Published:Updated:

`மு.க.அழகிரி மீது கருணாநிதி எடுத்த நிலைப்பாடு தொடர்கிறது!’ - கனிமொழி

கனிமொழி
கனிமொழி

``தி.மு.க., அதன் தலைமைத் தொண்டர்களுடன் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறது. தி.மு.க-வை வேறொரு நிறுவனம் மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் காலத்துக்கு ஏற்றாற்போல் டெக்னாலஜியைப் பயன்படுத்த சில நிறுவனங்கள் பணியாற்றுகின்றன" என்று முடித்தார் கனிமொழி.

`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் இரண்டு நாள்கள் மேற்கொண்டிருக்கும் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி, மதுரையில் பல இடங்களில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசினார். நகரில் நிறைவடையாமல் இருக்கும் திட்டப்பணிகளைப் பார்வையிட்டார். தெருவோரக் கடையில் டீ குடித்தார். மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கனிமொழி
கனிமொழி

முன்னதாக ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``மதுரையில் காலையிலிருந்து பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். ஆட்சி மாற்றத்தைக் காண மக்கள் தயாராக இருப்பது தெரிகிறது. 10 ஆண்டுகளாக இந்த ஆட்சி பொதுமக்களுக்கு எதையும் செய்யவில்லை. புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை" என்றவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

``கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை பழனிசாமி அரசு ரத்து செய்திருக்கிறதே?" என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ``விவசாயிகளுக்கு வேண்டாத வேளாண் திட்டங்களையும், சட்டங்களையும் வரவேற்கும் இந்த ஆட்சியாளர்கள், எப்படி விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுவருவார்கள்? விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். `ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம்’ என்று ஜனவரி மாதம் உறுதி அளித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியோ, இப்போதுதான் கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி என்கிறார். எல்லாமே வெற்று அறிவிப்புகள்தான்” என்றார்.

சாலையோரக் கடையில் டீ குடித்த கனிமொழி
சாலையோரக் கடையில் டீ குடித்த கனிமொழி

`` `எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது’ என்று முதல்வர் சொல்கிறாரே?"


``இந்தத் தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வருவார்கள், வர முடியாது என்பது தெரியும். அடுத்து வருவது தி.மு.க ஆட்சிதான். தளபதி ஸ்டாலின் முதலமைச்சர்தான்.’’

``சசிகலா, தி.மு.க-வின் பி டீம் என அ.தி.மு.க அமைச்சர்கள் கூறுகிறார்களே?"


``இதே சசிகலாவை சின்னம்மா இல்லை, அம்மா என்று இதற்கு முன்பு கூறினார்கள். தற்போது உடல்நலம் குறைந்து வந்திருப்பவரைப் பற்றி எப்படிச் சொல்கிறார்கள்..? இவர்கள் பா.ஜ.க-வின் பி டீமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள், நேரடியாக அரசியல் செய்துகொண்டிருப்பவர்கள்."

பொதுக்கூட்டத்தில்...
பொதுக்கூட்டத்தில்...

`` `மக்களுக்கு நாங்கள் செய்த திட்டங்களைச் சொல்லி, தேர்தலைச் சந்திப்போம். தி.மு.க-வினர் எதைச் சொல்லி மக்களைச் சந்திப்பார்கள்’ என்று அ.தி.மு.க அமைச்சர்கள் கேட்கிறார்களே....’’ எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த கனிமொழி, ``செய்யாத விஷயங்களைச் செய்ததாகச் சொல்லி பத்திரிகைகளில் போலியாக விளம்பரம் செய்துவருகின்றனர். எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. ஆனால், செய்யாததையெல்லாம் செய்ததாகக் கூறுகிறார்கள். நாங்கள் மக்களிடம் 10 ஆண்டுகளுக்கு முன்னால் தி.முக ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லி வருகிறோம். தி.மு.க வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது. மதுரை மக்களுக்காகப் பல திட்டங்களை அறிவித்தவர்கள், ஏதாவது ஒன்றைச் செய்து முடித்திருக்கிறார்களா? அடிக்கல் நாட்டுகிறார்கள், அறிவிக்கிறார்கள். ஆனால், எதையும் செய்து முடித்த சரித்திரம் கிடையாது” என்றார்.

மதுரையில் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்தல் பிரசாரம்! #Election2021

``தற்போது ஆட்சியில் இல்லை என்பதால் ஸ்டாலின் மனுக்கள் வாங்கிக்கொண்டிருக்கிறார் என்கிறார்களே...’’

``ஆட்சிக்கு வந்தவுடன், 100 நாள்களில் செய்து முடிப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார். தலைவர் கலைஞர் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏழாயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என்றார். இதை வெற்று வாக்குறுதி என்றார்கள். கொடுத்த வாக்குறுதியை வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றினார். அதேபோல ஸ்டாலின் முதல்வரானவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். ஆட்சி மாற்றத்தைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை இவர்கள் தொடரவில்லை. மக்கள் அ.தி.மு.க ஆட்சியை வேண்டாம் என்கிறார்கள். ரேஷன் கடையில் பொருள்கள் இல்லை, சுயஉதவிக் குழு நிதி கிடையாது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; பொள்ளாச்சி உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் நியாயம் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. காவல்துறையில் புகார் கொடுத்தாலும் சரியான நடவடிக்கைகள் இல்லை’’ என்றவரிடம்,

கனிமொழி
கனிமொழி

``வரும் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை ஹீரோவாக இருக்குமா?" என்றதற்கு, ``வரும் தேர்தலில், தி.மு.க தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் இரண்டு கதாநாயகர்களாக இருப்பார்கள். தென் தமிழகம் முன்னேறும் வகையில் எந்தத் திட்டத்தையும் இந்த ஆட்சி கொண்டு வரவில்லை. தி.மு.க ஆட்சியில் கொண்டுவருவோம்" என்றார்.

``தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டலச் செயலாளர் மு.க.அழகிரி மீதான தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன?’’

``மு.க.அழகிரி மீது கருணாநிதி எடுத்த நிலைப்பாடு தொடர்கிறது. அதைத் தாண்டி வேறு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படித் தேவைப்பட்டால் ஸ்டாலின் எடுப்பார்'' என்றார்.

``தி.மு.க வெற்றி பெற்றால் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என்று அ.தி.மு.க-வினர் கூறுகிறார்களே?" என்றதற்கு, ``இதன் மூலம் பா.ஜ.க மோசமான கட்சி என்று அவர்களே கூறுகிறார்கள்’’ என்று கூறிவிட்டுக் கிளம்பியவரிடம்,

மக்களிடம் பிரசாரம்
மக்களிடம் பிரசாரம்

``அ.தி.மு.க கூட்டணியிலுள்ள சில கட்சிகள் தி.மு.க அணிக்கு வர வாய்ப்பிருக்கிறதா... பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறதே...’’ என்றோம்.


``தேர்தல் நேரத்தில் கூட்டணிகளுக்குள் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆரூடங்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். இந்தக் கூட்டணி தொடரும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்’’ என்றார்.

``ஐபேக் நிறுவனத்தால் கட்சி நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் இடைவெளி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே... தி.மு.க போன்ற மக்கள் அறிந்த கட்சிக்கு பிராண்டிங் பண்ண வேண்டிய அவசியம் என்ன?’’ என்ற கேள்விக்கு,

கனிமொழி
கனிமொழி

``தி.மு.க., அதன் தலைமைத் தொண்டர்களுடன் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறது. தி.மு.க-வை வேறொரு நிறுவனம் மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், காலத்துக்கு ஏற்றாற்போல் டெக்னாலஜியைப் பயன்படுத்த சில நிறுவனங்கள் பணியாற்றுகின்றன" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு