Published:Updated:

கமல் தலைமையில் 3-வது அணி: யார் இணைவார்கள்... என்ன தாக்கம் ஏற்படும்?

கமல்
கமல்

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டிருக்கிறார். இதில், எந்தக் கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது? சட்டமன்றத் தேர்தலில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

அ.தி.மு.க., தி.மு.க என்கிற இரண்டு பெரிய கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளுக்கு மத்தியில் மூன்றாவது அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள ம.நீ.ம., ஏராளமான சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளைத் தன் தலைமையிலான கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியிலும் முனைப்புக்காட்டிவருகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3 சதவிகிதம் வாக்குகள் பெற்ற ம.நீ.ம., அதன் தலைவர் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. தி.மு.க கூட்டணிக்கு வருமாறு ம.நீ.ம-வுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., கூட்டணிக் கதவை சாத்திவிட்டது.

கமல்
கமல்

கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பெரும்பாலான கட்சிகள், அ.தி.மு.க மற்றும் தி.மு.க தலைமையிலான கூட்டணிகளில் உறுதியாகிவிட்டன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்பதில் உறுதியாக இருக்கிறது. அ.ம.மு.க-வும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பதாகத் தெரிகிறது. தங்கள் ஆதரவு யாருக்கும் கிடையாது என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துவிட்டது. இந்தச் சூழலில், ம.நீ.ம கட்டமைக்கும் கூட்டணி எந்தளவுக்கு பலம் வாய்ந்ததாக இருக்கும், அது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேலிடம் பேசினோம். ``2021 சட்டமன்றத் தேர்தல் களம் புதிதானது. இதுவரை ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளும் இல்லாத நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலையில் புதிய தலைவரைத் தமிழகம் தேடிக்கொண்டிருக்கும் சூழலில், இது எங்கள் தலைவர் கமல்ஹாசன் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். ஆகவே, இந்தத் தேர்தல் ம.நீ.ம-வுக்கு சாதகமான தேர்தலாக அமையும்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.78 சதவிகிதம் வாக்குகள் பெற்றோம். 65 தொகுதிகளில் 8 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றோம். பெரும்பாலும் பெருநகரங்கள், சிறுநகரங்கள் என நகரங்கள் சார்ந்து எங்களுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்தது.

சி.கே.குமரவேல்
சி.கே.குமரவேல்

குறிப்பாக, 40 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்கள் மத்தியில் எங்களுக்கு பேராதரவு இருக்கிறது. இன்றைக்கு 40 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களின் கையில்தான் இந்தத் தேர்தலுக்கான பூட்டின் சாவி இருக்கிறது. ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் மாறி மாறி மக்கள் இதுவரை வாக்களித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அது நிகழும் என்று அந்தக் கட்சிகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த முறை மிகப்பெரிய மாறுதல் வரப்போகிறது.

40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக இருப்பார்கள். அவர்களுடன் அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த இளைஞர்களுக்கு தி.மு.க செய்த நல்லதும் தெரியாது; கெட்டதும் தெரியாது. அதுபோல, கடந்த பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க அரசின் எதிர்மறையான செயல்பாடுகளை அந்த இளைஞர்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே, தலைவர் கமல்ஹாசனால்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கரைவேட்டியும் கைத்தறித் துண்டும் அணிந்துகொண்டு அரசியல் செய்த காலம் முடிவுக்கு வரப்போகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றம் என்று வருகிற போது அது மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் அந்த மாற்றம் நடக்குமா என்றால் நடக்காது. 100 தொகுதிகளில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிதாகத் தேர்தல் களத்துக்கு வந்தபோது, பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் பிரதானப் போட்டி என்ற தோற்றம் இருந்தது. ஆனால், பா.ஜ.க-வுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும்தான் பிரதானப் போட்டி என்று களம் மாறியது. அதுபோல, தமிழகத்தில் தி.மு.க-வுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையேதான் பிரதானப் போட்டி என்பது இருக்கும்.

கமல்
கமல்

பிக் பாஸ் மூலம் எங்கள் தலைவர் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ஆகவே, நடிகர் என்பதைத்தாண்டி ஒரு சமூகத் தலைவராக அவர் பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவர்களுடன் தோளோடு தோள் நிற்க ம.நீ.ம தயாராக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும் அதில் ஆர்வம் இருக்கிறது. ஆனாலும், தி.மு.க கூட்டணியில் இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். வளரும் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடன் சேர்ந்து தனியாக அணி அமைக்கப்போகிறோம். அடுத்த அறுபது நாள்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்” என்றார் சி.கே.குமரவேல்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகையுடன் பேசினோம்.

``கமல் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், சாதி, மதத்துக்கு எதிரானவர், காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையில் அவரை காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணிக்கு அழைத்தார்கள். அவ்வளவுதான். மற்றபடி, கமல்ஹாசனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து கூட்டணியின் தலைமையிலான தி.மு.க-தான் முடிவெடுக்க வேண்டும்.

ஆனாலும், இப்போது மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான வாக்குகளை நகர்ப்புறங்களில் பெற்றது. அவர்களுக்கு கிராமப்புறங்களில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சியுடன் ம.நீ.ம கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், செல்வாக்குமிக்க கட்சிகளில் எந்தக் கட்சி, ம.நீ.ம கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

தி.மு.க கூட்டணியைப் பொறுத்தளவில், அது உறுதியாக இருக்கிறது. அதில், முரண்டுபாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அ.தி..மு.க கூ ட்டணியில் முரண்பாடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தே.மு.தி.க சொல்கிறது. பா.ம.க இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றும், நாங்கள்தான் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம் என்றும் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சொல்கிறார்

உள் இடஒதுக்கீடு அளித்தால்தான் கூட்டணி என்று அ.தி.மு.க-விடம் பா.ம.க கறாராகக் கூறிவிட்டது. அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசிவிட்டுவந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘கூட்டணி பற்றி பேசினோம்’ என்று சொன்னார்கள். உடனே, ‘கூட்டணி பற்றி பேசவில்லை. இடஒதுக்கீடு முடிந்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம்’ என்று அடுத்த பத்து நிமிடங்களில் டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுவிட்டார். இந்த சூழலில், பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை.

இப்படியான சூழ்நிலையில்தான், முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் என்று அறிவித்து மக்கள் நீதி மய்யம் மூன்றாவது கூட்டணிக்கு முயற்சி செய்கிறது. `நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தனியாக சுமார் நான்கு சதவிகித வாக்குகள் எடுத்திருக்கிறோம். அதனால், நம் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்’ என்று கமல் நினைக்கிறார். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.’ கமல் தலைமையிலான கூட்டணியை பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் ஏற்குமா என்பது சந்தேகம்தான். எனவே, சிறிய இயக்கங்கள், சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை கமல் ஏற்படுத்துவார்.அப்படிப்பட்ட கூட்டணி, தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை” என்றார் செல்வப்பெருந்தகை.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது அணி முயற்சி குறித்து மூத்த ஊடகவியலாளர் வீரபாண்டியனிடம் பேசினோம். ``ஆம் ஆத்மி கட்சியுடன் ம.நீ.ம கூட்டணி பேசுவதாக செய்திகள் வந்துள்ளன. டெல்லியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியுடன் கமல் கூட்டணி வைக்கிறார்கள் என்றால், அவருக்கு வலுவான கூட்டணி அமையவில்லை என்று தெரிகிறது. பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், அரசியல் ரீதியாகவும் வாக்குகள் அடிப்படையிலும் ம.நீ.ம-வுக்கு சாதகமாக இருக்கும். பல கட்சிகளுடன் கூட்டணிக்கு அவர் முயற்சி செய்திருக்கலாம். அது, பலனளிக்காததால் இப்படியொரு முடிவுக்கு கமல் வந்திருக்கலாம்.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தளவில், அதற்கு தமிழகத்தில் எந்த ஆதாரமும் களப்பின்னணியும் கிடையாது. டெல்லியில் ஒரு மாற்றம் தேவைப்பட்ட நிலையில், அர்விந்த் கெஜ்ரிவால் களமிறங்கினார். வெற்றிபெற்றார். ஆனால், அந்தக் களம் வேறு, தமிழ்நாட்டின் களம் வேறு. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதன் மூலம் ம.நீ.ம-வுக்கு என்ன பலன் கிடைத்துவிடப்போகிறது?

கெஜ்ரிவால்
கெஜ்ரிவால்

அரசியலில் ‘பொலிட்டிகல் ஃபைட்’ என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதைச் செய்தால்தான் ஒரு ‘வைப்ரண்டு லீடர்’ ஆகப் பரிமளிக்க முடியும். அதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் தொட்டிருந்தால், அது கமல்ஹாசனை நோக்கி அனைவர் பார்வையும் திரும்பியிருக்கும். அதேபோல, மக்களின் பிரச்னைகளைத் தொட்டிருந்தால், அரசியலில் அவர் உயர்ந்த இடத்துக்குப் போயிருக்கலாம். ஆனால் அவர், தங்கக்கோபுரத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்” என்றார் வீரபாண்டியன்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் 30 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றால்தான் வெற்றியைத் தொட முடியும். ஆம் ஆத்மி உள்ளிட்ட சிறிய கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்த்துக்கொண்டு எத்தனை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தால் 30 சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது!

கமல்
கமல்

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கமல்ஹாசன், ``மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன. தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்.

நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும்; கதவுகள் திறந்தே உள்ளன’’ என்றார். மேலும், வாருங்கள் பணியாற்றுவோம் என்று ரஜினிக்கு அழைப்பு விடுத்த கமல், `தலைவர்’ எனச் சொல்லும் நபர் இன்னும் நாள் தவறாது அரசியலைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அதனால் வாய்ப்பு இருக்கிறது, என் பின்னால் வாருங்கள் என்று சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என ரஜினியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு