்துக்கொண்டார்.

புதுச்சேரி:

இரவு புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் வழக்கறிஞர்கள், தொழில்முனைவோர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கமல்ஹாசன் முன் கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரியை உலக வரைபடத்தில் சேர்க்க மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும். அரசியல்வாதிகளும் ரெளடிகளும் புதுச்சேரியைச் சீரழித்துவிட்டனர் என்பது நிதர்சன உண்மை.

கமல்
கமல்

புதுச்சேரியில் தற்கொலையின் பட்டியல் தேசிய அளவை மிஞ்சுகிறது. எனது தனிப்பட்ட அக்கறையிலும், நேரடி கவனிப்பிலும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். புதுச்சேரியின் நீண்டகாலக் கோரிக்கையான மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தருவோம். என்னை நடிகனாகப் பார்க்க வேண்டாம். உங்கள் வீட்டு விளக்காகப் பாருங்கள்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு