Published:Updated:

தூத்துக்குடி: கடலில் மீண்டும் மீண்டும் உருவாகும் மணல்திட்டு! - படகில் சென்று கனிமொழி ஆய்வு

கடலுக்குள் படகில் ஆய்வு செய்த கனிமொழி
கடலுக்குள் படகில் ஆய்வு செய்த கனிமொழி

தூத்துக்குடி மணப்பாடு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை கடலுக்குள் சிறிது தூரம் படகில் சென்று பார்வையிட்டார் கனிமொழி. அடிக்கடி மணல்திட்டுகள் உருவாவதால், தூண்டில் வளைவு அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வு என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் மணப்பாடு வரை 20-க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில், திருச்செந்தூர் அருகிலுள்ள மணப்பாடு, மூன்று புறமும் கடலால் சூழப்பட்டு தீவுபோலக் காட்சியளிக்கும். உயரமான மணல் மேடுகள், தேவாலயம், எழில்மிகு கடல் எனக் காட்சியளிக்கும் இந்தக் கடற்கரையை உலகறியச் செய்தது திரைப்படங்கள்தான். எந்த அளவுக்கு அழகு நிறைந்ததோ அதே அளவுக்கு ஆபத்துகளையும் கொண்டது இந்தக் கடல். ஒருபுறம் அமைதியாகவும், மறுபுறம் ஆர்ப்பரிப்புடனும் காணப்படுகிறது மணப்பாடு கடல். அமைதியான கடல் பகுதி வழியாகத்தான் மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்று வருவது வழக்கம்.

மணப்பாடு கடற்கரை
மணப்பாடு கடற்கரை

இந்தப் பகுதியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழில் செய்துவருகிறார்கள். பருவ மாற்றத்தால், இந்தப் பகுதியில் அதிகமான மணல் திட்டுகள் ஏற்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், தூண்டில் பாலம் அமைத்துத்தர, மீனவர்கள் வலியுறுத்திவந்தனர். இங்கு தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என திருச்செந்தூர் தொகுதி தி,மு.க எம்.எல்.ஏவான அனிதா ராதாகிருஷ்ணனும் ஏற்கெனவே சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். கனிமொழி எம்.பி-யிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகிலுள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில், கலந்துகொள்வதற்காக தூத்துக்குடியிலிருந்து தண்டுபத்து சென்றபோது, மணப்பாடு கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் எம்.பி கனிமொழி. அப்போது மீனவர்கள் மணல்திட்டுகளால் மீன்பிடிப்பதிலுள்ள சிரமங்கள் குறித்து விளக்கியதுடன், தூண்டில் பாலம் அமைப்பது ஒன்றே நிரந்தர தீர்வாகும் எனக்கூறினர். பின்னர், மீனவர் ஒருவரின் படகில் ஏறிய கனிமொழி, முகத்துவாரம் வரை படகில் சென்று மணல் திட்டுகளைப் பார்வையிட்டார்.

படகில் சென்ற கனிமொழி
படகில் சென்ற கனிமொழி

பின்னர், இது குறித்து ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அமைச்சரிடமும் தூண்டில் பாலம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பேசுவதாகக் கூறினார். இது குறித்து அப்பகுதி மீனவர்களிடம் பேசினோம். ``கடலின் முகத்துவாரத்துக்கும் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிக்குமிடையே மணல் திட்டுகள் ஏற்படுவதால், படகை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடுமையாகப் போராடிவருகிறோம். இதனால், முகத்துவாரத்தை அடிக்கடி மாற்றிவந்தோம்.

இருப்பினும், மணல் திட்டுகள் அதிகரித்துவருகின்றன. படகைக் கயிறு கட்டி டிராக்டர் மூலம் கடலுக்குள் செலுத்தி மீன்பிடிக்கச் சென்றுவருகிறோம். அவ்வாறு படகுகளை கடலுக்குள் செலுத்தும்போது தரையில் உராய்வு ஏற்பட்டு, படகுகள் கடுமையாகச் சேதாரம் ஆகின்றன. இதனால், வீண் பண விரயமும் ஆகிறது. படகைச் செலுத்தும் நேரத்தில், காற்றின் அதிக தாக்கத்த்தால் சில சமயங்களில் படகு கவிழ்ந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. மணல் திட்டுகளை அகற்றினாலும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் திட்டுகள் உருவாகிவிடுகின்றன.

படகில் சென்ற கனிமொழி
படகில் சென்ற கனிமொழி

இதற்கு நிரந்தர தீர்வு தூண்டில் பாலம் அமைப்பது மட்டும்தான். ஏற்கெனவே பலமுறை இது குறித்து மனுக்களை அளித்திருக்கிறோம். தற்போது எம்.பி நேரில் வந்து விசாரித்ததுடன், படகில் ஏறி முகத்துவாரப் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை பார்வையிட்டார்கள். தூண்டில் பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். தூண்டில் பாலத்துக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு