Published:Updated:

மக்களிடம் 6 கேள்விகள்; தொகுதி வாரியாகக் கணக்கெடுப்பு!'- சட்டசபை தேர்தலுக்காக ம.நீ.ம புது வியூகம்

கமல்
கமல்

தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு பலம் பொருந்திய கட்சிகளும் தனியார் நிறுவனத்தை நம்பித்தான் இந்தத் தேர்தலை சந்திக்கப்போகின்றன. ஆனால், நாங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். உண்மையான ஜனநாயக அரசு, மக்களால் மக்களுக்காக, மக்களிடம் இருந்துதான் என்பதை மக்கள் நீதி மையம் முழுமையாக நம்புகிறது.

தமிழகத்தில் கொரோனா விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரும் வீதியில் இறங்கி கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், சத்தமே இல்லாமல் ஊரடங்கு நேரத்தை அரசியல் களத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல். அதுவும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக அரசியல் நகர்வுகளை அரங்கேற்றத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, மக்களின் பல்ஸ் பார்க்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் உள்விவகாரம் அறிந்தவர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஸ்டாலின்,  பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே காலம் உள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்காக தி.மு.க தரப்பில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமோடு கைகோத்து, அதற்கான வேலையில் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது. அ.தி.மு.க தரப்பில் எடப்பாடியின் மகன் மிதுன், டெல்லியிலிருந்து ஒரு டீமை அழைத்துவந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் முறையாக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க உள்ள நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தை தேர்தலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என்பது தான் அரசியல் ஹாட். தொகுதி வாரியாக கணக்கெடுப்புப் பணியைத் துரிதமாக நடத்திவருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்

அதுவும், தற்போது உள்ள எம்.எல்.ஏ-வின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்றும் எத்தனை முறை நீங்கள் ஓட்டு போட்டுள் ளீர்கள், ஓட்டு போடுவதற்கான காரணம், முக்கியத்துவம் கொடுப்பது கட்சிக்காகவா அல்லது வேட்பாளருக்கா, கட்சியின் தலைமையிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான முக்கியக் காரணங்கள் என்ன? என 6 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னைகளையும் மேற்கோள்காட்டி கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த கணக்கெடுப்பை ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கமல் நடத்திவருகிறார் என்றும், இதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன என்றும் அக்கட்சி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். மேலும், தேர்தலின்போது திராவிட கட்சிகளுக்கு சவால்விடும் வகையில், மாவட்ட வாரியாக தகவல் தொழில்நுட்ப அணியை மக்கள் நீதி மையம் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தொகுதி வாரியாக தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மக்கள் நீதி மையத்தின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். “நாங்கள் தனியார் நிறுவனத்தை நாடி மக்களிடம் கருத்துகளைக் கேட்கவில்லை. எங்களது நிர்வாகிகளை வைத்து சர்வே எடுத்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் தவறு இல்லையே. தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு பலம் பொருந்திய கட்சிகளும் தனியார் நிறுவனத்தை நம்பித்தான் இந்த தேர்தலை சந்திக்கப்போகின்றன.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

ஆனால், நாங்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். உண்மையான ஜனநாயக அரசு, மக்களால் மக்களுக்காக, மக்களிடம் இருந்துதான் என்பதை மக்கள் நீதி மையம் முழுமையாக நம்புகிறது. எனவே, மக்கள் ஆட்சி அதிகாரத்தை மக்களிடமே வழங்கி, நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த மதிப்பாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தங்கள் பகுதி பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் காட்டலாம். மக்கள் அளிக்கும் தகவல்கள், அவர்கள் விரும்பும் வகையில் நிர்வாகம் அமைய உதவும். மற்ற கட்சியில் உள்ளவர்கள் பணம், பெயர் சம்பாதிப்பதற்காக கட்சிக்குள் வருவார்கள். ஆனால், எங்கள் தலைவர் அப்படி இல்லை. அவர் எல்லாவற்றையுமே திரைத்துறையில் சம்பாதித்துவிட்டார்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு