Published:Updated:

மைசூர்பாகு பற்றி ஒரே ஒரு ட்வீட்...! - கொந்தளித்த கர்நாடகா!

ஆனந்த் ரங்கராஜனின் ட்விட்டர் பதிவை அடிப்படையாகக் கொண்டு, கன்னட ஊடகங்கள் மைசூர் பாகுவுக்கு தமிழகம் புவிசார் குறியீடு பெற்றுவிட்டதாகச் செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பின.

Mysurpa
Mysurpa

பெயரிலேயே மைசூர் ஒட்டியிருப்பதால், மைசூரைச் சேர்ந்தது மைசூர் பாகு என்றுதானே நினைப்போம். இரு நாள்களுக்கு முன், ஆனந்த் ரங்கராஜன் என்ற எழுத்தாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் மைசூர் பாகுவுக்குத் தமிழகம் புவிசார் குறியீடு பெற்றிருப்பதாகக் கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனந்த் ரங்கராஜன்
ஆனந்த் ரங்கராஜன்

அதற்குச் சான்றாக 1835-ல் செய்தித்தாளில் வந்த செய்தியைப் பதிவிட்டிருந்தார். ராபர்ட் மெகலே என்ற ஆங்கிலேய அதிகாரியிடம், பெங்களூரூவில் வசித்த கிரின்க்லிபாதம் என்ற மற்றோர் ஆங்கிலேய அதிகாரி இந்தத் தகவலைக் கூறியதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

விஷயம் என்னவென்றால், ``இந்தச் சுவைமிக்க பலகாரம், தமிழர்களின் கண்டுபிடிப்பு. மெட்ராஸ் நகரத்தில் இந்தப் பலகாரம் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்டது. மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணிபுரிந்தவர் மெட்ராஸ் சென்று இந்தப் பலகாரத்தைத் தயாரிக்கும் முறையை அறிந்துகொண்டார். பின்னர், மைசூர் அரண்மனையில் தயாரித்தார். அதற்கு, நயவஞ்சகமாக `மைசூர்பாகு' என்று பெயர் சூட்டிக்கொண்டனர்'' என்று சொல்லப்பட்டிருந்தது.

உடனடியாக, ஆனந்த் ரங்கராஜனின் ட்விட்டர் பதிவை அடிப்படையாகக் கொண்டு, கன்னட ஊடகங்கள் மைசூர் பாகுவுக்குத் தமிழகம் புவிசார் குறியீடு பெற்றுவிட்டதாகச் செய்திகளைத் தொடர்ந்து ஒளிபரப்பின.

மைசூர்பாகு பற்றி ஒரே ஒரு ட்வீட்...! - கொந்தளித்த கர்நாடகா!

வழக்கம்போல, வாட்டாள் நாகராஜ் கொதித்து எழுந்தார். ``காவிரியைத் தடுப்பதுபோல மைசூர் பாகுவை தமிழகத்துக்குக் கொண்டுசெல்ல முடியாமல் தடுப்போம். நாங்களே அத்தனை மைசூர் பாகுவையும் சாப்பிடுவோம். மைசூர் பாகுவுக்கு மாற்றுப் பெயரே கிடையாது" என்று கொந்தளித்தார்.

பின்னர், ஆனந்த் ரங்கராஜன் காமெடிக்காக இந்த விஷயத்தைச் செய்ததற்காகவும் தன் ட்வீட்டுக்காகவும் மன்னிப்புக் கேட்டார். ஆனால், ஆனந்த் ரங்கராஜை கைதுசெய்ய வேண்டுமென்று சில கன்னட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.