Published:Updated:

``இப்பவும் என் மனைவி 100 நாள் வேலைக்குப் போவாங்க" - வியக்கவைக்கும் கந்தர்வகோட்டை கம்யூனிஸ்ட் எம்எல்ஏ

எம்.எல்.ஏ சின்னதுரை

``உன்னோட வீட்டுக்காரரு எம்.எல்.ஏ-வுக்கு நிக்குறாரு. நீ என்னடான்னா நூறு நாள் வேலைக்கு வந்துக்கிட்டு கெடக்கே என்று எல்லாரும் கேலியும் கிண்டலும் பண்றாங்கன்னு என் மனைவி சொன்னுச்சு.அவங்க சொன்னா, சொல்லிட்டுப் போகட்டும் நீ எதையும் கண்டுக்காம வேலைக்குப் போன்னு சொன்னேன்.’’

``இப்பவும் என் மனைவி 100 நாள் வேலைக்குப் போவாங்க" - வியக்கவைக்கும் கந்தர்வகோட்டை கம்யூனிஸ்ட் எம்எல்ஏ

``உன்னோட வீட்டுக்காரரு எம்.எல்.ஏ-வுக்கு நிக்குறாரு. நீ என்னடான்னா நூறு நாள் வேலைக்கு வந்துக்கிட்டு கெடக்கே என்று எல்லாரும் கேலியும் கிண்டலும் பண்றாங்கன்னு என் மனைவி சொன்னுச்சு.அவங்க சொன்னா, சொல்லிட்டுப் போகட்டும் நீ எதையும் கண்டுக்காம வேலைக்குப் போன்னு சொன்னேன்.’’

Published:Updated:
எம்.எல்.ஏ சின்னதுரை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் சின்னதுரை. மார்க்சிஸ்ட் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாகப் பல்வேறு பதவிகளை வகித்த இவருக்கு இரண்டாவது முறையாக கந்தர்வகோட்டை தொகுதியில் தி,மு.க கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது சி.பி.எம் கட்சித் தலைமை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் சி.பி.எம் எம்.எல்.ஏ என்ற வரலாற்றுப் பெருமையை அந்தக் கட்சிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதில் ஒரு ஆச்சர்யம் என்வென்றால், 35ஆண்டுகள் கட்சியில் மாவட்டச் செயலாளர் உட்பட பல முக்கியப் பொறுப்புகள் வகித்தும், தன் பெயரில் ஒரு குழி நிலம்கூட இல்லை என்கிறார் சின்னதுரை.

வெற்றிச் சான்றிதழ் பெறும் சின்னதுரை
வெற்றிச் சான்றிதழ் பெறும் சின்னதுரை

ஆங்காங்கே விரிசல் விழுந்த ஓட்டு வீட்டுக்குள் வசிக்கிறது இவரது குடும்பம். பேங்க் பேலன்ஸ் எதுவும் இல்லை. இவரது மனைவி அணிந்திருக்கும் தாலி, தோடு, வீட்டில் நிற்கும் இரண்டு ஆட்டுக்குட்டிகள்தான் இவர்களது சொத்து. எப்போதும், மிகவும் எளிமையானவராக வலம்வந்த சின்னதுரையை கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கின்றனர் மக்கள். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரைவிடவும் 12,721வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எளிமையான வேட்பாளரான சின்னதுரையின் வெற்றிக்குக் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்றி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சின்னதுரை எம்.எல்.ஏ-விடம் பேசினோம், ``எங்க குடும்பப் பின்னணியைப் பொறுத்தவரை என்னைத் தவிர வேறு யாரும் தீவிர அரசியலில் இல்லை. அன்னிக்கு நான் வேலை பார்த்த கம்பெனியில, ரூ.10 கூலி உயர்த்திக் கேட்டதால, உயர்த்திக் கேட்ட எல்லாரையும் வேலையைவிட்டு நிறுத்திட்டாங்க. அப்பதான் சி.ஐ.டி.யூ என்கிற அமைப்பு எங்களுக்காகப் போராடுச்சு. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாங்க கேட்டது கிடைச்சுது. இந்த மாதிரி அமைப்புல இருந்தா எங்களை மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு உதவ முடியும்னு நெனச்சுதான் 1985-ல கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்.

நான் சேர்ந்த புதுசல ஒரு கூட்டம் போட்டிருந்தாங்க. கூட்டம் முடிவில் திடீர்னு, என்னை மாவட்டச் செயலாளராக நியமிச்சிட்டாங்க. நான் கொஞ்சம்கூட அதை எதிர்பார்க்கலை. அதிர்ச்சியிலிருந்து மீளாத எனக்கு அன்னைக்கு நைட் ஜுரமே வந்திடுச்சு. ஆனா கொடுத்த பொறுப்பைச் சரியா செஞ்சு கிட்டத்தட்ட 12 வருஷம் மாவட்டச் செயலாளராக இருந்தேன். சொத்துக் கணக்கு காட்டும்போது என்னை நல்லா தெரிஞ்ச சிலரே, ``எத்தனையோ வருஷமா கட்சியில இருந்திருக்கீங்க. உங்க பேர்ல ஒரு குழி இடம்கூட இல்லையா?"ன்னு என்னிடம் ஆச்சர்யமா கேட்டாங்க. பணத்தைச் சம்பாதிக்கலைன்னாலும், இந்த ஜனத்தை சம்பாதிச்சிருக்கிறேன்னு சொன்னேன். அதை இன்னைக்கு மக்கள் நிறைவேத்திக் காட்டிட்டாங்க. இப்பவும் மனைவிகிட்ட தாலி, தோடுன்னு ஒரு பவுன், நாலு ஆட்டுக்குட்டிகளும்தான் எங்களோட சொத்து. இனியும் எதையும் பெருசா மாத்த மாட்டேன்.

சி.பி.எம் எம்.எல்.ஏ சின்னதுரை
சி.பி.எம் எம்.எல்.ஏ சின்னதுரை

மனைவி நூறு நாள் வேலைக்குப் போகும். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் ஒரு நாள் என்னோட மனைவி, `உன்னோட வீட்டுக்காரரு எம்.எல்.ஏ-வுக்கு நிக்குறாரு. நீ என்னடான்னா சாந்து சட்டியை தூக்கிக்கிட்டு நூறு நாள் வேலைக்கு வந்துக்கிட்டு கெடக்கே' என்று எல்லாரும் கேலியும், கிண்டலும் பண்றாங்கன்னு சொன்னுச்சு. அப்போ, நான் `அவங்க சொன்னா, சொல்லிட்டுப் போகட்டும் நீ எதையும் கண்டுக்காம வேலைக்குப் போ’ன்னு சொன்னேன். இப்போ எம்.எல்.ஏ., உங்க மனைவியை நீங்க நூறு நாள் வேலைக்குப் போகச் சொல்வீங்களான்னு கேட்கிறாங்க. அப்ப மாதிரிதான் இப்பவும் கிண்டல் பண்ணுவாங்க. இப்பவும் கண்டிப்பாக நூறு நாள் வேலைக்குப் போகத்தான் சொல்வேன் என்று கூறினேன். இதுவரை கட்சியிலிருந்து என்னால் முடிந்த நன்மைகளை பொதுமக்களுக்கு செய்துவிட்டேன். இப்போ, எம்.எல்.ஏ-ங்கிற பொறுப்பு கிடைச்சிருக்கு. அன்னைக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தப்போ இரவு ஜுரம் வந்திருச்சு. இன்னைக்கு எம்.எல்.ஏ பதவி கிடைச்சிருக்கு. ஜுரம் ஏதுமில்லை. அனுபவத்தால் ஏராளமான நம்பிக்கை கிடைச்சிருக்கு. இப்போதைக்கு எம்.எல்.ஏ-வாக தொகுதி மக்களுக்காக சர்வீஸ் செய்யணும். அது மட்டும்தான் நோக்கம்" என்கிறார் உற்சாகமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism