Published:Updated:

”மழை வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி!”- களத்தில் இறங்கிய கனிமொழி

மழைநீர் தேங்கிய பகுதியை ஆய்வு செய்த கனிமொழி
மழைநீர் தேங்கிய பகுதியை ஆய்வு செய்த கனிமொழி

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியப் பகுதிகளை ஆய்வு செய்த எம்.பி., கனிமொழியை, மக்கள் சூழ்ந்ததுடன் மழைநீர் தேங்கியுள்ள பகுதிக்குள் அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், அடியோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்தும் பாதிப்பு அடைந்துள்ளது. தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து 28,500 கன அடி நீர் கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில்,

கனிமொழி
கனிமொழி

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எழில்நகர், குமரன்நகர், கோவில்பிள்ளை நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது, அவரைச் சூழ்ந்த அப்பகுதி மக்கள், ”ரோட்டுல நின்னு பார்த்தா எப்படி மழைநீர் தேங்கியது தெரியும். தெருவுக்குள்ள வந்து பார்த்தாதானே எவ்வளவு தண்ணீர் கெட்டிக் கிடக்குதுன்னு தெரியும்.. வாங்கம்மா..” எனச் சொல்லி தெருவுக்குள் அழைத்துச் சென்றனர். எந்த யோசனையுமின்றி நடந்தார் கனிமொழி. ”ஒருநாள் பெய்த மழைக்கே வீடுகளுக்குள்ளயெல்லாம் தண்ணீர் வந்துடுச்சு. தண்ணீரை வடிக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலை” என்றனர். சில பகுதிகளில் மக்கள் ஆவேசமாகப் பேசினாலும் அதைப் அவர் பொருட்படுத்தவில்லை. ”தற்போதைய அ.தி.மு.க அரசு மீதுள்ள கோபத்தையே மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்” என சிரித்தபடி கூறிச் சென்றார்.

கனிமொழி
கனிமொழி

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன், தண்ணீரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அடுத்ததாக எடுக்கப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எம்.பி., கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை சரியாக நிறைவேற்றி இருந்தாலே, மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் மக்களை பாதுகாத்திருக்க முடியும்.

கனிமொழி
கனிமொழி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிகமாக கூடுதலாக தங்குமிடங்கள் அமைத்திடவும், தேங்கிய மழை வெள்ள நீரை வெளியேற்ற கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர், ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளேன். தற்போதைய அ.தி.மு.க அரசு, மழைக்காலத்திற்கு தேவையான எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் பேசினோம், “மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றிட மாநகராட்சிக்குச் சொந்தமான நீர் உறிஞ்சும் இயந்திரங்களுடன், தனியாருக்குச் சொந்தமான 10 நீர் உறிஞ்சும் இயந்திரங்களும் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்தும் இயந்திரங்கள் வரவழைக்கபட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பாதிக்கப்படும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ள 37 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கனிமொழி
கனிமொழி

தொடர் கனமழையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது” என்றார். ”போன மாசம் தூத்துக்குடியில் இதே போல கனமழையின் பெய்தப்போ, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட எம்பிக்கள் யாரும் நேரடியாகக் களத்தில் இறங்கத நிலையில் மூன்று நாளாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவியது நீங்கதான்” என்பதையும் ஆய்வின் போது பலர் மறக்கமால் நினைவு கூர்ந்துப் பேசியதையும் பார்க்க முடிந்தது.

அடுத்த கட்டுரைக்கு