Published:Updated:

`தூத்துக்குடியைச் சூழ்ந்த வெள்ளம்; தவித்த மக்கள்!' - களமிறங்கி உதவிய கனிமொழி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மாவட்ட எம்.பி கனிமொழி கடந்த சில நாள்களாகக் களமிறங்கி நிலைமையை சரிசெய்வது சமூக ஊடகங்களிலும் மாவட்ட மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

களத்தில் கனிமொழி
களத்தில் கனிமொழி

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்து தீவுபோல் காட்சியளிக்கின்ற விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன், உடனடியாகக் களமிறங்கிய எம்.பி கனிமொழி, வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பதுடன், கடலில் காணாமல்போன 38 மீனவர்களையும் மத்திய அரசு உதவியுடன் அவர் மீட்டிருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.

கனிமொழி
கனிமொழி
கனிமொழி
கனிமொழி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க மாநில மகளிரணி நிர்வாகி ஒருவர், ``கடந்த மாதம் கடலில் மீன்பிடிக்க 5 படகுகளில் சென்ற தருவைக்குளம் மீனவர்கள், புயல் காற்றில் சிக்கி காணாமல் போயினர். அவர்களின் குடும்பத்தினர் தவித்த வேளையில், உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடர்புகொண்ட கனிமொழி, மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாகக் கடலோரப் பாதுகாப்புப் படையைக் களமிறக்கிய மத்திய அரசு, 38 மீனவர்களை மீட்டு பத்திரமாகக் கரைக்கு கொண்டுவந்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி சின்னக்கன்னுபுரம், பழைய பேருந்து நிலையம், வெற்றிவேல் நகர் பகுதிகளில் நேரடியாக விசிட் அடித்து, வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். வெற்றிவேல் நகரில் அவரது கார் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் சூழ்ந்துவிட்டது. யோசிக்காமல் காரைவிட்டு இறங்கியவர், முட்டியளவு நீரில் நடந்தபடி மக்களுக்கு தைரியமூட்டியதுடன், சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்.

கனிமொழி
கனிமொழி
கனிமொழி
கனிமொழி
கனிமொழி
கனிமொழி

மீளவட்டான் சாலைப் பகுதியிலுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் வடியாமல் இருந்தது. கனிமொழி களத்துக்கு வந்தபின்னர்தான், மின்னல் வேகத்தில் தூர் வாரி மழைநீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஆலந்தலை, வீரபாண்டியப்பட்டினம் பகுதிகளில் ஏற்பட்ட கடல் அரிப்பையும் நேரடியாகப் பார்வையிட்டு, மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக உறுதி தெரிவித்தார்” என்றவரிடம், ``எல்லா எம்.பி-யும் செய்ய வேண்டிய பணியைத் தானே கனிமொழியும் செய்கிறார்?” என்றோம்.

``கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும்தான் மழை பாதித்துள்ளது. இதுவரையில், அம்மாவட்ட எம்.பி-க்கள் யாரும் நேரடியாகக் களமிறங்கவில்லையே. மூன்று நாள்களாகக் கனிமொழி களத்தில் இருக்கிறார். மக்களை நேரில் சந்தித்து தைரியமூட்டுகிறார். ஒரு அரசியல்வாதி தவறு செய்யும்போது எப்படிக் கண்டிக்கின்றோமோ, அதேபோல நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும். மக்கள் தலைவியாகக் கனிமொழியை வரவேற்பதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

கனிமொழி
கனிமொழி

வெற்றிவேல் நகரில் தீயணைப்பு வீரர்களிடம் சீரமைப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்த கனிமொழி, ``சாப்டுட்டு வேலையைப் பாருங்க. நீங்க நல்லா இருந்தாதான், மக்கள் நல்லா இருக்க முடியும்” என்றாராம். நெகிழ்ந்துபோன தீயணைப்பு வீரர்கள் அவரது பேச்சை வீடியோவாக எடுத்து தங்களது வாட்ஸ் அப் குரூப்புகளில் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கனிமொழியின் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்குப் பாராட்டுகள் குவிகிறது.