Published:Updated:

``போக்கிடமின்றி அரசியலுக்கு வரவில்லை!" - பரமக்குடி விழாவில் கமல்ஹாசன்

விழாவில் கமல்ஹாசன்
விழாவில் கமல்ஹாசன்

``எனக்கு பாடம் கற்பித்த ஆசான்கள் எல்லாம் எனக்குத் தந்தையாக மாறிப்போனார்கள். அவர்களில் ஒருவர் இயக்குநர் பாலசந்தர். அவரது சிலையை நாளை எனது அலுவலகத்தில் திறக்க உள்ளேன்.''

''நான் போக்கிடம் இன்றி அரசியலுக்கு வரவில்லை. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்துக்கான தேவையே என்னை அரசியலுக்கு வர வைத்தது'' என பரமக்குடியில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

விழாவில் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர்
விழாவில் கமல்ஹாசன் மற்றும் குடும்பத்தினர்

இந்திய திரையுலகின் ஆளுமைகளில் ஒருவராக இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் 60 ஆண்டு திரையுலகப் பணியை சிறப்பிக்கும் வகையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் 3 தினங்கள் கொண்டாட திட்டமிட்டுள்ளது. முதல் நாள் நிகழ்வாக கமல்ஹாசனின் 65-வது பிறந்த தினமான இன்று அவரது சொந்த ஊரான பரமக்குடியில் நடைபெற்றது. பரமக்குடி அருகே உள்ள தெளிசாத்தநல்லூரில் நடந்த இந்த விழாவில் கமல்ஹாசனின் தந்தை சுதந்திரப் போராட்ட தியாகியும் வழக்கறிஞருமான சீனிவாசனின் மார்பளவு சிலையை சாருஹாசன் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய கமல், ``எனக்கான திட்டத்துடன் என்னை வளர்த்தவர் என் தந்தை. சினிமாவில் நடித்த பிறகு, இரவில் உயர் கல்வி கற்றுக்கொள்ளச் சொன்னார். அதற்கு மறுத்ததால் சங்கீதமாவது கற்றுக்கொள் என்றார். என் குடும்பத்தில் எல்லோருமே கலா ரசிகர்கள்தாம். அவர்களது கலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினேன். நகைச்சுவை - ரெளத்திரம் என எல்லாமும் கலந்தவர் என் தந்தை. போகும் பாதையில் எது தென்படுகிறதோ அதைச் செய் என வழிகாட்டினார். அதன் விளைவாகவே இங்கு திறன்மேம்பாட்டு மையத்தைத் தொடங்க உள்ளேன்.

விழாவில் பேசிய கமல்ஹாசன்
விழாவில் பேசிய கமல்ஹாசன்

எனக்கு பாடம் கற்பித்த ஆசான்கள் எல்லாம் எனக்குத் தந்தையாக மாறிப்போனார்கள். அவர்களில் ஒருவர் இயக்குநர் பாலசந்தர். அவரது சிலையை நாளை எனது அலுவலகத்தில் திறக்க உள்ளேன். சிலையைத் திறப்பது ஊர் பார்க்க என்பதைவிட நான் பார்க்கவும் புளகாங்கிதம் அடையவும்தான். பூஜை செய்ய சிலை அமைக்கவில்லை. அவர்களைப் பின் தொடர வேண்டும் என்பதற்காகவே. நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அந்த ஒருவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்.

`அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். ஆனால்...' கமல் `பளிச்' கருத்துகள்!

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தும் நிலை வந்தால் நீ அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அந்த நிலை தற்போது வந்ததால்தான் அரசியலுக்கு வந்தேனே தவிர போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை" என்றார்.

கமல்ஹாசன் விழாவில் பங்கேற்றவர்கள்
கமல்ஹாசன் விழாவில் பங்கேற்றவர்கள்
உ.பாண்டி

முன்னதாக விழா அரங்கத்தில் மரக்கன்றை நட்ட கமல்ஹாசன், பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்படுத்தப்படவுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு பயிலகத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா, சகோதரர் சாருஹாசன், சகோதரி நளினி, நடிகர் பிரபு, நடிகை சுஹாசினி, கவிஞர் சிநேகன், நடிகை பூஜா குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு