Published:Updated:

``கமலை அசிங்கப்படுத்த அழைத்தார்களா?” - கொதிக்கும் ஆதரவாளர்கள்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இதே நிலை வேறொரு கட்சித் தலைவருக்கு ஏற்பட்டிருந்தால், அவர்கள் சும்மா இருப்பார்களா?

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து தொடர்பாக விளக்கம் பெற வேண்டி, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி நேரில் விளக்கமளிப்பதற்காக, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கமல்ஹாசன் இன்று காலை 10:30 மணிக்கு வந்திருந்தார். அவரை போலீஸ் கையாண்ட விதம்தான் அவரது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கமிஷ்னர் அலுவலகத்தில் கமல்ஹாசன் ஆஜர்
கமிஷ்னர் அலுவலகத்தில் கமல்ஹாசன் ஆஜர்
``கமலை அசிங்கப்படுத்த அழைத்தார்களா?” - கொதிக்கும்  ஆதரவாளர்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், "விசாரணைக்காக கமல்ஹாசன் இன்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தபோது, அவரை அழைத்துச்செல்ல ஒரு பி.ஆர்.ஓ கூட இல்லாதது அதிர்ச்சியளித்தது. காரில் இருந்து அவர் இறங்கும் போதே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, தடுப்புப் பதாகைகள் கீழே விழுந்தன. ஒரு கட்சியின் தலைவர் வரும்போது, அதற்கேற்றாற்போல போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், கமிஷனர் அலுவலகத்திலேயே போலீஸார் எந்த முன்னேற்பாடும் செய்யாமல்தான் இருந்தனர். தொண்டர்கள்தான் கமலை அரவணைத்து, பாதுகாப்பாக அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றோம். அங்கே சென்றபின்னர், எங்கே செல்வது என்று தெரியவில்லை.

`வெல்கம்' கமல்; சைலன்ட் மோடில் ரஜினி...! - மய்யத்தோடு கூட்டணி சேருமா மன்றம்?

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அவர் ஆஜராக சம்மன் வந்திருந்தது. அது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. பின்னர், பத்திரிகையாளர்கள் சிலர்தான் அந்த அலுவலகம் இரண்டாம் தளத்தில் இருப்பதாக உதவினர். இரண்டாம் தளம் செல்வதற்காக கமல்ஹாசன் பொதுமக்கள் பயன்படுத்தும் லிஃப்ட் அருகிலேயே ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வரிசையில் நின்றிருந்தார். பின்னர் கூட்டம் அதிகமானதால், படியிலேயே ஏறி இரண்டாவது மாடிக்குச் சென்றார். சில நாள்களுக்கு முன்னர், இயக்குநர் ஷங்கர் விசாரணைக்காக இதே கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரை வரவேற்று அழைத்துச் செல்ல ஒரு பி.ஆர்.ஓ-வை ஏற்பாடு செய்திருந்தார்கள். நேரடியாக கமிஷனரின் அறைக்குச் சென்ற இயக்குநர் ஷங்கர், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுடன் ஒன்றரை மணிநேரம் அளவளாவிவிட்டு, பின்னர் விசாரணைக்கு ஆஜரானார். ஒருமணிநேர விசாரணைக்குப் பின்னர், விஐபி லிஃப்ட் வழியாக அவரை போலீஸார் வழியனுப்பிவைத்தனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எங்கள் தலைவருக்கு விஐபி ட்ரீட்மென்ட் எல்லாம் வேண்டாம், அதை அவர் விரும்புவதும் இல்லை. குறைந்தபட்சம் எங்கே செல்ல வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும் என்பதைக் கூறக்கூடவா ஆள் இல்லை? காலில் எழும்புமுறிவு அறுவைசிகிச்சை எடுத்துக் கொண்டவரை ஐந்து நிமிடத்திற்கு மேலாக லிஃப்ட்டுக்காக நிற்கவைத்ததுதான் வேதனையைத் தருகிறது. இதே நிலை வேறொரு கட்சித் தலைவருக்கு ஏற்பட்டிருந்தால், அவர்கள் சும்மா இருப்பார்களா?

துணை ஆணையர் நாகஜோதியின் முன்பு ஆஜராக கமல்ஹாசன் வந்தபோது, சிறிது நேரம் வெளியில் காக்கவைக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டார். விபத்து எப்படி நிகழ்ந்தது, சம்பவத்தின்போது கமல் எங்கே நின்றிருந்தார், அப்போது அவருடன் யாரெல்லாம் ஷூட்டிங்கில் இருந்தார்கள், யார்மீது தவறு இருக்கிறது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்துக்கும் அமைதியாக கமல்ஹாசன் பதிலளித்தார். சில விஷயங்களை சினிமா துறையும் மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனக் கூறினார். காலையிலேயே வெறும் பால் மட்டுமே அருந்திவிட்டு வந்துவிட்டதால், மதியம் 12:30 மணியானவுடன் அவர் சோர்வடைந்துவிட்டார். உடனடியாக பழங்களும் மாத்திரையும் காரிலிருந்து எடுத்துவந்து கொடுத்தோம். அதற்குள்ளாக விசாரணை முடிந்துவிட்டது என கிளம்பச் சொல்லிவிட்டனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இயக்குநர் ஷங்கரை ஒரு மாதிரியும், கமல்ஹாசனை ஒரு மாதிரியும் சென்னை போலீஸார் விசாரணை செய்துள்ளனர். காவல்துறையின் சம்மனை ஏற்று ஓடி ஒளியாமல், ஒரு சம்பவத்தின் சாட்சியாக ஆஜராக வந்தவரை இப்படி நடத்தியிருப்பது வேதனையைத் தருகிறது. கமலை விசாரணைக்கு அழைத்தார்களா, இல்லை அசிங்கப்படுத்த அழைத்தார்களா என்பது புரியவில்லை" என்றார்.

``எங்களை எதிர்த்துத் தீர்மானம் போடப்போறீங்களா?" - வெடித்த அமித் ஷா... மிரண்ட தமிழக அமைச்சர்கள்!

இந்தியன் 2 விபத்து சம்பவத்தில், இ.வி.பி. ஃபிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர் சந்தோச ரெட்டியைத்தான் முதலில் விசாரணைக்கு அழைத்திருக்க வேண்டும். அவரையும் விசாரிக்காமல், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவையும் விசாரிக்காமல், கமலை அழைத்து விசாரித்திருப்பதே அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் என்று குற்றம் சாட்டுகிறது கமல் தரப்பு.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மத்திய குற்றப்பிரிவு உயரதிகாரிகளிடம் பேசினோம். "விசாரணைக்கு கமல்ஹாசன் முழு ஒத்துழைப்பு அளித்தார். தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாகத் தன்னுடைய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அவரைக் காக்கவைத்து நாங்கள் சிறுமைப்படுத்தவில்லை. அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு வரும் சரியான நேரத்தை முன்கூட்டியே கூறியிருந்தால், அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்திருப்போம். கடைசி நேரத்தில் கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவர். தயாரிப்பாளர், ஷூட்டிங் நடத்தப்பட்ட பொழுதுபோக்குப் பூங்காவின் நிர்வாகம் என யாரும் விசாரணையில் இருந்து தப்ப முடியாது" என்று விளக்கமளித்தனர்.

தேவைப்பட்டால், கமல்ஹாசனை மீண்டும் சிபிசிஐடி விசாரணைக்கு அழைக்கலாம். இன்றைய கமிஷனர் அலுவலகத் தள்ளுமுள்ளுகளைப் பார்க்கும்போது, இதில் அரசியல் விளையாட்டு இல்லாமலும் இல்லை என்பது புரிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த கட்டுரைக்கு