Published:Updated:

எ.வ.வேலுவுக்குப் புதிய பதவி?! - கோவைக் கூட்டத்தைப் புறக்கணித்த கனிமொழி

கனிமொழி
கனிமொழி

கோவையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நிர்வாகிகள் சிலர் கனிமொழியிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்தவர், `இந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியாது. பிறகு வருகிறேன்' எனக் கூறிவிட்டார்.

தி.மு.க-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கூட்டம் கோவையில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பங்கேற்காதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் பலவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க தலைவர் ஸ்டாலினும், டி.ஆர்.பாலு தலைமையில் எட்டு பேர்கொண்ட குழுவை அமைத்திருக்கிறார். இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தக் குழுவினர், இன்று முதல் இரண்டு மாத காலம் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

டி.ஆர்.பாலு, கனிமொழி
டி.ஆர்.பாலு, கனிமொழி

இந்தப் பயணத்தின்போது, விவசாயப் பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெறவிருக்கிறார்கள். அதன் பிறகு 2021 ஜனவரி மாதம் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து, பிப்ரவரி முதல் வாரம் தி.மு.க தலைமையிடம் சமர்ப்பிக்கவிருக்கிறார்கள். இது தொடர்பாக, மாவட்டங்களில் நடக்கும் சுற்றுப்பயண விவரங்களையும் அறிவாலயம் வெளியிட்டது. இந்தநிலையில், இன்று கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

`ட்ரெண்டிங்' கனிமொழி... `டேட்டா' பிரசாந்த் கிஷோர் மீது கடுப்பில் ஸ்டாலின்?!

இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு உட்பட அனைவருமே இடம்பெற்றிருந்தனர். ஆனால், கனிமொழி மட்டும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர்கள், `` தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறார் கனிமொழி. தேர்தல் அறிக்கை தயாரிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி. இதையொட்டி, கோவையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து நிர்வாகிகள் சிலர் கனிமொழியிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்தவர், `இந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியாது. பிறகு வருகிறேன்' எனக் கூறிவிட்டார். கனிமொழி நினைத்திருந்தால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம். அவர் கலந்து கொள்ளாததற்கு வேறு சில காரணங்கள் உள்ளன" என விவரித்தவர்கள்,

ஸ்டாலின் - எ.வ.வேலு
ஸ்டாலின் - எ.வ.வேலு

`` தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும், துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்ட நேரத்தில், தனக்கும் எதாவது ஒரு பொறுப்பு வரும் எனக் காத்திருந்தார் திருவண்ணாமலை தெற்கு மா.செ எ.வ.வேலு. புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் தன்னைப் புறக்கணித்ததில் அவர் அதிருப்தியோடு இருந்தார். அவரைச் சமாதானம் செய்யும் நோக்கில், தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் என்ற பதவியை உருவாக்கியிருக்கிறார்கள்.

அண்மையில் தென்மாவட்ட பகுதிக் கழக நிர்வாகிகளிடம் தி.மு.க தலைவர் காணொலியில் பேசியபோதும், எ.வ.வேலு உடன் இருந்தார். அப்போது நெல்லை மாவட்ட நிர்வாகி ஒருவர் பேச்சுக்கு பதில் அளித்த வேலு, `விரைவில் அங்கு வருகிறேன்' என்றார். அப்போதே, ஏதோ நடக்கப் போகிறது என நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். விரைவில் தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்படலாம். இப்படியொரு நியமனத்தில் கனிமொழிக்கு உடன்பாடில்லை. அந்தக் கோபத்தைக் காட்டும் வகையிலேயே இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்தார்" என்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு